முதுவை முஹ்ஸின்
( இரண்டு உண்மைகள் )
அப்போது நான் திருநெல்வேலியில் உயர்நிலைப்பள்ளி மாணவன். முழு ஆண்டு பொதுத்தேர்வு முடிந்து விடுமுறையில் விடுதியிலிருந்து ஊர் வந்து கொண்டு இருக்கிறேன். வாரப் பத்திரிக்கை, மாதப் பத்திரிக்கை, கதைப்புத்தகங்கள் எதுவுமே நாங்கள் படிக்கக் கூடாது. பள்ளிக்கூடப் புத்தகங்கள் தவிர எந்தப் புத்தகங்களும் எங்களிடம் இருக்கக் கூடாது. இது எங்கள் விடுதியின் சட்ட திட்டங்களில் ஒன்று. மாணவர்கள் பள்ளிப் படிப்பிலே மட்டும் கவனமாயிருக்க வேண்டும் என்ற நல்லார்வத்தில் ஏற்படுத்தப்பட்ட நல்ல எண்ணத்தின் திட்டம் அப்படி ஏதாவது ஒரு சிறுவேறு புத்தகங்கள் ஒரு மாணவனிடத்திலே இருப்பது விடுதிக் காப்பாளரின் கண்களிலே பட்டுவிட்டால் ……………. தொலைந்தது…………… அவனுக்கு இரண்டொரு வேலை உணவுகள் கட்டாகிவிடும்.
இந்த அச்ச உணர்விலே அடங்கிக் கிடக்கும் எங்களுக்கு அவிழ்த்து விட்டால் எப்படி இருக்கும்? காய்ந்த மாடு கம்பில் விழுந்த கதையாகத் தானே இருக்கும்? ஆம் ! அப்படித்தான் விடுமுறையில் அவிழ்த்து விடப்பட்ட நான் திருநெல்வேலி ஜங்ஷன் பேருந்து நிலையத்தில் கண்ணில்பட்ட சில புத்தகங்களை வாங்கிப் பையில் திணித்துக் கொண்டு பஸ்ஸில் ஏறி அமர்ந்தேன்.
என்னருகே பக்கத்து இருக்கையில் கிறிஸ்துவப் பாதிரி ஒருவர் என்னைப் பற்றி விசாரித்துக் கொண்டார். நான் ஒரு கிறிஸ்த்துவப் பள்ளியில் படித்துக் கொண்டு இருப்பதை அறிந்து அவருக்கொரு தனி மகிழ்ச்சி ! பல உபதேசங்களையும் வழங்கிக் கொண்டு வந்தார்.
வெறியோடு நான் வாங்கி வைத்திருக்கும் புத்தகங்களை எப்போது எடுப்போம் பிரிப்போம்… படிப்போம் என்ற துடிப்போடு இருந்த எனக்கு அந்தப் பாதிரி அவர்களின் சம்பாஷனை எரிச்சலூட்டிக் கொண்டு இருந்தது. இவர் ஏன் என்னிடம் பேசிக் கொண்டிருக்கிறார்? குலம் குடும்பம் கோத்திரம் – தாய் தகப்பன் உறவினர் இதுவெல்லாம் இவருக்கு எதற்கு? என்று எரிந்து கொண்டிருந்தேன்.
ஒரு வழியாக அவருக்கும் எனக்கும் ஒரு சின்ன ‘பிரேக்’ விழுந்தது. அப்பாடா என்று குனிந்து நான் மிகமிக விருப்பமாகப் படிக்கும் ‘கல்கண்டு’ இதழை எடுத்துப் புரட்ட ஆரம்பித்தேன். பத்துப் பதினைந்து TIT BITS கூடத் தொட்டிருக்க மாட்டேன். “தம்பி புத்தகம் படிக்காதே மூடிவை” என்றார் பாதிரியார். வகுப்பாசிரியர் உச்சந்தலையில் ஓங்கிக் குட்டியது போன்ற ஒரு ஆத்திரம் வந்தது. எனக்கு இவர் ‘பிளேடு’ போட நான் தானா கிடைத்தேன்? ஏன் இப்படி இம்சை செய்கிறார்? என நினைத்தேன்.
இலேசாகக் கண்களை மூடிக் கொண்டு தூக்கம் போடத் துவங்கினார். நல்ல வேளை நான் பிழைத்துக் கொண்டேன் என எண்ணியவனாக மடிமேல் வைத்திருந்த புத்தகத்தை மீண்டும் விரித்தேன். சிறிது……… சிறிதே………… நேர்ந்தான் ………… தூங்கி வழிந்த பாதிரியார் விழி மலர்ந்தார். வெடுக்கென்று என்னைத் தான் பார்த்தார். முன்பே சிவந்திருந்த அவரது கண்கள் என்னைக் கண்டதும் செக்கச் சிவந்தன !
“தம்பி ! புக் படிக்காதே என்று சொன்னேனே …… திரும்பவும் படிக்கிறாய் ! மூடி பைக்குள் வை ! புடிக்காதே ! என்றார் அட ஆண்டவனே ! படி படி என்று ஆசிரியர்கள் சொல்லும் போது ஏற்பட்ட எரிச்சலை விட படிக்காதே படிக்காதே என்று இவர் சொல்வது அல்லவா பேரெரிச்சலாகப்படுகிறது என்று எண்ணிக் கொண்டு மீண்டும் புக்கை மூடி மடியில் வைத்தேன்.
கொஞ்ச நேரம் ஆனது ! மீண்டும் அதே காட்சி ! தூங்கி விழுந்தவர் எழுந்தார் ! என்னைக் கண்டார் ! கண் சிவந்தார் ! என்னை விட எரிச்சலானார் ! படித்துக் கொண்டிருந்த புத்தகத்தைப் பிடுங்கி என் பையில் திணித்து வைத்துவிட்டு விழித்தவர் விழித்தவர் தான் ! தூங்கவே இல்லை. என்ன இந்தப் பஸ் இப்படித் தவழ்கிறதே என்று எனக்குக் கடுப்பு !
கோவில்பட்டி நெருங்கிக் கொண்டிருந்தது. அங்கே இறங்கி நான் வேறு பஸ் மாற வேண்டும். நான் பயணித்த பஸ்ஸும் அதுவரை தான். அனைவருமே இறங்க வேண்டும். இந்தப் பாதிரியும் இறங்கத்தான் வேண்டும். மீண்டும் இவர் நான் தொடரும் பாதையில் தொடர்ந்து விடக்கூடாதே என்று ஆண்டவனை வேண்டிக் கொண்டு இருந்தேன். கோவில்பட்டி எல்லைக்குள் நுழைந்து விட்டோம். எனக்குக் குஷியோ குஷி !
பாதிரியார் என் பக்கம் திரும்பினார். “தம்பி ! பஸ்ஸில் பயணம் செல்லும் போது புத்தகம் படிக்கக் கூடாது. பஸ் ஆடும் ………… அசையும் ……….. குலுங்கும் ! அப்போது பார்வையும் அலைபாயும். அது விழிகளுக்கு ஆபத்து ! நீ படிக்கும் மாணவன். விழிகளைப் பாதுகாக்க வேண்டிய வயது. இப்போதே உன் விழிகளுக்கு இடையூறு கொடுத்தால் சிறு வயதிலேயே கண்கள் கெட்டுப் போய்விடும். அப்புறம் என்னைப் போல் கண்ணாடி போட வேண்டும். உன் கூட்டாளிகள் உன்னைக் கேலி செய்யமாட்டார்களா? வீட்டுக்குப் போய் அமர்ந்து நல்ல வெளிச்சத்தில் படி ………………………” என்றார்.
எனது இதயம் நெகிழ்ந்து போய்விட்டது. அவரையே கொஞ்சம் குர்ரென்று பார்த்துக் கவிழ்ந்தேன். இவர் பேச்சுத் துணைக்கு ஆள் வேண்டும் என்பதற்காகத்தான் முதலில் புத்தகம் படிக்காதே என்று சொல்லி இருப்பாரோ என்று நினைத்தேன். பிறகு இவர் தூக்கம் போடும் போது கூட என்னைப் படிக்காதே என்று ஏன் சொல்கிறார் என்று கடுகடுத்தேன். புத்தகம் படிக்காதே என்று ஏன் சொன்னார் என்ற காரணம் இப்போதல்லவா புரிகிறது என்று என்னை நொந்தேன்.
ஒரு மதத்தவர் இன்னொரு மதத்தவரிடம் துவேசம் செய்யத் தெரியாத அந்தக் காலத் தமிழகத்தில் எப்படிப்பட்ட உறவுகள் மலர்ந்து நின்றன என்பதை இதயத்தால் எண்ணிப் பார்க்கிறேன்.
பொது நல வாதியான மதத் தலைவர்கள் ! ஒரு இஸ்லாமிய மாணவப் பையனின் விழியுணர்வு கூடக் கெட்டுவிடக் கூடாது என்ற அக்கறையில் தனது குடும்பத்துப் பிள்ளையிடம் காட்டுவது போன்ற தூயமனக் கண்டிப்பு ! அதை மீறும் போது உரிமையான கோபம் ! யாரும் எக்கேடு கெட்டும் போகட்டும் என்றில்லாத பாசம் ! தனது கோபத்துக்கும் கண்டிப்புக்கும் காரணத்தைக் கூறிய கனிவு ………………. இன்னும் அந்தப் பாதிரியாரின் தூய வெள்ளை ஆடை உருவமும் அவரின் வெள்ளை உள்ளமும் இன்றும் அவருக்கு ‘ஜோஸ்திரம்’ போடச் சொல்கிறது.
புதுக்கோட்டையிலிருந்து திருச்சிராப்பள்ளிக்கு அந்த அரசுப் பேருந்து பறந்து கொண்டிருந்தது. எள்ளைப் போட்டால் எண்ணெய் எடுக்கலாம் போலக் கூட்டம் ! ஆணும் பெண்ணும் முட்டி மோதிக் கொண்டு அலைந்து கொண்டிருந்தது. நிற்கும் பயணிகளே ஏராளம் !
விர் …………………… விர்ரென்று விரைத்துக் கொண்டிருந்தது ஒரு கைக் குழந்தை ! நின்று பயணித்துக் கொண்டிருந்த ஒரு பெண்ணின் இடுப்பில் குழந்தை ! இடது கையில் குழந்தையைக் கவ்விக்கொண்டு வலது கையால் கம்பியைப் பிடித்துக் கொண்டு ஆடிக் கொண்டிருந்தாள் அந்தத் தாய் ! கொஞ்சம் பக்கத்தில் அமர்ந்திருந்த ஒரு பெண் அழுத குழந்தையைப் பிடுங்கிக் கொண்டார் !
ஒவ்வொரு ஊரிலும் ஆட்கள் ஏற ஏற அந்தக் குழந்தையின் தாய் குழந்தையை விட்டுக் கொஞ்ச தூரம் தள்ளித்தள்ளிப் போகும்படி ஆகிவிட்டது. கொஞ்ச நேரத்தில் குழந்தையின் அழுகை ஒலியும் அடங்கி விட்டது. அழுகையை நிறுத்தி விட்டது என்ற நிலையில் தாயும் நிம்மதியாகிவிட்டார்.
திருச்சிராப்பள்ளி பேருந்து நிலையத்தை பஸ் நெருங்கி நுழைந்த போது கூட்டமும் கொஞ்சம் விலகி இருந்தது. குழந்தையின் தாய் நகர்ந்து வந்து அந்தப் பெண்ணிடம் குழந்தையைப் பார்த்தார் ! குழந்தை இல்லை, பதறியபடி எங்கே என் குழந்தை? என்றார். “அமர்ந்து கொண்டிருக்கிறது” என்றார் அந்தப் பெண். “என்ன பால் கொடுக்கிறீர்களா?” என்று கேட்டார். “ஆமாம் ! பிள்ளை ரொம்பக் கதறியது மனம் கேட்கவில்லை …………… நீங்களும் தூரத்திற்குப் போய்விட்டீர்கள், அது தான் ………………” என்று கூறியபடி குழந்தையைத் தனது துப்பட்டிக்குள் மறைத்துப் பால் கொடுத்துக் கொண்டிருந்த அந்த இஸ்லாமிய இளம் பெண் குழந்தையை எடுத்துக் கொடுத்தார்.
உண்மையான பால்வடியும் முகத்தோடு அந்த மழலை இரு தாய்களையும் பார்த்துப் பொக்கை புன்னகைத்தது. குழந்தையைப் பெற்றெடுத்த அந்தப் பொட்டு வைத்த சகோதரி இரு கைகளையும் கூப்பி………….. கண் கலங்கி …………………. இஸ்லாமியத் தாய்க்குக் கும்பிட்டு நன்றி சொன்னது. கும்பிட்ட இரு கைகளையும் தனது கரங்களால் பற்றிக் கொண்ட அந்த இஸ்லாமியப் பெண் கூறினார். “எல்லோரும் தாய் தான் ! எல்லாம் பிள்ளைகள் தான்” !
இன்றும் இதுபோன்ற உறவுக்காரர்கள் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள். அவர்கள் எந்த உருவத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் என்பதைத் தான் நம்மால் அறிந்து கொள்ள முடியவில்லை. எரிமலைகள் இருக்கும் பூமியில் தான் நீருற்றுகளும் பொங்கி வழிகின்றன. பாறைகளும் பிளந்து கசிகின்றன. உலகம் ஒன்றுபட உறவுப் பாலங்களை அமையுங்கள் ! அது உள்ளங்களை ஒன்று சேர்க்கும்.