பல்துறை அறிஞர் விபுலானந்த அடிகள்

இலக்கியம் கட்டுரைகள்

பல்துறை அறிஞர் விபுலானந்த அடிகள்

( அரும்பாவூர் மு. சாஹிரா பானு )

 

விபுலானந்த அடிகள் தொடக்கக் கல்வியை காரைத் தீவில் மெதடிஸ்த சங்கப் பாடசாலையிலும், பின்பு கல்முனை நகரிலும், மட்டக்களப்பு பகுதியில் உள்ள ஆங்கிலப் பாடசாலையிலும் பயின்றார். 1906 ல் கேம்பிரிட்ஜ் ஜூனியர் தேர்விலும் 1908 ல் கேம்பிரிட்ஜ் சீனியர் தேர்விலும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார்.

1909 ல் மைக்கேல் கல்லூரியில் ஆசிரியராக நியமனம் செய்யப்பட்டுப் பின்னர் கல்முனை கத்தோலிக்கச் சங்கப் பாடசாலைக்கு மாறுதல் பெற்றுச் சென்றார். இச்சமயத்தில் கொழும்பில் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பயின்று கொண்டே பண்டிதர் தென்கோவை கந்தையப்பிள்ளை, கைலாசப்பிள்ளை மற்றும் வதிரி சி.தாமோதரம்பிள்ளை ஆகியோரிடம் சங்க இலக்கியங்களைப் பயின்றார். தொடர்ந்து மதுரைத் தமிழ்ச் சங்கத்தினரால் நடத்தப்பட்ட பண்டிதர் தேர்விலும் தேர்ச்சி பெற்றார். இதனால் இலங்கையின் முதலாவது தமிழ்ப் பண்டிதர் என்ற பெருமையைப் பெற்றார் விபுலானந்தர்.

கொழும்பு அரசினர் தொழில்நுட்பக் கல்லூரியில் வேதியியல் உதவி விரிவுரையாளராகவும் யாழ்ப்பாணம் சம்பத்தரிசியார் கல்லூரியில் விஞ்ஞான விரிவுரையாளராகவும் பணியாற்றினார். இலண்டன் பல்கலைப்பழகத்தில் தனிப்பட்ட முறையில் தேர்வு எழுதி பி.எஸ்.சி பட்டம் பெற்றார்.

தமிழ்மொழியை வளர்க்க யாழ்ப்பாணம் ஆரிய, திராவிட பாஷா அபிவிருத்திச் சங்கம் என்ற கழகம் ஒன்றினை நிறுவி பிரவேசப் பண்டிதர், பால பண்டிதர், பண்டிதர் என்னும் மூன்று வகையான தமிழ்த் தேர்வுகள் மூலம் பலரைத் தமிழறிஞர்களாக்கினார்.

1922 ல் தமிழகம் வந்து மயிலாப்பூர் இராமகிருஷ்ண மடத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். இங்குதான் விபுலானந்தர் என்ற பெயர் சூட்டப்பட்டது. இந்நிறுவனத்தின் கீழ் இயங்கி வந்த பல்வேறு கல்வி நிறுவனங்களைச் சிறப்பான முறையில் நிர்வகித்தார். இக்கல்வி நிறுவனங்களில் தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம், இலத்தீன் மற்றும் சிங்களம் எனப் பல்வேறு மொழிகளும் பயிற்றுவிக்கப்பட்டன. பின்னர் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைப் பேராசிரியர் பொறுப்பையும் ஏற்றுச் செவ்வனே செயல்பட்டார்.

விபுலானந்த அடிகள் தமிழ்ப் பணியோடு வேதாந்த கேசரி, பிரபுத்த பாரதம் போன்ற ஆங்கில இதழ்களுக்கும், விவேகானந்தன், இராமகிருஷ்ண விஜயம் போன்ற தமிழ் இதழ்களுக்கும் ஆசிரியராகவும் பணியாற்றினார். இவ்விதழ்களில் அவர் எழுதிய கட்டுரைகளில் தமிழர் வாழ்வும் பண்பாடும் சிறப்பாகக் குறிப்பிடப்பட்டுத் தமிழரின் பெருமை உலகறியச் செய்யப்பட்டது.

கதிரையம்பதி மாணிக்கப்பிள்ளையார் இரட்டை மணிமாலை, சுப்பிரமணிய சுவாமி இரட்டை மணிமாலை, கோதண்ட நியாயபுரிக் குமரவேல் நவ மணிமாலை மற்றும் கணேச தோத்திரப்பஞ்சகம் போன்ற நூல்களைப் பதிப்பித்து வெளியிட்டார்.

இவரின் பதினைந்து ஆண்டுக்கால இசை ஆராய்ச்சியின் பயனாக உருவான நூல் ‘யாழ்’ ஆகும். 1947 ம் வெளியிடப்பட்ட இந்நூல் கரந்தை தமிழ்ச் சங்கத்தினரால் இசை ஆராய்ச்சி நூலாக மாறியது. இவரின் சீரிய முயற்சியால் பதினாயிரம் கலைச் சொற்களுடன் ‘கலைச்சொல் அகராதி’ உருவாக்கப்பட்டு 1938 ல் சென்னை மாகாணத் தமிழர் சங்கத்தினரால் வெளியிடப்பட்டது.

சிதம்பரம் சர் அண்ணாமலை செட்டியாரின் வேண்டுகோளை ஏற்று 1931 ல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைப் பேராசிரியராகப் பொறுப்பேற்றார்.

பாரதியின் பாடல்களுக்கு இசையமைத்துப் பல இடங்களில் அப்பாடல்களைப் பாடச் செய்த பெருமையையும் பெற்றவர் விபுலானந்த அடிகள். மகாகவியின் பாடல்களை இலங்கையில் பரவிடச் செய்த பெருமையும் இவரையே சாரும்.

( 19 ஜுன்  விபுலானந்த அடிகள் நினைவு நாள் )

நன்றி :

ஜனசக்தி

19 ஜுன் 2009

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *