( அரும்பாவூர் மு. சாஹிரா பானு )
மிகச்சிறந்த பேராசிரியராகவும் நூலாசிரியராகவும் பேச்சாளராகவும் திகழ்ந்தவர் ரா.பி. சேதுப்பிள்ளை, திருநெல்வேலிக்கு அருகில் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்த இராசவல்லிபுரம் என்ற ஊரில் 1896 மார்ச் 2 அன்று பிறந்தார். பிறவிப்பெருமாள் – சொர்ணம்மாள் தம்பதியினருக்குப் பதினோராவது பிள்ளையாகப் பிறந்து வளர்ந்தார்.
அக்கால வழக்கப்படி சேதுப்பிள்ளை திண்ணைப் பள்ளிக்கூடத்திலும் பின்னர் பாளையங்கோட்டை சேவியர் பள்ளியிலும் பயின்றார். நெல்லை இந்துக் கல்லூரியில் பயின்று பட்டம் பெற்றார். 1915 ம் ஆண்டு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் நடைபெற்ற பேச்சுப் போட்டியில் பங்கேற்றுச் சிறப்பாகப் பேசியது கல்லூரி முதல்வர் உரோலா துரையின் மனத்தை வெகுவாகக் கவர்ந்தது. அக்கல்லூரியின் தமிழ்த்துறையில் டூயூட்டர் (Tutor) எனும் பதவி வழங்கிச் சிறப்பித்தார். கல்லூரியில் பணியாற்றிக் கொண்டே சட்டமும் பயின்று வந்தார். சென்னையிலும், நெல்லையிலும் சிலகாலம் வழக்கறிஞராகப் பணியாற்றினார்.
சென்னைப் பல்கலைக்கழகத்தின் ஆட்சிக்குழு உறுப்பினர், அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ் விரிவுரையாளர் திருநெல்வேலி நகராண்மை கழகத்தில் மூன்று முறை நகர்மன்ற உறுப்பினர் எனப் பல்வேறு பதவிகளை வகித்தார். திருநெல்வேலித் தெருக்களுக்கு நல்ல தமிழ்ப் பெயர்களைச் சூட்டிய பெருமையும் இவருக்கு உண்டு.
அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் 1955 ம் ஆண்டில் கீழைக்கலை ஆராய்ச்சி மாநாடு நடத்தப்பட்டது. இம்மாநாட்டில் திராவிட மொழிகள் பகுதியின் தலைவராக ரா.பி. சேதுப்பிள்ளை நியமிக்கப்பட்டுச் சிறப்பாகப் பணியாற்றினார்.
1926 முதல் 1961 வரை இருபத்தைந்து நூல்களை எழுதி உள்ளார். இவர் திராவிடப் பொதுச் சொற்கள், திராவிடப் பொதுப்பழமொழிகள், திருவள்ளுவர் நூல்நயம், ஊரும் பேரும், தமிழின்பம், சிலப்பதிகார நூல்நயம், வேலும் வில்லும், தமிழ்நாட்டு நவமணிகள், தமிழர் வீரம், தமிழ்விருந்து, வேலின் வெற்றி, கால்டுவெல் ஐயர் சரிதம், கடற்கரையிலே, திருக்காவலூர் கோயில் போன்ற அரிய நூல்களை எழுதியுள்ளார். ‘தமிழின்பம்’ எனும் நூல் மத்திய அரசின் மிகச்சிறந்த நூலுக்கான பரிசைப் பெற்றது.
இவரின் பேச்சானது அனைவரையும் கவர்ந்து இழுக்கும் ஆற்றல் படைத்ததாக விளங்கியது. ராமாயணச் சொற்பொழிவு, சிலப்பதிகாரம் மற்றும் திருக்குறள் விளக்கச் சொற்பொழிவுகளைப் பல்வேறு இடங்களில் நிகழ்த்தினார். தருமபுரி ஆதீனம் இவருடைய சொற்பொழிவாற்றும் திறனைப் போற்றும் வகையில் 1950 ல் ‘சொல்லின் செல்வர்’ என்ற பட்டத்தினை வழங்கி கெளரவித்தது. 1957ல் சென்னைப் பல்கலைக்கழகமானது தன்னுடைய நூற்றாண்டு விழாவின் போது இவருக்கு ‘இலக்கியப் பேரறிஞர்’ என்ற பட்டத்தினை வழங்கிச் சிறப்பித்தது. சேதுப்பிள்ளை சென்னைப் பல்கலைக்கழகத்தில் இருபத்து ஐந்து ஆண்டுகள் தமிழ்ப்பணி ஆற்றியவர் – சென்னைப் பல்கலைக்கழகம் இச்செயலைப் பாராட்டும் விதமாக வெள்ளிவிழா கொண்டாடி மகிழ்ந்தது.
யாம் ஈட்டிய பொருளைச் சென்னைப் பல்கலைக்கழகம் மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் போன்றவற்றில் தம்முடைய பெற்றோர் பெயர்களில் அறக்கட்டளைகளை நிறுவி அளித்த பெருமையும் ரா.பி. சேதுப்பிள்ளைக்கு உண்டு. தமிழ் வளர்ச்சிக்காகத் தமது இறுதிக்காலம் வரை பாடுபட்ட சொல்லின் செல்வர் ரா.பி. சேதுப்பிள்ளை 1961 ஏப்ரல் 25 அன்று மறைந்தார்.
நன்றி :
ஜனசக்தி
11 ஜூலை 2009