நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார்
( அரும்பாவூர் மு. சாஹிரா பானு )
இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் பெருமிதத்துடன் வாழ்ந்த புலவர் பெருமக்களுள் நாட்டு மக்கள் அனைவராலும் ‘நாட்டாரையா’ என அன்புடனும், மதிப்புடனும் அழைக்கப்பெற்றவர் பண்டித நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் ஆவார். தமிழன்பர்களின் நெஞ்சங்களில் நின்ற சொல்லராய், நீடு தோன்றினியராய் வாழ்ந்து வரும் நாட்டார், தஞ்சை மாவட்டத்தில் நடுக்காவிரி என்னும் சிற்றூரில் 1884 ஏப்ரல் 12-ல் முத்துசாமி நாட்டார் என்பவருக்கு மகனாய்ப் பிறந்தார்.
தம்முடைய தந்தையிடத்திலும், திண்ணைப் பள்ளிக்கூடத்திலும் படித்த ந.மு.வே., ஆசிரியர் துணை இல்லாமல் தாமே படித்து மதுரைத் தமிழ்ச் சங்கம் நடத்திய பிரவேசப் பண்டிதர், பால பண்டிதர், பண்டிதர் ஆகிய ஆறு ஆண்டுத் தேர்வுகளையும் மூன்றே ஆண்டுகளில் படித்துத் தேர்வெழுதி முதன்மையாகத் தேர்ச்சி பெற்றார். இதனால் இவர் புகழ் இளமையிலேயே நாடெங்கும் பரவுவதாயிற்று.
கோவையில் தூய மைக்கேல் உயர்நிலைப்பள்ளியில் ஓராண்டு தமிழாசிரியராகப் பணிபுரிந்தார். பின்னர் திருச்சியில் பிசப் ஈபர் கல்லூரியில் இருபத்து மூன்று ஆண்டுகள் தமிழ்ப் பேராசிரியராகவும் அதன்பின் ஏழாண்டுகள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகவும் பணியாற்றினார். கரந்தைத் தமிழ்ச் சங்கத்தலைவர் தமிழ்வேள் த.வே.உமா மகேசுவரனார் வேண்டுகோளையேற்று கரந்தத் தமிழ்ச்சங்கம் நடத்தி வந்த கரந்தை புலவர் கல்லூரியில் 1940 முதல் தம் வாழ்க்கைப் பயணத்தின் இறுதி நாளாகிய 29 மார்ச் 1944 வரை ஊதியம் ஏதும் பெறாத மதிப்பியல் முதல்வராகத் தொண்டாற்றினார். இதனால்தான் அக்கல்லூரிக்குச் சென்னைப் பல்கலைக்கழகம் இசைவாணை வழங்கியது.
கல்லூரிப் பணிகட்கிடையே விடுமுறை நாட்களில் வெளியூர்களுக்குச் சென்று தமிழ் மாநாடுகளுக்குத் தலைமை தாங்கியும், தமிழன்பர்களும், சிவனடியார்களும் எழுச்சியுடன் கூட்டுவித்த இலக்கிய விழாக்களில் சிறப்புரையாற்றியும் தமிழுக்கும், சைவத்திற்கும் பெருந்தொண்டாற்றினார்.
சென்னை மயிலாப்பூரைத் தலைமையகமாகக் கொண்டதாகிய சைவசித்தாந்தப் பெருமன்றத்தின் தலைவராகவும் நாட்டாரையா விளங்கினார். திருவிளையாடற்புராணம், சிலப்பதிகாரம், மணிமேகலை, அகநானூறு முதலிய அரும்பெரும் தமிழிலக்கியங்களுக்கு உரையெழுதியும் வேளிர் வரலாற்றாராய்ச்சி, நக்கீரர், கபிலர், கள்ளர் சரித்திரம், கண்ணகி வரலாறும் கற்பு மாண்பும், சோழர் சரித்திரம் எனும் வரலாற்று நூல்களை எழுதியும் தமிழ்த்தொண்டாற்றினார். தமிழ்ப்பொழில், செந்தமிழ்ச் செல்வி, செந்தமிழ், சித்தாந்தம் முதலிய தமிழாராய்ச்சித் திங்கள் இதழ்களில் இவருடைய ஆய்வுக் கட்டுரைகள் அணி செய்தன.
தஞ்சை அல்லது திருச்சியில் தமிழ்ப்பல்கலைக்கழகத்தைத் தோற்றுவிக்க வேண்டும் என்று அரும்பாடுபட்டார். தமது 37 ஆம் அகவையில் தமிழ்ப்பல்கலைக்கழகத்திற்கு முன்னோடியாகத் தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளிக்கருகில் திருவருள் கல்லூரியை நிறுவ முயற்சி மேற்கொண்டார். அவர் மறைந்து பல்லாண்டுகள் கழித்து அவரின் பேரவாக்கள் ஒன்றன் பின் ஒன்றாக நிறைவேறின.
1981 ல் தஞ்சையில் தமிழ்ப் பல்கலைக்கழகமும், 14-10-1992 ம் ந.மு. வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரியும் தொடங்கப்பெற்றது.
ந.மு. வேங்கடசாமி நாட்டார் எழுதிய நூல்களை எல்லாம் தமிழக அரசு நாட்டுடைமையாக்கி அவரைப் பெருமைப்படுத்தியது.
நன்றி :
ஜனசக்தி
17 ஜுலை 2009