மகரிஷி கவியோகி

இலக்கியம் கட்டுரைகள்

 

( அரும்பாவூர் மு. சாஹிரா பானு )

  பன்மொழிப் புலமை, தமிழ்க்கவிதை, நாடகம், புனைகதை, இலக்கிய விளக்கம், வாழ்க்கை வரலாறு, கல்வி, அறிவியல், ஆன்மீகம், இதழியல் எனப்பல துறைகளில் சாதனை படைத்தவர் கவியோகி சுத்தானந்த பாரதியார். “மொழிபெயர்ப்புத் துறை முன்னோடிகளுள் ஒருவர்” என்னும் பெருமையும் இவருக்குண்டு.

வாழ்க்கையில் நம்பிக்கையூட்டக் கூடியதும் தொழில் சார்ந்ததுமான செய்முறைக் கல்விக் கொள்கையை வகுத்துத் தந்தவர் சுத்தானந்தர். அக்கல்வி தாய்மொழி வாயிலாகவே அமைய வேண்டும் என்பதை வலியுறுத்திக் கூறினார். இவரின் இயற்பெயர் வேங்கட சுப்ரமணியன்.

ஐந்து வயதில் அரங்க ஐயங்கார் திண்ணைப் பள்ளியிலும் பிறகு சிவகங்கை அரசர் பள்ளிக்கூடத்திலும் சேர்க்கப்பட்டார். தானாகவே கற்றுத் தன்னுடைய மெய்யறிவை வளர்த்துக் கொண்டார். தெய்வசிகாமணிப் புலவர் என்ற ஆசிரியரால் அவரது தமிழறிவு வளர்ந்தது. அதன் பின்னர் பசுமலை கிருஸ்தவர் ஆசிரியர் பயிற்சி மையத்தில் சேர்ந்தார். சிருங்கேரி சங்கராச்சாரி சுவாமிகள் ‘கவியோகி’ ‘பாரதி’ என்றும் இமயஜோதி சுவாமி சிவானந்தர் ‘மகரிஷி’ என்றும் பெயர்களை இவருக்கு சூட்டியுள்ளனர். இதனால் இவருக்கு ‘மகரிஷி’ கவியோகி சுந்தானந்தபாரதி’ என்னும் பெயர் நிலை பெறலாயிற்று.

பல நூல்களைப் படிக்க வேண்டும் என்ற ஆவலில் அரசர் கலாசாலையில் நூலகர் வேலையை ஒப்புக்கொண்டார். இதனால் உலக இலக்கியங்கள், அறிவியல் நூல்கள், வரலாற்று நூல்களையெல்லாம் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. ஸ்ரீராம சமுத்திரத்தில் சிறுகாலம் தங்கி அங்குள்ள கிராம மக்களுக்குச் சேவை செய்து சேரிமக்களின் வாழ்க்கையில் ஒளியேற்றினார். சில ஊர்களில் தேசியப் பிரச்சாரமும், சன்மார்க்கப் பிரச்சாரமும் செய்து கொண்டே இவர் சேரமாதேவி சென்றார். தம் பணத்தையும் உழைப்பையும் தந்து தமிழ்க் குருகுல வேலையில் ஈடுபட்டார். இவருடைய அரிய பணியால் தொழிற்பாடசாலையான ‘அன்பு நிலையம்’ மிகச்சிறந்த குருகுலமாக உருவெடுத்தது.

பாலையூர் சக்தி நிலையத்திலும், சில காலம் ஆசிரியப் பணியை மேற்கொண்டார். வ.வே.சு. ஐயரின் தமிழ்க் குருகுலப் பணிகளுக்குச் சுந்தானந்தர் பெரும் உதவி புரிந்துள்ளார். பாலபாரதி, சமரஸ போதினி, சுயராஜ்யா, இயற்கை, தொழிற்கல்வி போன்ற பல பத்திரிகைகளிலும் பணி ஆற்றி உள்ளார். புதுவைக்குச் சென்று பாரதியாரைப் பலமுறை சந்தித்துப் பேசியுள்ளார்.

ரமணாசிரமம் மற்றும் பாண்டிச்சேரி அரவிந்தர் ஆசிரமங்களில் தங்கி தியானங்களை மேற்கொண்டு, கவியோகி தனது ஆன்மீகப் பயணங்களை மேற்கொண்டார். பாரதம் முழுவதும் சுற்றிய பின் 1953 ம் ஆண்டு முதல் உலகப் பயணத்தைத் தொடங்கினார். இலங்கை, மலேசியா, ஜப்பான், ஜெர்மனி, ரஷ்யா, அமெரிக்கா, ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் தமது ஆன்மீகச் சொற்பொழிவுகளை நிகழ்த்தினார்.

ஜப்பான் விஜயம், நான் கண்ட ரஷ்யா, ஆப்பிரிக்கப் பயணம், போன்ற பயணக்கட்டுரை நூல்களைச் சுந்தானந்தர் எழுதியுள்ளார்.

1948 ல் ‘சுந்தானந்த சமாஜம்’ என்ற அறக்கட்டளை அமைப்பை நிறுவினார். 1973 ல் சிவகங்கையில் 30 ஏக்கர் பரப்பில் ‘சுந்தானந்த யோக சமாஜம்’ நிறுவனமானது. 7.3.1990 அன்று தனது வாழ்க்கைப் பயணத்தை நிறைவு செய்து கொண்டார்.

சுந்தானந்தரின் வாழ்வியல் நோக்கங்களும், கனவுகளும், லட்சியங்களும் சுந்தானந்த யோக சமாஜம் மற்றும் பள்ளியின் மூலம் இன்றும் வளம் பெற்று வருகின்றன.

நன்றி :

ஜனசக்தி

30 செப்டம்பர் 2009

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *