அழகு நிறைந்த அமீரகப் பயணம்

இலக்கியம் கட்டுரைகள்

 

( நல்லாசிரியர் எஸ். சையத் அப்துல் சுபஹான் MSc M.Phil, B.Ed

முதல்வர்,

அல் அமீன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கும்பகோணம் )

 

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பெரும் கிருபையால் அமீரகப் பயணம் 21.04.2011 முதல் 01.05.2011 முடிய மிகச் சிறப்பாக அமைந்திருந்தது. தீன் இசைப்பாடகர் பாசத்திற்கும் மரியாதைக்கும் உரிய தேரிழந்தூர் தாஜுதீன் அவர்களின் பெரும் முயற்சியால் இந்தப் பயணம் சிறந்து விளங்கியது. 21.04.2011 காலை 9 மணிக்கு அருமை நண்பர் தாஜுதீன் பெற்றெடுத்த அருமைச் செல்வர் அனஸ் என்ற மாணவனுடன் சென்னை சென்று அன்று மாலை 7.30 மணிக்கு ஜெட் ஏர்வேஸ் மூலம் துபாய் பயணம் புறப்பட்டோம்.

 

வான் ஊர்தியிலேயே நம் பள்ளியில் படித்த துக்காச்சியை சார்ந்த மாணவன் சாகுல் ஹமீதை சந்தித்து பெரும் மகிழ்ச்சி அடைந்தேன். விமானப் பணியாளர்கள் மிகுந்த அன்போடு உபசரித்து இரவு விருந்துகளையெல்லாம் வழங்கினார்கள். அன்று இரவு 11 மணியளவில் துபாய் ஏர்போர்ட் டெர்மினல் II வில் நின்று கொண்டிருக்கும்போது ஷொரிபரோஸ், நியாஸ் மற்றும் பல பழைய  மாணவர்களை சந்திக்கும்போது பேர் உவகை அடைந்தேன். இரவு 12 மணிக்கு நண்பர் தாஜுதீன் அவருடைய சகோதரர் சாதிக் மற்றும் பஷீர், சாதிக் மெளலா அவர்களுடன் டெய்ரா டி பிளாக் சென்று தேநீர் அருந்திவிட்டு உறங்கினேன். மறுநாள் காலை 11.30 மணிக்கு சார்ஜாவில் உள்ள பிரபல புகைப்படக்காரர் மதுக்கூர் அமீன் அவர்களை சந்தித்தேன். அவர் தேநீர் வழங்கி மகிழ்வித்தார். 12.30 மணிக்கு துபாய் ஜும்ஆ தொழுகையில் பங்கேற்றேன். அங்கே விசாஸ் பான்சர் செய்த கீழக்கரை பெருமகனார் இலக்கியத் தென்றல் புலவர் அல்ஹாஜ் மாஃரூப் காகா அவர்களை சந்தித்த பொழுது அவர் ஜும் ஆ தொழுகையின் சிறப்புகளையும் நடைபெற இருந்த சிறப்புச் சொற்பொழிவுகள் பற்றிய பல ஆலோசனைகளை வழங்கினார். அவருடைய எதார்த்தமான வார்த்தைகளில் மனமுருகி அவருக்காக இறைவனைப் பிரார்த்தித்து மகிழ்ந்தேன். சரியாக 1.30 மணி அளவில் புதுக்கோட்டை ஹாஜியார் சர்புதின் அவர்களை சந்தித்தேன். அவருடைய அனுபவங்களை எல்லாம் எடுத்துச் சொல்லியபிறகு அவர் அளித்த மதிய உணவில் கலந்து கொண்டேன். அப்போது வருகை புரிந்த சமயச் சான்றோர்களாகிய உலமா பெருமக்களை சந்தித்தேன்.

 

அன்று மாலை குவைத் பள்ளியில் மஃக்ரிப் தொழுகையில் கலந்து கொண்டேன். 7.30 மணியளவில் பஷீர் பைஜி அவர்கள் காரில் துபாய் மால் சென்று சுற்றிப் பார்த்தோம். பிரம்மாண்டமான மீன் கண் காட்சியகம், செயற்கை முறையில் உருவாக்கப்பட்ட பனிச்சருக்கு விளையாட்டு உலக மக்கள் ஒருங்கிணைந்த இடமான இசை நீரூற்று, ஒலி ஒளி கண்காட்சியையும் கண்குளிரக் கண்டு ரசித்து பொன்னுசாமி ஹோட்டலுக்கு சாப்பிட சென்றோம். அங்கே விசா ஸ்பான்சர் வழங்கிய மாரூப் காகா அவர்கள் அன்று இரவு சிறந்த விருந்தினை வழங்கி மகிழ்வித்தார். அங்கிருந்து புறப்பட்டு இரவு 2 மணியளவில் அபுதாபி சென்றோம். சாதிக் பைஜி அவர்கள் அறையில் தங்கியிருந்தோம். காலையில் அல்ஹாஜ் தாஜுதீன் அவர்களுடன் அல் ஊர்து பள்ளிக்கு பேருந்தில் பிரயாணம் செய்தோம் சிறிது நேர ஓய்வுக்குப் பின்பு காலை சிற்றுண்டி மற்றும் மதிய உணவு முடித்து விட்டு மாலை 4.30 மணியளவில் அபுதாபியிலிருந்து பேருந்தில் துபாய்க்கு பயணித்தோம்.

