அருள்சுனை குளித்தபின் வெறுமனே அமர்வதா ?

இலக்கியம் கவிதைகள் (All)

 

( கவிஞர் ஆலிம் செல்வன் )

 

கடமையானதே என் செய்வேன் !

கருணைக் கடலே என் இறைவா !

கடமை தவறிடக் கடவேனோ

கண்மணி நபிஎம் பெருமானே !

 

உன்னையே தொழுவேன் உன்னையே புகழ்வேன்

உன்னருள் வேண்டி இறைஞ்சிடுவேன்.

என்னிரு கைகள் ஏந்திய மறையும்

ஏந்தலின் அறவுரை செயல்முறையும்

 

உண்மையின் தன்மையை ஒளிர்ந்தெழச் செய்து

உயர்நெறி வாழ்வினை வகுத்தளிக்கும்.

உன்னருள் படைப்புக்(கு) உன்னருள் பாயும்;

உன்னத வழியினைப் பகுத்தளிக்கும்.

 

தொழுகையும் உனக்கே வரியளிப்புனக்காய்

நோன்பதும் உனக்கே காணிக்கை !

அழுகிடும் உடலில் அறிவினைப் புகுத்தி

அரியணை உயர்த்தி அமர்த்திட்டாய் !

 

பழுதாய் பஞ்சையாய்ச் சிதைந்து விடாமல்

பயன்தரும் நல்வாழ்(வு) அமைத்திட்டாய் !

உழுதுழைத்(து) அடைந்திடும் அறுவடை போன்று

உள்ளம் மகிழ்ந்திடப் பரிசளித்தாய் !

 

அரிதாம் கோளம் எளிதாய்ச் சமைத்தாய்

அரியநல் விந்தைகள் அமைத்திட்டாய்

அருமையும் பெருமையும் ஒருங்கிணைந் திலங்கிடும்

அண்ணலை அவனிக்குப் பரிந்தளித்தாய்

 

அறநெறி பிறழா நிறைவினில் துலங்கிட

அல்குர் ஆனொளியை இறக்கிட்டாய்

புரந்தரும் படைப்பாய் வரமெனத் தந்தெமைப்

புகழ்பெறும் படைப்பாய் உயர்த்திட்டாய் !

 

குருதியும் சதையும் திசுவும் அணுவும்

கொடையென வந்ததுன் புறத்திருந்தே !

விரிந்தநல் வானமும் பரந்தஇப் பூமியும்

வளரியல் செல்வமுன் புறத்திருந்தே !

 

அறிந்ததும் தெரிந்ததும் ஆராய்ந்துணர்வதும்

அகம்புறம் அசைவதும் உன்புறத்திருந்தே !

சிறந்ததும் இனியதும் நல்லதும் கெட்டதும்

மனிதருள் புகுவதுன் புறத்திருந்தே !

 

அருள்சுனை குளித்தபின் வெறுமனே அமர்ந்தால்

அடியான் பிறவியின் பயனுமுண்டோ ?

இறைவனின் கொடைக்கு நன்றியை மறந்தால்

மன்னிப் பில்லாக் குற்றமன்றோ ?

 

அருவனைப் புகழ்ந்து திருநபி ஏந்திடும்

அருங்கவி இயற்றிட மறந்தேனே !

உறுங்கடன் சிறப்புற, புலமையைச் சுரந்திட

இருகரம் ஏந்தி இறைஞ்சுகின்றேன் !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *