நகரத்தின் எந்தச் சுவரும்
சும்மா இல்லை
எதை எதையோ
பேசிக்கொண்டு தான் இருக்கிறது
விடிவெள்ளி,
எதிர்காலம், வரலாறு,
சரித்திரமே,
நட்சத்திரமே
நம்பிக்கையே,
மாவீரன்,
தளபதி, புயல், புரட்சி,
தெரசாவே,
இப்படி சொற்களைக்
காணும்போதெல்லாம்
இதயத்துடிப்பும்
குருதிக்கொதிப்பும்
கூடுகிறது
வரலாற்றில் விளைந்த
சாதனைச் சொற்கள்
சாவியாய் விளைந்து
சாதாரணமாய்ச் சுவரில்
வரலாறும் தெரியாமல்
வருங்காலமும் உணராமல்
விளம்பரமாய் எல்லாம்
வெளிச்சமாகிறது
ஒருநிலையில் இல்லாத
நானும் மனமும்
ஒரு நிலைக்கு வர
வெகுநேரமாயிற்று
அழுக்கு ஆடையுடன்
ஒப்பனை இல்லாமல்
தூரிகை எடுத்து
வண்ணம் குழைத்து
எழுதிக்கொண்டிருந்தான்
ஒருசுவரில்
எல்லாம் பொய்
எனினும்
இவன்
கால்வயிறு நிறைவது
என்னவோமெய் !
நன்றி :
சமநிலைச் சமுதாயம்
ஜுலை 2010