கற்பனை கலக்காத அற்புதமாம் திருக்குறள்
ஒப்பனை இல்லாமல் ஓங்கிநிற்கும் அழகன்றோ?
அப்பனை ஓலையில் எழுதிவைத்த சாசனத்தை
அழியாமல் காத்தவரை நன்றிசொல்லி போற்றிடுவோம்!
தீந்தமிழின் சுவையெல்லாம் செப்புதற்கு
ஓராயிரம் புலவர் இங்கே தோன்றிடலாம்!
ஈராயிரம் ஆண்டுகள் முன்பாக – தமிழ்
வாழ்ந்ததற்கு அடையாளம் திருக்குறளே!!
உலகமெங்கும் பரவிநிற்கும் நூலிது என்பதை
உணர்ந்தவன் வள்ளுவன் எனலாமா?
உலகவாழ்வின் சூத்திரங்கள் சுருங்கச்சொல்லி
பொருள்நிறைந்த பொக்கிஷத்தைப் படைத்தாரே!
எந்தவொரு நாட்டினர்க்கும் பொதுவாக
எழுதுவது அப்படியொன்றும் எளிதில்லை!
எடுத்தியம்பும் கருத்தெல்லாம் ஏற்கச்செய்யும்
ஏற்றமிகு குறளுக்கு இங்கே நிகரில்லை!!
அரிதினிலும் அரிதான குறள் படைப்பை
அறியாத மானிடரே வீணன்றோ?
அறிவின் சுடர்வீசும் ஆதவனாய் குறளாசான்
அகிலத்திற்கு வழிகாட்டும் நூலன்றோ?
பட்டுத்தெறிக்கின்ற முத்துக்கள் போலாங்கே
சுட்டிக்காட்டுகின்ற பொருள்யாவும் மேவுதன்றோ?
ஒன்றரை அடிதான் அதன் உயரம் என்றாலும்
உலகமே அதற்குள்ளே அடங்குதன்றோ?
நன்னெறிகள் வகுத்துதினம் நாட்டை நடத்துகின்ற
நல்லோரே சிந்திப்பீர்! நற்றமிழின் ஊற்றுக்கண்
திறந்தபடி வள்ளுவனார் யாத்தளித்த திருக்குறளே
தேசியநூலாக்கி தேசத்தைக் காத்திடுவோம்!
அன்புடன்
காவிரிமைந்தன்
வானலை வளர்தமிழ் – ஆலோசகர்
தமிழ்த்தேர் – ஆசிரியர்