(இஸ்லாமியத் திருமணங்கலின் போது ஓதப்படும் ‘நிக்காஹ் குத்பா’ திருமண உரையின் சாரம் )
தமிழாக்கம் : முதுவைக் கவிஞர் ஏ. உமர் ஜஹ்பர் பாஜில் மன்பயீ
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமான அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கிறேன்.
எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே !
அந்த அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்கிறேன், அவனிடமே உதவி தேடுகிறேன், அவனிடமே பாவமன்னிப்புத் தேடுகிறேன், அவனையே விசுவாசிக்கிறேன், அவனையே பொறுப்பாளனாக ஆக்கிக் கொள்கிறேன்.
அந்த அல்லாஹ் நேர்வழிப்படுத்தியவனை யாரும் வழி கெடுக்க முடியாது. அவன் வழி கெடுத்தவனை யாரும் நேர்வழி படுத்த முடியாது.
நிச்சயமாக அல்லாஹ் ஒருவன் என்று சாட்சி கூறுகிறேன். நிச்சயமாக முஹம்மது (ஸல்) அவர்கள் அவன் அடியாராகவும் அவன் தூதராகவும் இருக்கிறார் என்றும் சாட்சி கூறுகிறேன். உண்மையைக் கொண்டு சுபசோபனம் சொல்பவராகவும் எச்சரிக்கை செய்பவராகவும் அனுப்பி வைக்கப்பட்ட தூதராக அவர் இருக்கிறார்.
சபையோர்களே !
அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான். விசுவாசிகளே ! அல்லாஹ்வை பயந்து (நடந்து) கொள்ளுங்கள் ! நீங்கள் முஸ்லிம் அல்லாதவர்களாக மரணித்து விட வேண்டாம்.
மானிடர்களே ! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள். (மானிடர்களாகிய) உங்கள் யாவரையும் அவன் ஒரே ஆத்மாவிலிருந்து தான் படைத்தான். அவரில் இருந்தே அவர் மனைவியையும் படைத்தான். பின்னர் அந்த இருவரில் இருந்து அநேக ஆண்களையும், பெண்களையும் (பிறக்கச் செய்து) பரவச் செய்தான். எனவே அல்லாஹ்வையே நீங்கள் பயந்து கொள்ளுங்கள்.
அவனைக் கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளைக்) கேட்டுக் கொள்கிறீர்கள். மேலும் உங்கள் இரத்தப் பந்த உறவினர்களையும் ஆதரியுங்கள். நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கண்காணிப்பவனாக இருக்கிறான்.
மேலும், உங்களுக்குப் பிடித்தமான பெண்களை இரண்டாகவோ, மூன்றாகவோ, நான்காகவோ மணமுடித்துக் கொள்ளுங்கள். இவர்களிடையே நீங்கள் நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தால் ஒரு பெண்ணை மட்டுமே (மணந்து கொள்ளுங்கள்) இதுவே நீங்கள் அநியாயம் செய்யாமல் இருப்பதற்குச் சுலபமான வழியாகும்.
நீங்கள் (திருமணம் செய்து கொண்ட) பெண்களுக்கு அவர்களுடைய மஹர் (திருமணக்கொடை) களை மகிழ்வோடு கொடுத்து விடுங்கள். அவர்கள் (மனைவியர்) உங்களுக்கு ஆடையாகவும் நீங்கள் (கணவர்) அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கிறீர்கள். உங்கள் மனைவிகளை நீங்கள் அவர்களிடம் நிம்மதி பெறுவதற்காக உங்களிலிருந்தே அவன் படைத்ததும் உங்களுக்கிடையே அன்பையும், கிருபையையும் உண்டாக்கி வைத்ததும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும். சிந்தித்து உணரக்கூடிய சமூகத்திற்கு நிச்சயம் பல அத்தாட்சிகள் உள்ளன.
நீங்கள் ஒற்றுமை என்னும் கயிற்றைப் பற்றிப்பிடியுங்கள். பிரிந்து நிற்காதீர்கள். எவர் அல்லாஹ்வையும் அல்லாஹ்வின் தூதரையும் பின்பற்றி நடக்கிறார்களோ அவர்கள் மகத்தான வெற்றி பெறுவார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் :
திருமணம் எனது வழிமுறை. யார் அதைப் புறக்கணிக்கிறாரோ அவர் என்னைச் சார்ந்தவர் அல்ல. வாலிபர்களே ! உங்களில் சக்தி பெற்றவர் திருமணம் செய்து கொள்ளுங்கள்.
திருமணம் செய்து அதிகமான குழந்தைச் செல்வங்களை பெற்றுக் கொள்ளுங்கள். உங்களைக் கொண்டு மறுமை நாளில் பெருமை கொள்வேன்.
ஒரு பெண் அவளுடைய செல்வத்திற்காக, அவள் அழகுக்காக, அவளின் குலத்திற்காக, அவளின் மார்க்கப்பற்றுக்காக மணமுடிக்கப்படுகிறார். இவர்களில் மார்க்கப் பற்றுள்ள பெண்ணையே நீங்கள் தேர்ந்தெடுத்துத் திருமணம் செய்து கொள்ளுங்கள்.
அல்லாஹ் உங்கள் இருவருக்கும் வாழ்வின் அனைத்து அபிவிருத்திகளையும் வழங்குவானாக ! நற்செயல்களில் உங்கள் இருவரையும் ஒன்றிணைந்து வைப்பானாக ! இறைவா எங்கள் பிரார்த்தனையை ஏற்றுக் கொள்வாயாக ! எல்லாப் புகழும் இறைவனுக்கே !