( அரும்பாவூர் மு. சாஹிரா பானு )
வங்காள தேசத்தில் உள்ள பிரம்ம நகரில் அகோரநாத் – வரதசுந்தரி தம்பதியர்க்கு 1879 பிப்ரவரி 13 ல் மூத்த மகளாகப் பிறந்தார் சரோஜினி தேவி. தமது 12 வது வயதில் மெட்ரிக்குலேஷன் தேர்வில் மாநிலத்திலேயே முதலிடம் பெற்றார். இளம் வயது முதலே கவிதை இயற்றுவதில் வல்லமை பெற்றவராகத் திகழ்ந்தார். சர்வால்டர் ஸ்காட் எனும் ஆங்கிலக் கவிஞரின் அடியொற்றி ஆங்கிலக் கவிதைகள் புனைந்தார்.
சரோஜினியின் ஆங்கிலக் கவிதைகள் இங்கிலாந்து வரை புகழப்பெற்றது. லண்டன் கேம்ப்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற முதல் இந்தியப்பெண்மணி இவர் தான். 1898 ல் தனது படிப்பிற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டுத் தாயகம் திரும்பினார். ஐதராபாத்தில் டாக்டர் கோவிந்தராஜ நாயுடு என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். இவர்களின் இல்லறம் நல்லறமாக அமைந்ததினால் நான்கு குழந்தைகளை ஈன்றெடுத்தார். இவரது கவித்திறனைப் பாராட்டி ‘கெய்சர் ஹிந்த்’ என்ற பட்டத்தினை ஆங்கிலேய அரசு வழங்கியது.
அன்னிபெசன்ட் அம்மையாரின் ‘ஹோம்ரூல் இயக்கம்’ சரோஜினி அம்மையாரைப் பெரிதும் கவர்ந்தது. பட்டிதொட்டியெங்கும் பயணம் செய்து மக்களை ஆங்கிலேயர்களுக்கெதிராக அணி திரட்டினார். இவரது எழுச்சி மிக்க பேச்சும், எழுத்தும் ஆங்கிலேயரை எரிச்சல் அடையச் செய்தன.
1918 ல் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற தமிழ் மாநில அரசியல் மாநாட்டில் சிறப்புரை ஆற்றினார். 1920 ல் மகாத்மா காந்தியின் சத்தியாக்கிரப் போராட்டத்தில் பங்கேற்றார். காந்திஜியின் அறவழிப் போராட்டம் கவிக்குயிலின் மனத்தைப் பெரிதும் கவர்ந்தது. ஜாலியன் வாலாபாக் படுகொலைகளைக் கண்டித்து வெள்ளையர்கள் தமக்கு வழங்கிய ‘கெய்சர் ஹிந்த்’ பட்டத்தை தாம் சுமப்பதை இழுக்காகக் கருதி பிரிட்டிஷ் அரசிடமே திருப்பி ஒப்படைத்தார். தென்னாப்பிரிக்க இந்தியர்களுக்காக அங்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டார். அம்மையாரின் பேச்சாற்றலும், செயல்பாடும் வெளிநாட்டு மக்களையும் பெரிதும் கவர்ந்தன.
1930 ல் நடைபெற்ற உப்புச் சத்தியாகிரகப் போராட்டத்தில் பங்கேற்றுச் சிறை சென்றார். 1925 ல் கான்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் மகாசபையின் தலைவராகத் திறம்படப் பணியாற்றினார். உப்புக்கு வரி விதித்ததை எதிர்த்ததாலும், தனிநபர் சத்தியாக்கிரகம் நடத்தியதாலும், வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் பங்கேற்றதாலும் அடிக்கடி சிறைக் கொட்டடியில் அடைக்கப்பட்டார்.
1947 ல் சுதந்திரத்துக்குப் பின் உத்தரப்பிரதேச மாநில கவர்னராக சரோஜினி அம்மையார் நியமிக்கப்பட்டார். மகாத்மா காந்தியை நாதுராம் கோட்சே என்ற மதவெறியன் சுட்டுக் கொன்றதால் ஏற்பட்ட துயரம் இவரைப் பெரிதும் வாட்டியது. மன அமைதி குலைந்ததால் ரத்த அழுத்தம் அதிகமாயிற்று. முதுமையும் உடல்நலக்குறைவும் ஒரு சேர அம்மையார் 1949 மார்ச் 2 ஆம் நாள் இவ்வுலகப் பயணத்தை நிறைவு செய்தார்.
நன்றி :
ஜனசக்தி
04 செப்டம்பர் 2009