தமிழ் கம்ப்யூட்டர் சாப்ட்வேர் உருவாக்கத்துக்கு தனி மையம்

கணிணி பகுதி மேலும்...

சென்னை: “தமிழ் கம்ப்யூட்டர் சாப்ட்வேர் உருவாக்கத்துக்கு தனி மையம் உருவாக்கப்படும். அதற்காக, 50 லட்சம் ரூபாய் ஒதுக்கப்படுகிறது’ என, தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை, மானிய கோரிக்கையில், கூறப்பட்டுள்ளதாவது: தமிழ் கம்ப்யூட்டர் சாப்ட்வேர் உருவாக்க தேவையான கம்ப்யூட்டர், சாப்ட்வேர், கருவிகள் மற்றும் சேவைகளை உள்ளடக்கிய, சாப்ட்வேர் உருவாக்கும் மையம், தமிழ் இணைய கல்வி கழகத்தில் நிறுவப்படும். ஆக்கப்பூர்வ எண்ணங்களைக் கொண்டிருப்போர், ஆய்வுகளையும், பரிசோதனைகளையும், இம்மையத்தில் மேற்கொள்ளலாம். இதற்காக, தமிழ் இணைய கல்வி கழகத்துக்கு, 50 லட்சம் ரூபாய் அளிக்கப்படுகிறது.

மத்திய அரசு ஒப்புதல் : அரசின் சேவைகளை, மின் ஆளுமைத் திட்டம் மூலம் வழங்க, மத்திய அரசு, மின் மாவட்டத் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. வருவாய், சமூக நலம், பிற்பட்டோர், மிகவும் பிற்பட்டோர், ஆதிதிராவிட நலத் துறைகளில், சேவைகள், மின் ஆளுமைத் திட்டம் மூலம் அளிக்கப்படுகிறது. அரியலூர், பெரம்பலூர், கோவை, திருவாரூர், கிருஷ்ணகிரி, நீலகிரி மாவட்டங்களில், முதல்கட்டமாக, இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. பிற மாவட்டங்களிலும், இத்திட்டத்தை விரிவுபடுத்த அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

சேவை தொகுப்பு : பல அரசு துறைகள், இணையதளம் மூலம் சேவைகளை வழங்கி வருகின்றன. இணைய தள முகவரிகளை நினைவு வைத்துக் கொள்வதில், பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். இதனால், அரசின் சேவை தொகுப்பை, இணைய தளத்தில் வெளியிட திட்டமிடப்பட்டு உள்ளது.
சேவை தொகுப்பை உருவாக்க, தனி நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு, அதற்கான சாப்ட்வேரும் தயாரிக்கப்பட்டு வருகிறது.

ஒரே தொலைபேசி எண் : அரசின் சேவைகளை பெறும் வகையில், பொதுமக்கள் தொடர்பு மையத்தை, சென்னையில் அமைக்க, மத்திய அரசின் அனுமதி கோரப்பட்டுள்ளது. இந்த மையத்தின் தொலைபேசி எண், நாடுமுழுமைக்கும் ஒரே எண்ணாக இருக்கும். மையத்தை, முதல் மூன்றாண்டுகள் பராமரிக்க, மத்திய அரசு நிதி அளிக்கும். அதன்பின், மாநில அரசு பராமரிக்கும். இவ்வாறு, மானிய கோரிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *