பற்பலவாய் நூல்கள் படைக்களிக்கப் பட்டிருந்தும்
பொற்புறவே செந்நாப் புலவனன்று – நற்றமிழில்
செய்த எழுசீர் செஞ்சொற் கழஞ்சியம்போல்
பொய்யா மொழியிலையிப் பார்.
திருக்குறளே தேசியநூல் தொல்லுலகில் வாழ்வோர்
இருபேறும் பெற்றுய்ய ஏற்ப – பெருமான்
பெருங்கடல்க ளேழும் பரந்தவா னேழும்
குறுக்கிப் புகுத்தியசெம் பா.
இல்லாத தொன்றில்லை இப்புவியோர் என்றென்றும்
நல்வழியில் பாதம் நிலைநிறுத்த – வெல்லாச்சொல்
கோத்தளித்தார் வள்ளுவனார் கோனானார் ஊழிவரை
பாத்தமிழ் செய்வாருள் தான்.
பன்மொழிகள் தம்வசமாய்ப் பற்றி அவைமொழிவோர்
இன்புற்றே இல்லறத்தில் ஏற்றமுறச் – சொன்னஐயன்
தீர்க்க தரிசனத்தைச் செப்பச்சொல் லுண்டாமோ
பார்கொள் பொதுநூல் குறள்.
நூறு மதங்கள் நிலைத்தாலும் அவ்வவைகள்
கூறுகின்ற போதனைக்குக் கோதறவே – ஆறறிவு
மாந்தர்க் குரைத்துள்ளார் முற்றும் பொதுவாகும்
தீந்தமிழின் வேந்தர் தெளிந்து.
காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரிபுத்தீன்
இலங்கை