( கவிஞர் மு ஹிதாயத்துல்லாஹ் )
வானவர் கோன் ஜிப்ரீல் (அலை)
வந்துரைக்க வஹியாக
தேன்மறையைப் பெற்றவரே !
தீரர் நபி நாயகமே !
சஞ்சலங்கள் பல சூழ்ந்தும்
சாபமிடாச் சந்தனமே !
நெஞ்சொளிரும் மாமணியே !
நேச நபி நாயகமே !
பல்லிளித்துக் கையேந்தும்
பழக்கத்தை விட்டொழித்துக்
கல்லுடைத்தும் கூழ் குடிக்க
கற்பித்த நாயகமே !
நிலுவையிலும் அளவையிலும்
நேர்மையினைக் கையாளல்
உயர்ந்ததென நவின்றிட்ட
உத்தமரே ! நாயகமே !
சொல்லோடு நில்லாமல்
சொன்னதையே செய்து உவந்த
நல்லார் நபிமணியே !
நட்புறவே நாயகமே !
வியர்வை உலருமுன்னே
வேலைக்குக் கூலி தரல்
சிறந்த பண்பென்று
செப்பிய நல் நாயகமே !
செல்வத்தைப் பெருக்குதற்கு
செய் தொழிலில் தவறிழைப்போர்
அல்லாஹ்வின் அருள் இழப்பார்
என்றுரைத்த நாயகமே !
மறை கற்று மற்றவர்க்கு
மனம் மகிழக் கற்பிப்போர்
இறையன்புக்குரியரென
இனிதுரைத்த நாயகமே !
ஈச்சமரக் கட்டிலிலே
இருந்தபடி நல்லாட்சி
மாட்சியுடன் செய்து வந்த
மாநபியே ! நாயகமே !