 

துபாய் சென்றவுடன் உல்லாசப் படகு சவாரி செய்து மகிழ்ந்தோம் பிறகு குடந்தை மீரா மஹால் உரிமையாளர் அவர்களை சந்தித்து மஃஹரிப் தொழுகைக்குப் பிறகு மீண்டும் படகில் சவாரி செய்து பிரமிக்க தக்க உணர்வுப் பூர்வமான துபாய் அருங்காட்சியகத்தைக் கண்டு களிப்புற்றேன். பிறகு மெட்ரோ ரயிலில் பயணித்து துபாய் மால் சென்று மீண்டும் ஒலி ஒளி அமைந்த இசை நீரூற்று காட்சியைக் கண் குளிரக் கண்டு ரசித்து இரவு 11 மணியளவில் துபாய் பேருந்து மூலம் அபுதாபி சென்று அடைந்தோம்.

 

ஞாயிற்றுக்கிழமை மதியம் அஞ்சப்பர் உணவகத்தில் அபுதாபியின் இந்தியன் பள்ளி தலைமையாசிரியர் பேராசிரியர் ஹாஜி அலாவுதீன் அவர்கள் மிகச் சிறந்த விருந்து வழங்கி எங்களை சிறப்பித்தார். பிறகு அபுதாபியில் பள்ளி பள்ளி வளாகத்தைச் சுற்றிப் பார்த்து தேநீர் அருந்தி விட்டு வஹாப் சாரை சந்தித்தேன்.

 

மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்ந்த வஹாப் சார் அவர்கள் தேநீர் வழங்கி தங்களுடைய வாழ்க்கைப் பயணத்தை விரிவாக விளக்கினார். 5.30 மணியளவில் ஷேக் சையீத் பள்ளிவாசல் சென்று அழகிய கட்டிட வடிவமைப்புகளைக் கண்டு ரசித்து மஃஹரிப் தொழுகை தொழுது சந்தோஷமாக சாதிக் பைஜி அவர்களுடன் காரில் கலிபா பார்க் புறப்பட்டோம். பார்க்கில் இருந்த ரயிலில் பயணம் செய்து களிப்புற்றதுடன் மிகச்சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருந்த அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த ஒவ்வொரு காட்சியையும் கண்டு வியப்புற்றோம். அன்று இரவு சாதிக் பைஜி அவர்களுடைய அறையில் தங்கினோம். அடுத்த நாள் மாலை அபுதாபி கடற்கரைக்குச் சென்றோம். கப்பல் நிற்கும் இடங்கள் மற்றும் பழக்கடைகளைப் பார்த்து ரசித்தோம். அன்று இரவு ஹோட்டல் சங்கீதாவில் மரியாதைக்குரிய வஹாப் சார் அவர்கள் திருநெல்வேலி சகோதரர்களுடன் மிகச் சிறந்த விருந்து மற்றும் சிறப்பு பரிசுகளை வழங்கி பாராட்டினார். அடுத்த நாள் மதியம் இந்தியன் பள்ளி அபுதாபி தலைமை ஆசிரியர் அலாவுதின் சார் அவர்கள் மதிய உணவு வழங்கி மகிழ்ந்தார். அன்று மாலை அபுதாபியில் உள்ள மெரினா மால் பகுதிகளை சுற்றிப்பார்த்து பரவசம் அடைந்தோம்.

 

அடுத்த நாள் மதியம் 3 மணியளவில் அபுதாபியில் இருந்து புறப்பட்டு துபாய் வந்தடைந்தோம். இரவு சரியாக 9 மணிக்கு டெய்ரா டி பிளாக்கில் போற்றுதலுக்குரிய மாரூப்காகா தலைமையில் சிறப்புச் சொற்பொழிவு நடைபெற்றது. பெருவாரியான பெருமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்ததோடு கேள்வி பதில் நிகழ்ச்சியும் நடைபெற்றது. பல பெற்றோர்கள் மற்றும் நமது பள்ளியின் மாணவர் முபாரக் அலி நிகழ்ச்சியில் பங்கேற்று பரிசுகள் வழங்கி சிறப்பித்தார். சரியாக 10.45 மணிக்கு துபாய் தினமலர் ரிப்போர்ட்டர் பாராட்டுதலுக்குரிய நண்பர் முதுவை ஹிதாயத் அவர்கள் அறிமுகமானதுடன் இரவு விருந்து வழங்கி அவருடன் தங்க வைத்து மகிழ்ந்தார். மறுநாள் முதுவை ஹிதாயத்துடன் மலேசிய தூதரகம் சென்று உயர்கல்வி சம்மந்தமான கருத்துக்கள் பரிமாறப்பட்டு புத்தகங்கள் பெறப்பட்டோம். அடுத்து இந்திய தூதரகம் சென்று மதிப்புமிகு பெற்றோர் தாஹா அவர்களை சந்தித்து மகிழ்வுற்றேன்.

