( அரும்பாவூர் மு. சாஹிரா பானு )
’நேற்று என்பது இன்றைய நினைவு
நாளை என்பது இன்றைய கனவு’
என்று ஒப்பிலா தத்துவத்தை உதிர்த்தவர் கலீல் கிப்ரான்.
20ம் நூற்றாண்டின் ‘தாந்தே’ என்று போற்றிப் புகழப்படும் கலீல் கிப்ரான் லெபனான் நாட்டில் உள்ள பெஸ்ரி என்ற கிராமத்தில் 1883ல் ஜனவரி 6ம் தேதி பிறந்தார். வீட்டிலேயே ஆங்கிலம், அரபி, பிரெஞ்சு மொழிகளைக் கற்றார். உள்மன அனுபவங்களை தன் இளமைக்கால வாழ்க்கையிலேயே தெரிந்து உணர்ந்து வளர்ந்தார் கலீல் கிப்ரான்.
1894 ல் அமெரிக்காவில் குடியேறி அங்கு ஓவியம் வரையக் கற்றுக் கொண்டார். பின் 1896ல் மீண்டும் லெபனான் திரும்பி அரபி இலக்கியத்தை கற்றறிந்தார்.
15ம் வயதில் ‘தீர்க்கதரிசி’ நூலின் கையேட்டுப் பிரதியை எழுதினார். 16வது வயதில் ‘அல் அகிகாட்’ (உண்மை) இதழ் ஆசிரியரானார். 17 வது வயதில் அரபி மொழியில் சிறந்து விளங்கிய கவிஞர்களின் ஓவியங்களை வரைந்தார். 1901ல் ‘அல்கிக் காமெட்’ கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றார்.
கிரீஸ், இத்தாலி, ஸ்பெயின் முதலிய நாடுகளில் பயணம் செய்து பாரீஸ் நகரை அடைந்து ஓவிய, சிற்பக்கலை, நுணுக்கங்களைப் பயில ஆரம்பித்தார்.
பாரீஸ் நகரில் படித்த காலத்தில் உலகப் புகழ்பெற்ற ‘ஆத்மப் புரட்சி’ என்ற கதைத் தொகுதியை அரபி மொழியில் எழுதி வெளியிட்டார். அரபி மொழியில் புரட்சிகரமாக எழுதிய முதல் எழுத்தாளர் கலீல் கிப்ரான் தான். வெளிப்படையாகத் தைரியமாக மதக்கொடுமைகளை வேகமாகக் கண்டித்தார்.
நீதி சீரழிக்கப்பட்டு அநியாயத் தீர்ப்புகள் வழங்கப்படுவதை பாமர மக்களை கொள்ளையடித்து சுரண்டும் ஆட்சியாளர்களை, விரும்பாத ஆண்களை மணக்க நிர்பந்திக்கப்படும் பெண்களின் துயரத்தை வெளிப்படையாக அவர் கதைகள் மூலம் கண்டித்தார். இதனால் லெபனானை ஆண்ட துருக்கிய சாம்ராஜ்யமே கொதித்து எழுந்தது. கலீல் கிப்ரானை நாடு கடத்தியது. மரோனைட் கத்தோலிக்க மடாலயம் இவரது நூலை ‘அபாயகரமான, புரட்சியைத் தூண்டும், நஞ்சு கலந்த நூல் மாணவ சமுதாயத்தை சீரழிக்கும் கொடிய நஞ்சு’ என்று பறைசாற்றி அறிவித்தது.
பின்னர் 1908ல் லெபனானை ஆண்ட துருக்கிய சாம்ராஜ்ஜியம் நாடு கடத்திய தண்டனையை ரத்து செய்தது. நாடு திரும்பிய கலீல் கிப்ரான், ‘தீர்க்கதரிசி’ நூலை ஆங்கிலத்திலும், ‘முறிந்த சிறகுகள்’, ‘சூறாவளி’, ‘கண்ணீரும் புன்னகையும்,’ ‘சமவெளியின் தேவதைகள்’, ‘ஊர்வலம்’, ‘அழகான அரிதான போதனைகள்’, போன்ற நூல்களை அரபி மொழியிலும் எழுதி வெளியிட்டார். இவரின் ‘அல் படாய் வால்டராயிப்’ என்ற நூலைத்தவிர மற்ற நூல்கள் அனைத்தும் ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளில் வெளிவந்துள்ளன.
‘தீர்க்கதரிசி’ உலகின் 20க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு லட்சக்கணக்கான பிரதிகள் வெளிவந்துள்ளது. 1957 ல் விளையாட்டு வீரரும் எபிஸ்கோபல் தேவாலயத்தின் போதகருமான ரைட்பார்பர் என்பார் 10 லட்சமாவது பிரதியை வாங்கினார். இன்று வரை இந்நூலின் விற்பனைப்பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
இவரின் ‘முறிந்த சிறகுகள்’ நூலை அரபு மொழி பேசும் உலகம் வரவேற்று போற்றிப் புகழ்ந்தது. பழைய இலக்கியபாணி போல் அல்லாமல், புதிய பாணியில் அவரையே கதைப்பாத்திரமாக்கி எழுதிய முதல் நூல் இது. ஆனால் கலைப்பண்பு மாறுபடவில்லை.
ஓவியக்கலையில் சிறந்து விளங்கிய கலீல் கிப்ரான் தனது கலைக்கூடத்தை பாஸ்டனில் நிறுவினார். நியூயார்க் நகரில் ‘மாண்ட்ரோல் காலரி’ ‘கினோட்லர் காலரி’ ‘டால் அன்டு ரிச்சர்ட்ஸ் காலரி’ போன்ற இடங்களில் தனது கண்காட்சியை நடத்தி உள்ளார். 1919ல் ’20 ஓவியங்கள்’ என்ற பெயரில் இவரின் ஓவியத்தொகுதி வெளிவந்தது.
இவர் எழுதிய மொத்த நூல்களின் எண்ணிக்கை 20. அவற்றில் 16 புத்தகங்களில் அவருடைய ஓவியங்கள் இடம் பெற்றுள்ளன. அவருடைய ஓவியங்களில் உள்ளார்ந்த பொருளும், எண்ணமும், தத்துவமும் பொதிந்து கிடக்கிறது. தன் வாழ்நாளின் இறுதிவரை திருமணம் செய்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
‘நாடோடி’ என்ற இவருடைய நூல் 52 உருவகக் கதைகளின் தொகுப்பு. இந்நூல் ஓவியங்கள் இணைப்புடன் தயாராகிக் கொண்டிருந்த போதே கலீல் கிப்ரான் 10.04.1931 அன்று இயற்கை எய்தினார். இவரது அனைத்து நூல்களும் வாழும் இலக்கியமாகத் திகழ்கிறது என்றால் அது மிகையல்ல.
நன்றி : ஜன சக்தி
16 ஜுன் 2009