இதோ ஒரு காக்கா கதை !
( கவி சேலம் கே. பஷீர் )
ஒட்டிய கன்னங்களும்
உட் குழிந்த கண்களும்
பரட்டைப் பஞ்சுத் தலையுடனே
வேப்பமரத் தடியினிலே ………
பருப்பு மசால் வடையினைப்
பாட்டி பாங்குடன் சுட்டனளே ! – வாசமதை
இருப்புக் கொள்ள முடியாமலே
வடை ஒன்றை வாய்விட்டுக் காகம் கேட்டதே !
காசேதுமில்லாமல் வடை
லேசாய் கிட்டிடுமா ? என்றனள் – பாட்டி !
மாசேதுமில்லாமல் நான்
பேஷாய் உழைப்பேன் என்றது – காகம் !
சுள்ளி விறகினைப் பொறுக்கி வந்து
சுருக்காய்த் தந்திடுவேன் – கூந்தலை நீ
அள்ளி முடிப்பதற்குள் காகம் நான்
அழகாய் வந்திடுவேன் பார் !
அழகில்லா அண்டங்காக்கை – தனது
அலகால் ஊழியஞ்செய்து
உழைத்தால்தான் உணவு என்றுணர்ந்து
ஊக்கத்துடன் வடையுடன் சென்றமர்ந்ததே !
ஏய்த்துப் பிழைக்கும் தொழிலையே
எடுத்தாளும் தந்திர நரி – சிரம்
சாய்த்து, ‘எழில் மிகுக்காக்கையே – நீ
பாட்டொன்று பாடு’ என யுத்தி செய்தது !
புறஞ்சொல்லித் திரிபவனையும்
முகத்துக்கு நேரே புகழ்பவனையும்
திறம் பேசிக் கலகமிட்டுத் திரிபவனையும் – இந்த
செகமீதில் நம்பக் கூடாதென நினைத்தது காகம் !
கஷ்டப்பட்டுழைத்துப் பெற்ற அமுத வடையை – அதே
கூட்டினுள் பத்திரமாகப் பதித்தது’ – நரியே நீ
நஷ்டப்பட்டுப் போக வேண்டும் – நிஜமாகவே
பாடப்போகின்றேன்’ என்றது காகம் !
ஏமாற்றமடைந்த எத்தன் நரி – காக்கையை
முறைத்துப் பார்த்தது கடுகடுப்புடனே !
’தடுமாற்றம் வேண்டாம் தன்மானத்துடன்
உழைத்துச் சாப்பிடுக!’ – என்றுரைத்தது காகம் !
உழைப்பின்றி வராது வெற்றிகள் – கடின
உழைப்பிற்கினை ஏதுமில்லை – நாட்டில்
உழைத்தோரே உயர்ந்தார்கள் – எனவே
உழைக்க வாரீர் தோழர்களே !
நன்றி : இனிய திசைகள் : மே 2007