( அரும்பாவூர் மு. சாஹிரா பானு )
அயர்லாந்தில் சாமுவேல் நோபில், மேரி ஹாமில்டன் தம்பதியர்க்கு 1867 ஆம் ஆண்டு மகளாகப் பிறந்தார் சகோதரி நிவேதிதா. இவரின் இயற்பெயர் மார்கரெட் நோபில். ஏழைகளின்பால் கருணை கொண்டு, அவர்களுக்குப் பணிவிடை செய்வதையே தன் வாழ்நாளில் குறிக்கோளாகக் கொண்டிருந்தார். இவரது வாழ்க்கையில் 1895 ஆம் ஆண்டு ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது. அன்று ஏற்படுத்திய அம்மாற்றமே இவரை இந்தியா நோக்கி வரச் செய்தது.
மார்கரெட்டின் தந்தை உடல் ஊறுபட்டுத் தமது 34 ஆம் வயதிலேயே இயற்கை எய்தியபடியால் மார்கரெட் தன் பாட்டனார் பராமரிப்பில் வளர்ந்தார். இசையிலும் நுண்கலையிலும் ஈடுபாடு கொண்டு மார்கரெட் கடுமையான கட்டுப்பாடுகள் கொண்ட ஹாலிபாக்ஸ் கல்லூரியில் பயின்றார். 1892 ஆம் ஆண்டில் சொந்தமாகப் பள்ளி ஒன்றை நிறுவினார். அப்பள்ளி விரைவில் பொதுமக்கள் பேராதரவுடன் மேலும் வளர்ச்சியடைந்தது.
இந்நிலையில் 1895 ல் மார்கரெட்டின் தோழியான இசபெல் மார்கீசன் சீமாட்டி தன் வீட்டிற்குப் பாரத நாட்டிலிருந்து துறவி ஒருவர் வந்திருப்பதாகவும் அவரைச் சந்திக்க உடனடியாக வரவேண்டுமென்றும் அழைப்பு விடுத்தார். அழைப்பை ஏற்றுச் சென்ற மார்கரெட் சுவாமி விவேகானந்தரை முதன் முதலில் கண்டார். அவரது தூய்மையும் ஆன்மீக நெறிகளும் மார்கரெட்டின் மனதை ஈர்க்கவே அக்கணமே, தன்னைப் பெற்றெடுத்த திருநாட்டை விட்டுவிட்டு சுவாமிஜியின் அன்புக்கட்டளையைச் சிரமேற்கொண்டு மார்கரெட் 1898 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 28 ஆம் நாள் இந்தியாவிலுள்ள கல்கத்தா நகர் வந்தடைந்தார். இந்திய ஞானிகளின் உரை, புராணங்கள், இதிகாசங்கள் ஆகியவற்றைப் புரட்டிப்படித்து அதன்மூலம் பாரத மக்களுக்கு நன்னெறியும் நல்வழியும் காட்ட முயற்சி மேற்கொண்டார்.
1898 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 25 ஆம் நாள் சுவாமி விவேகானந்தர் மார்கரெட்டை இராமகிருஷ்ண மடத்திற்கு அழைத்துச் சென்று இறைவழிபாடு பற்றியும், பிரம்மச்சர்ய நோன்பினை ஏற்கும்படியான தீட்சையும் வழங்கினார். ‘அர்ப்பணிக்கப்பட்டவள்’ எனும் பொருள் புதைந்த ‘நிவேதிதா’ எனும் பெயரைச் சூட்டித் தம் அருளாசியை வழங்கி அம்மையாரைத் திருத்தொண்டிற்காக வழியனுப்பி வைத்தார்.
சுவாமி விவேகானந்தர் ‘நிவேதிதா’ தேவியை 1899 ஆம் ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்காவிற்கு அனுப்பி வைத்தார். அங்குச் சென்ற அம்மையார் பாரத நாட்டின் பண்பாடுகளைப் பற்றியும், பழம்பெருமைகளையும் பறைசாற்றி அமெரிக்கர்களின் அறியாமையைப் போக்கும் முயற்சியில் வெற்றி கண்டு 1901 ஆம் ஆண்டு பாரதம் திரும்பினார். 1902 ஆம் ஆண்டு நல்வழி காட்டிய குருநாதர் ஜூலை மாதம் 3 ஆம் தேதி மகாசமாதியடைந்தார். குருநாதரின் மறைவு பேரிடியாய் வந்து அவரைத் தாக்கியது.
நிவேதிதா தம் எழுத்து மற்றும் பேச்சாற்றலின் துணையோடு அரசியல், சொற்பொழிவுகள், நூல்கள் வாயிலாகவும் இந்தியத் திருநாட்டிற்காக இந்திய மக்களிடையே உணர்ச்சிகளைத் தட்டியெழுப்பும் சிற்றுளியாகச் செயல்பட்டார். இந்திய விடுதலைக்காக ஆங்கிலேயரை எதிர்த்துக் களம் கண்டார். அயல்நாட்டில் பிறந்து பாரதத் திருநாட்டிற்குப் பணிவிடைகள் செய்த தியாகத் தீபமான நிவேதிதா 1911 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 13 ஆம் நாள் டார்ஜிலிங் என்ற இடத்தில் இயற்கை எய்தினார்.
நன்றி :
ஜனசக்தி
09 செப்டம்பர் 2009