 

மதியம் ஷார்ஜாவில் உள்ள சென்னை ரெஸ்டாரண்டில் மதிய உணவுக்கு பிறகு ஃபார்ம் ஜுமைரா சென்று கடலுக்குள் அமைக்கப் பெற்ற ஓபன் பீட்ச் மற்றும் ஈச்சமர வடிவில் அமைக்கப்பட்ட குடியிருப்பு வளாகங்கள் மற்றும் கடற்கரை அழகினை கண்டதுடன் அட்லாண்டிக் ஹோட்டலில் அமைக்கப்பெற்றிருந்த அழகிய பல வண்ண வடிவங்களை கண்டு மகிழ்ந்தோம். அன்று இரவு முதுவை ஹிதாயத் சார் வீட்டில் தங்கி அடுத்த நாள் வெள்ளிக்கிழமை மம்சார் பள்ளி வாசலில் தொழுது அல் மம்சார் பார்க்கில் வழங்கப்பட்ட மதிய விருந்தில் கலந்து கொண்டு பெருமகிழ்ச்சி அடைந்தேன். அல் மம்சார் பார்க்கை முழுவதும் சுற்றிப் பார்த்து பரவசம் அடைந்து சொற்களால் வர்ணிக்க முடியாத பேர் உவகை அடைந்தேன். அன்று மாலை டேய்ரா டி பிளாக்கில் நண்பர் தாஜுதீனுடன் சென்று இரண்டு மகான்களை சந்தித்தோம்.

 

மறுநாள் காலை துபாயிலிருந்து அபுதாபிக்கு பேருந்தில் பயணித்தோம். அன்று மாலை ரெட் ஹார்டில் நடைபெற்ற கல்வியாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கல்வி சம்பந்தமான செய்திகளையும் சமுதாய முன்னேற்றம் மற்றும் பாதுகாப்பு குறித்த ஆலோசனைகளையும் வழங்கிய பின் ஆடுதுறை ஆவணியாபுரம் அன்சாரி சார் வழங்கிய இரவு விருந்தில் கலந்து கொண்டேன். 01.05.2011 ஞாயிறு மதியம் 12 மணியளவில் புறப்பட்டு சீமான் அல்ஹாஜ் மாலிக் சார் அவர்களுடன் இந்தியன் பள்ளி அபுதாபி சென்று மதிய விருந்தில் கலந்து கொண்டு அனைவரிடமும் விடைபெற்று துபாய் விமான நிலையம் வந்தடைந்து தொழுகை முடித்த பின்பு முகமது மைதீன் ஹஜ்ரத் அவர்களுடைய மாமனாரை சந்தித்துவிட்டு நேரடியாக விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தேன். இரவு 11.45 க்கு புறப்பட வேண்டிய விமானம் 1 மணி நேரம் தாமதமாக 12.45 க்கு புறப்பட்டு காலை 6.30 மணிக்கு சென்னை வந்து அடைந்தது. 7 மணியளவில் விமானநிலையத்தை விட்டு வெளியே வந்து நண்பர் ஷேக் தாவூது மூலமாக தாம்பரம் வந்து குடந்தை பஸ்சில் ஏறி 3.30 மணிக்கு குடந்தையில் உள்ள நமது பள்ளிக்கு வந்து சேர்ந்தேன். மாலை 4 மணிக்கு பொறுப்புகளை எடுத்துக்கொண்டு புத்துணர்வுடன் செயல்படத் துவங்கினேன்.

அல்லாஹ்வின் பெரும் கிருபையால் இந்த அமீரகப் பயணம் உலகளாவிய நட்புக்கு வழி வகுத்தது. எல்லா வகையிலும் உதவி புரிந்து பயணம் சிறக்க ஏற்பாடு செய்தவர்களுக்கும் வாழ்த்துக்களை வழங்கியவர்களுக்கும் வல்ல ரஹ்மானிடம் துஆ செய்து இதுபோன்ற பயணங்கள் மேலும் சிறப்புற அமைய அளவற்ற அருளாளனாகிய அல்லாஹ்விடம் வேண்டி நிறைவு செய்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *