( மெளலவி நூருல் அஜிம் ஹஸனீ
இமாம், நரிமேடு, பள்ளிவாசல், மதுரை )
இன்றைய காலத்தில் அதிகமான இளைஞர்கள் நண்பர்களைத் தாமே தேர்ந்தெடுத்து அந்த நபர்களிடம் அனைத்து கெட்ட நல்ல விசயங்களையும் பகிர்ந்து கொள்கிறார்கள். அனால் அந்த நபர்கள் உண்மையானவர்களா? என்பதை சிந்திக்க வேண்டும்.
“உன் நண்பனைக் காட்டு; உன்னைப் பற்றி கூறுகிறேன்” என்று ஒரு பழமொழி உண்டு. எனவே நாம், நல்லவர்களாகவும், கெட்டவர்களாகவும் உருவாகுவதற்கு நண்பர்கள் முக்கியமானவர்கள். எனவே அல்லாஹ் நல்ல நண்பர்களை தேர்ந்தெடுக்க கூறுகிறான். “ஈமான் கொண்டவர்களே ! அல்லாஹ்வை அஞ்சுங்கள். மேலும் உண்மையாளர்களுடன் சேர்ந்திருங்கள்.” (அல்குர்ஆன் 9:119) உண்மையாளர்கள் என்று யார் இருக்கிறார்களோ அப்படிப்பட்ட நண்பர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். நண்பன் எப்படி இருக்க வேண்டும்? இறையச்சம் உள்ளவராக இருக்க வேண்டும். “நல்ல நண்பனுக்கு உதாரணம், கஸ்தூரி விற்பவனை போன்று கஸ்தூரி நம் மீது படாவிட்டாலும் அதன் நறுமணம் கிடைக்கும் கெட்ட நண்பனுக்கு உதாரணம், கொல்லன் போல். புகையும், அழுக்கும் கிடைக்கும்” ( நூல் புகாரி). எனவே தான் நண்பனை தேர்ந்தெடுக்கும் வழி பற்றி கூறும் போது நபியவர்கள் “மூஃமினைத் தவிர நண்பனாக ஆக்காதே, தக்வா உள்ளவர் தவிர உன் உணவை யாருக்கும் கொடுக்காதே” என்று கூறினார்கள். (நூல்: அபூதாவூத்)
“ஒருவன் தன் நண்பனின் மார்க்கத்தில் இருக்கிறான். ஆகவே உங்களில் யார் எந்த மார்க்கத்தை தேர்ந்தெடுப்பது என்று சிந்திக்கட்டும்.”
ஸஹாபாக்கள் தங்கள் நண்பர்களாக நல்லவர்களை தேர்ந்தெடுத்ததின் காரணமாகத்தான் இன்றளவும் குர்ஆனும், விளக்க உரைகளும், ஹதீஸும், ஹதீஸின் விளக்க உரைகளும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அந்த நண்பர்கள் கெட்டவர்களாக இருந்தால் இவைகள் நம் கரம் கிட்டாமல் போயிருக்கும்.
நட்பின் வகையை கஃலீபா மஃமூன் ரஷித் (ஹிஜ்ரி 481) மூன்று வகையாகப் பிரிக்கிறார்கள். 1. உணவு போல். எப்போதும் உணவுத்தேவை போல் நல்ல நண்பன் எப்போதும் தேவை. 2. மருந்தைப் போல். தேவைக்கு தகுந்தாற் போல் பயன்படுத்த வேண்டும். அனைத்து தேவைக்கும் பயன்படுத்தக் கூடாது. 3. நோய் போல். நோய் வருவதை மனிதன் பயப்படுவான். அதிலிருந்து நீங்குவதற்கு முயற்சி செய்வான். இதேபோன்று கெட்ட சிந்தனை கொண்ட நபர்களை விட்டும் விலகி இருக்கனும். இல்லையேல் நோய் தாக்கியவனுக்கு ஏற்படும் சிரமம் போல் சிரமப்பட்ட வேண்டியிருக்கும்.
யாருக்காக நட்பு : உலகில் அல்லாஹ்விற்காக நட்பு கொள்ளும் போது எந்த கவலை இன்றி இருக்கலாம். மறுமையில் சொர்க்கத்தில் இருக்கலாம்.
ஏழு நபர்கள் அர்ஷின் நிழலுக்கு கீழ் இருப்பார்கள். அதில் ஒரு வகையினர் “அல்லாஹ்விற்காக பிரியம் கொண்டு சேர்ந்து அல்லாஹ்விற்காக பிரிந்தவர்கள்” ஆவர். (புகாரீ, முஸ்லிம்) மக்காவில் இருந்து நாடு துறந்து அல்லாஹ்விற்காக வந்த முஹாஜிர்களுக்கு மதீனத்து அன்சாரிகள் உதவி செய்த காரணத்தால் அல்லாஹ்வின் பொருத்தம் கிடைத்தது. அதிகமாக முஸ்லிம்களுடன் நட்புடன் இருக்க வேண்டும். ஏனெனில் அலீ (ரலி) கூறினார்கள். “முஸ்லிம்கள் இருவர் நண்பர்களாக இருப்பார்கள். அவர்களில் ஒருவர் மரணித்ததும் அந்த நபரிடம் அவரின் நண்பனைப் பற்றி விசாரிக்கப்படும். அந்த முஸ்லிம் நண்பர் நல்லவர். தொழுகை போன்ற நல்ல விசயத்திற்கு அழைப்பார் என்றும் நல்லவைகளை கூறி கலிமாவுடன் மரணிக்க வைத்து சொர்க்கத்தில் சேருங்கள் என்றும் கூறுவார்.
இரண்டு காபிர்கள் நண்பர்களாக இருப்பார்கள். அதில் ஒருவர் மரணித்ததும் அவரின் காபிர் நண்பர் பற்றி கேட்கப்படும். அந்த காபிர் நண்பன் கெட்டவன். நல்ல விசயத்திற்கு போவதை விட்டும் தடுத்தவன். எனவே அவனை காபிராகவே மரணிக்கச் செய்து நரகத்திற்கு அழைத்து வாருங்கள் என்று கூறுவான். (இப்னு கஃதீர்) ஆகவே தான் முஸ்லிம் நண்பர்களாக தேர்ந்தெடுக்க வேண்டும். நண்பனிடம் இருக்கும் தன்மைகள் இரண்டு. 1. ஆபத்திலும் உதவ வேண்டும். கரடி ஒன்று விரட்டிய போது மரம் ஏறத் தெரிந்த நண்பனுடன் சென்றவன் தனியாக விடப்பட்ட கதை அனைவரும் அறிந்தது ! 2. சந்தோஷத்தில் முன்னுரிமை. அபூபக்கர் (ரலி) யின் தந்தை அபூகுஹாபா அவர்கள் இஸ்லாத்தை ஏற்று நபி (ஸல்) அவர்களின் கையில் பைஅத் செய்தபோது, அபூபக்கர் (ரலி) அவர்கள் அழுதார்கள். நபியவர்கள் காரணம் கேட்டபோது என் தந்தை இஸ்லாத்தை ஏற்றதை விட உங்கள் சிறிய தந்தை அபூதாலிப் இஸ்லாத்தை ஏற்று இருந்தால் தாங்கள் சந்தோஷம் அடைந்து இருப்பீர்களே. உங்கள் சந்தோஷம் தான் முக்கியம் என்று கூறி அழுதார்கள். அதைக்கேட்டு நபி(ஸல்) அவர்களும் அழுதார்கள். (அறிவிப்பாளர் : அனஸ் (ரலி) நூல் : ஹாகிம்)
3. ரகசியம் பேணுதல் : ஒருமுறை நான் (அனஸ் – ரலி) சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டு இருந்தேன். அப்போது என்னிடம் நபி (ஸல்) அவர்கள் வந்து ஸலாம் கூறினார்கள். பிறகு தேவைக்காக என்னை அனுப்பினார்கள். வேலையை முடித்து விட்டு தாமதமாக வீட்டிற்குச் சென்ற போது தாமதத்தின் காரணம் பற்றி தாயார் கேட்டார்கள். நான் நபி (ஸல்) வேலை கொடுத்ததைக் கூறிய போது அது என்ன என்று தாயார் கேட்டார்கள். அது ரகசியம் என்றேன். யாரிடமும் கூறாதே என்று தாயார் கூறினார்கள். இந்த ஹதீஸை அறிவிக்கும் அறிவிப்பாளருக்கு கூட அந்த ரகசியத்தை அனஸ் (ரலி) கூறவில்லை. (நூல்: முஸ்லிம் – 2482)
இப்படிப்பட்ட தன்மைகள் கொண்டவர்களை நண்பனாக தேர்ந்தெடுத்தோமானால், நமது மரியாதையை மக்களிடத்திலும், நமது தன்மையை மலக்குகள் இடத்திலும், மறுமையில் சொர்க்கத்திலும் அல்லாஹ் உயர்த்துவான். நல்ல நண்பர்களை தேர்ந்தெடுப்போம். இம்மை மறுமையில் சந்தோஷமாக இருப்போம்.
நன்றி :
மறைச்சுடர் மாத இதழ்
ஏப்ரல் 2012
ஜமாதுல் அவ்வல் 1433