* * * பொங்கல் வாழ்த்து * * *

இலக்கியம் கவிதைகள் (All)

* * * பொங்கல் வாழ்த்து * * *

மங்கல அணியும் பொட்டும்
. . மரகத மணிபோற் கண்ணும்
குங்கும நுதலும் தண்டைக்
. . குலுங்கிடும் காலும் மஞ்சள்
தங்கிய முகமும் வண்ணத்
. . தடம்பணைத் தோளும் கொண்ட
மங்கையர் கைபார்த் துண்ண
. . மலர்கவே பொங்கல் நன்னாள்.

பூச்சிறு மழலை மேனி
. . புத்துடை நகைகொண் டாட
ஆச்சியர் துணைவர் சேர
. . ஆனந்தத் தமிழ்ப்பண் பாட
பாற்சுவை வழங்குநன் னாள்
. . பழந்தமிழ் வளர்த்த பொன் னாள்
போற்சுவை நாளொன் றில்லை
. . பொலிகவே இன்பப் பொங்கல்.

கவிதை பிறந்த கதை:

ஆண்டு 1972. திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் ‘பி.யூ.சி’ படித்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது ’கண்ணதாசன்’ என்றொரு மாத இலக்கிய இதழினைக் கவியரசர் நடத்தி வந்தார். எனது அண்ணன், அலைந்து திரிந்தாவது அதனை வாங்கிக்கொண்டு  வந்துவிடுவார் (இதழ் வெளி வருவதே சிரமம்; அதுவும் காலத்தில் வராது. மிகுந்த நஷ்டத்தில் நடத்திக் கொண்டிருந்தார் என பின்னால் அறிந்தேன்) அதில் அவருடைய கவிதைகளும், மற்ற கவிஞர்களின் தரமான படைப்புகளும் இடம் பெறும். ’புதுக் கவிதைகள்’ அதிகம் புழக்கப்படாத ஒரு காலம் அது. இலக்கணம் சார்ந்த அந்தப் பாடல்களை, நின்று நிதானமாக அசைபோட்டு உள்வாங்கிக் கொள்வேன். படிப்பதோடு சரி. எழுதுவது என்பதைப் பற்றி நினைத்துப் பார்த்ததுகூட இல்லை. ஆனாலும் என் செய்வது… விதி வலியது. அந்த நாளும் வந்தது.

அது ஜனவரி மாதம். எங்கு பார்த்தாலும் பொங்கல் வாழ்த்து மடல் விற்பனை ஆகிக் கொண்டிருந்தது. சரி.. நண்பர்களுக்கு வாழ்த்து அனுப்பலாம் என்று, அட்டைகளை எடுத்துப் பார்த்தேன். அப்பொழுதெல்லாம் வாழ்த்து மடல்கள் தபால் அட்டை வடிவில்தான் இருக்கும். ஒரு பக்கம் முழுவதும் ஒரு ஓவியமோ அல்லது புகைப்படமோ இருக்கும். மற்ற பக்கத்தின். பாதியில் முகவரியும், மீதியில் வாழ்த்துக் கவிதையும் இருக்கும். என் கவனம் எப்பொழுதும் , அதிலுள்ள படத்தில் இருக்காது; பாடலில்தான் இருக்கும். கடையிலுள்ள அனைத்து மடல்களையும் பார்த்துவிட்டேன். எந்தப் பாடலும் என் மனதைக் கவரவில்லை (கண்ணதாசனின் தீவிர ரசிகனை அவ்வளவு சுலபத்தில் திருப்தி செய்துவிட முடியுமா என்ன?)

அப்பொழுது ஒரு குரல்(எண்ணம்) உள்ளிருந்து…

‘இதுக்கு நீயே எழுதிடலாம்’.

‘அப்படியா’

‘அதானே! எழுதிதான் பார்ப்போமே’

அந்தக் கடைக்கு முன்னால் இருந்த மரத்தினடியில் அமர்ந்தேன். மேலே உள்ள வரிகள் அனைத்தும் கொஞ்ச நேரத்தில் வந்து கொட்டியது. தொடர்ந்து பொங்கல் வாழ்த்துக் கவிதைகளை மட்டும் ஒரு மணி நேரமாய் செய்த வாசிப்பு; கவிஞரின் மாத இதழ் கொடுத்த கவிதை ஆழம். இரண்டின் விளைவே இந்த வரிகள்.

அத்தோடு சரி. அதன் பிறகு நானும் என்னென்னவோ முயற்சித்துப் பார்த்து விட்டேன். 4 வரிகள்கூட வராது…. வந்தாலும் அதில் ஒரு வரிகூடத் தேறாது. ’சரி.. சரி.. இது ஏதோ ஒரு விபத்து. இத்தோடு எழுதுறத மறந்துடு’ என்று கூறிக்கொண்டு, நல்ல வாசகனாக, நல்ல ரசிகனாக மட்டும் இருந்து வந்தேன். (மீண்டும் இதுபோன்ற சில, பல விபத்துகள் 40 வது வயதில் ஏற்பட்டது….  அது ஒரு தனிக் கதை)

அன்புடன்

ஜாஃபர் அலி, துபாய்

haran13@gmail.com

=====================================================

‘முதல் கவிதை’ என்றால் புதிதாக ஏதும் எழுதவேண்டாமே… தூசு தட்டிப் போட்டு விடலாம் என்று எண்ணி, யோசித்ததில் எனது முதல் கவிதை‘பொங்கல் வாழ்த்து’ என்பது நினைவுக்கு வந்தது. அந்தப் பாடலைப் பிறகு (2007-ல்) ‘அன்புடன்’ எனும் கூகுள் முழுமத்தில் போட்டிருந்தேன். கணினியில் தேடுவதைவிட இணையத்திலிருந்து அந்தப் பாடலை எடுத்துவிடுவது எளிது என்று எண்ணி, கூகுளில் தேடினேன். அப்பொழுதுதான் தெரிந்தது,எனது அந்தப் பாடல், பல நபர்களால், அவரவர்களின் வலைத் தளங்களில்,அவர்களே எழுதியதுபோல இடப்பட்டுள்ளதை.

எப்படியோ….. குடத்தில் இருந்த விளக்கைக் கோபுரத்தில் வைத்திருக்கிறார்கள். அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி !!!

=====================================================

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *