பராமரிப்பின்றி அழியும் ஆறு, கண்மாய்கள் கேள்விக்குறியாகும் விவசாயத்தால் கவலை

முதுகுளத்துார்

முதுகுளத்தூர்:முதுகுளத்தூரில் பராமரிப்பின்றி ஆறுகள், கண்மாய்கள் அழிந்து, கேள்விக்குறியாகும் விவசாயத்தால், விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். முதுகுளத்தூர் தாலுகாவில், 267 கிராமங்களில் உள்ள 182 கண்மாய்கள் மூலமாக, 6,046 எக்டேர் விவசாய நிலங்கள் பயன்பெறுகின்றன. இந்த நிலங்களுக்கு பிரதான ரகுநாதகாவிரி ஆறு, 995 மீ., நீளம் கொண்ட முதுகுளத்தூர் பெரிய கண்மாய், கிருதுமால் நதியிலிருந்து பிரிந்து உருவாகும் கூத்தன்கால்வாய் மூலமாக தண்ணீர் கிடைத்து வந்தது.

ஆனால் ரகுநாத காவிரி ஆறு, முதுகுளத்தூர் பெரிய கண்மாய்கள் போதிய மராமத்து செய்யாததாலும், 10 ஆண்டுகளுக்கும் மேலாக நீர் வரத்து இல்லாததாலும், நீர் ஆதார அமைப்புகள் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டன. கருவேல மரங்கள் அடர்ந்து காடாய் காட்சி தருகிறது. இவை தேங்கும் தண்ணீரையும் வேகமாக உறிஞ்சிவிடுதால் நீரின்றி விவசாயம் பொய்த்து வருகிறது. நீர்நிலைகள் விளையாட்டு மைதானங்களாக பயன்படுகின்றன.

முதுகுளத்தூர், கடலாடி, கமுதி தாலுகாக்களில் 60 சதவீத நிலங்களில் விவசாயம் செய்ய முடியவில்லை. கருவேல மரங்களை வளர்த்து, கரிமூட்ட தொழிலுக்கு, விவசாயிகள் மாறி வருகின்றனர். மக்கள் தொகை பெருக்கத்தால், நகர்புறங்களுக்கு அருகேயுள்ள நிலங்கள் “பிளாட்’ டுகளாக உருமாறி வரும் வேளையில், வரும் ஆண்டுகளில் பருவமழை பொய்த்தாலோ,ஆதார அமைப்புகளை மராமத்து செய்யாவிடில், சிறுமழைக்கு கிடைக்கும் தண்ணீரைகூட சேமிக்ககூட முடியாமல், விவசாயம் பாழாகும் அபாயம் ஏற்படும்.இதுகுறித்து வைகை பாசன காக்கூர் பகுதி சங்க தலைவர் சேதம்மாள் கூறியதாவது: பிரதான வைகை ஆற்றிலிருந்து முதுகுளத்தூர், கமுதி, கடலாடி தாலுகாக்களுக்கு தண்ணீர் வருவதற்கான அமைப்புகள் உருவாக்கபடவில்லை. வீணாக கடலுக்கு செல்லும் தண்ணீரை, பார்த்திபனூர் அருகே வைகையிலிருந்து பிரிந்து உருவாகும், கிருதுமால் நதி வழியாக, மூன்று தாலுகா விவசாயிகள் பயன்பெறும் வகையில், கொண்டு வருவதற்கு எம்.பி., எம்.எல்.ஏ., க்கள், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

வான்மழையை மட்டுமே நம்பி விவசாயம் செய்யும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பருவ மழை பொய்க்கும் போது, கடன் வாங்கி விவசாயம் செய்த விவசாயிகள், மேலும் பாதிக்கபட்டு, விபரீத முடிவுகளை தேடும் அவலம் உள்ளது, என்றார்.நீர்நிலைகளை மழைகாலத்திற்கு முன் சீரமைப்பதோடு, புதிய நீர்வழி அமைப்புகள் ஏற்படுத்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *