’தர்மம் தலைகாக்கும் தக்க சமயத்தில் உயிர்காக்கும்.’ ………
மதிய உணவு இடைவேளையில் நண்பர் அழகாக பாடிக்கொண்டிருந்தார்.
பொதுவாக, ”தர்மம் இருக்கப்பட்டவனுக்குப் பொருந்தும்; என்றும்இல்லதாவன் நிலை என்ன? அவன் தலையைக் காப்பதுகேள்விக்குறியோ?? என்று விவாதம் சூடிபிடித்தது.
தர்மம் என்பது அனைத்து மதத்திலும் மிகவும் வலியுறுத்தப்பட்டஒரு வழிமுறை.
ஒரு அரைத்துண்டு பேரிச்சம் பழத்தினையாவது தர்மம் செய்து அதன் மூலம் இந்தஉலகில் மட்டும் இல்லை, மறுஉலக வாழ்விலும் நரக நெருப்பிலிருந்து தலையைத் தக்கவைத்துக்கொள்ளும் சூட்சுமம் கற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது. அட அது இதுன்னு ஒன்றுமே இல்லையா.. கவலையேவேண்டாம், ஒரு புன்னகை ஒரே ஒரு புன்னகை நம் எதிரிலிருப்போரைப் பார்த்து புன்னகை செய்தாலேபோதும் தர்மம் செய்த புண்ணியம் நிச்சயமுண்டு என்று நபிமொழியினை மேற்கோளிட்டும் விவாதம்தொடர்ந்து நடந்தது கொண்டிருந்தது.
’அதெப்படீங்க.. நாம் ஒருவரைப் பார்த்து புன்னகைத்தால் பதிலுக்குஅவரும் புன்னகைப்பார் அவ்வளவுதான். எப்படி.அது தர்மமாகும்? லாஜிக் இடிக்குதே?’ இது ஒரு நண்பர்.
‘இதிலே தலைகாக்கும் தந்திரம் எங்கிருக்கிறது?’ இது மற்றொரு நண்பர்.
அறிவியல் பேசலாமா? அவர்களின் கவனத்தைத் திருப்பினேன்.
உண்மைதான், நாம் ஒருவரைப் பார்த்து புன்னகைத்தால் பதிலுக்குஅவரும் புன்னகைப்பார். அப்போது நம் தலையை மட்டுமல்ல அவரின் தலையையும் நம் புன்னகை காக்கிறது.
நாம் கருவில் இருக்கும் போதே கற்றுக்கொண்டதுதான் புன்னகை.
ஆம்,முப்பரிமான அல்ட்ராஸோனிக் தொழில்நுட்பம் மூலம் கருவறையில் இருக்கும் சிசு புன்னகைப்பதுகண்டறியப்பட்டுள்ளது. நாம் பிறக்கும் போதும் புன்னகைக்கிறோம், பிறந்தபின்னும் புன்னகைக்கிறோம்.பிறந்த குழந்தைகள் தூக்கத்திலும் புன்னகைப்பதைப் பார்த்திருப்போம். கண்பார்வை இல்லாதகுழந்தைகள் கூட மனிதர்களின் குரலறிந்து புன்னகை புரிகின்றனர்.
மனிதர்களின் தோற்றம் குறித்து ஆராய்ந்த சார்லஸ் டார்வின் எழுதியThe Origin of the Species என்ற நூலில் முகத்தில் உள்ள தசைகள் ஏற்படுத்தும் மாற்றங்களின்விளைவுகள் குறித்த கோட்பாடுகள் வரும்போது புன்னகை பற்றி பேசப்படுகிறது.
ஒரு மனிதன் புன்னகை புரியும் நேரத்தில் அவனின் முகத்தசைகளின்மாற்றங்களின் மூலம் தான் மிகவும் மகிழ்ச்சியுடன் இருப்பதாய் உணர்கிறான் என்று டார்வின்சொல்கிறார்.
அந்தக் கோட்பாட்டின் அடிப்படையில், 2009ம் ஆண்டில் ஜெர்மனியில்ஒரு ஆராய்ச்சி நிகழ்த்தப்பட்டது. எம்.ஆர்.ஐ ஸ்கேன் மூலம் புன்னகை புரிவதின் மூலம் மூளையில்நடைபெறும் மாற்றங்கள் குறித்து ஆராயப்பட்டபோது. புன்னகை மகிழ்வான மனநிலையினைத் தருவதுஉறுதியானது.
இந்த புன்னகை என்ன விலை தெரியுமா?
நாம் புன்னகை செய்யும் நேரத்தில்நம் மனதில் (மூளையில்) ஏற்படும் மகிழ்ச்சித் தூண்டலினால் 2000 சாக்லேட்டுகள் சாப்பிட்டஅளவிற்கு மகிழ்வு ஏற்படுகிறதாம். காசைப்பார்த்து தான் காந்தி தாத்தா போல புன்னகை புரிவேன்என்று சொல்ல வேண்டியதில்லை. உண்மையாக தூய மனதோடு புன்னகைத்தால் 16,000 பவுண்ட்
( ஏறத்தாழ13பதிமூன்று இலட்சம் ரூபாய்) நம் கையில் இருந்தால் ஏற்படும் அளவுக்கு மகிழ்வு ஏற்படுகிறதாம்.(போலியான புன்னகையினை மூளை அங்கீகரிப்பதில்லையாம்).
அளவுக்கு மிஞ்சிய சாக்லேட்டுகள் வேண்டுமானால் உடலுக்கு தீங்குதரலாம். ஆனால் அளவுக்கு மீறிய புன்னகைகள் உடலுக்கும் மனதுக்கும் நன்மை தரும்.
மனஅழுத்தம்,இரத்த அழுத்தம் ஆகியவற்றைக் குறைக்கிறது. மனதையும் உடலையும் இதமாக வைத்துக்கொள்ள உதவும்’எண்ட்ரோஃபின்ஸ்’ அளிக்கிறது.
புதுப்பணக்காரர் மார்க் ஸூக்கர்பெர்க் முகத்தில் தவழும் புன்னகையும்,
பணமென்றால் என்னவென்றே அறியாத புதுக்குழந்தையின் முகத்தில் தவழும் புன்னகையும் ஒரேமாதிரியாய் இருக்கும்.ஏன் தெரியுமா?
குழந்தை ஒருநாளைக்கு 400 முறை புன்னகைக்கிறதாம்.
ஒரு சிறு புன்னகை அனைத்தையும் விட மாபெரும் தர்மம் தானே??
அனைவரின் முகத்திலும் பூத்தது புன்னகை!