என்றும் வாழ்வார் !

இலக்கியம் கவிதைகள் (All)

என்றும் வாழ்வார் !

-பால் நிலவன்

( காஞ்சி அப்துல் ரவூப் பாகவி )

1.அதிர்ந்தென்றும் பேசாத தென்றல் பேச்சு !

அடக்கத்தின் உருவம் ! நற் பண்பே மூச்சு !

 

பதிக்கின்ற பார்வையிலே மிளிரும் ஞானம் !

பார்ப்பவரைத் துல்லியமாய் அளக்கும் ஆழம் !

 

முதியவர்கள் தமைக் கண்டால் முகம் மலர்ந்து

முகமனுடன் மரியாதை செய்யும் சீலம் !

 

புதியவர்களைக் கூட புன்ன கையால்

பொலிவாக்கும் நற்பெருமான் சலாஹு த்தீனார் !

 

 

2. பொற்குவியல் பல கோடி பெற்றி ருந்தும்

பொறுமையுடன் பணிவு கொளும் பெருமனத்தார் !

 

 

தற்பெருமை கொள்ளாமல் தணிவு காட்டித்

தளும்பாத நிறைகுடத்துத் தன்மை கொண்டார் !

 

 

கொற்றவனின் மேல் பூண்ட அன்பால் பிறரின்

குறைமறந்து மன்னித்தே அரவணைப்பார் !

 

 

மற்றெதிலும் அவர் பற்று கொண்டாரில்லை !

மாபெரியோன் பண்பதனைப் பற்றிக் கொண்டார் !

 

 

3. சாதிமதம் பாராமல் அனைவ ருக்கும்

சரிசமமாய் நன்மை செயும் மனித நேயர் !

 

மூதறிஞர் தமைக் கண்டால் முனைந்து சென்று

முறையுடனே பெருமை செயும் தகைமையாளர் !

 

 

காதும் காதும் வைத்தாற் போலே ஏழ்மைக்

கனலுக்குள் வீழ்ந்தவரைக் கைகொடுத்து

 

 

ஆதரிக்கும் நல்லிதயத் தூய்மை கொண்டார்,

அறவாழ்வை நேசிக்கும் சலாஹு த்தீனார் !

 

 

4. உதவியென வந்தோர் மனம் குளிர்ந்து வாழ்த்த

உள்ளபடி முடிந்தவரை உதவி செய்வார் !

 

பதவியினால் கர்வமவர் கொண்டாரில்லை

பணிவுதனை அணிகலனாய் ஆக்கிக் கொண்டார் !

 

 

வதனமெலாம் நல்லுணர்வாய் வடிவம் கொண்டே

வையத்தார் அனைவர்க்கும் நலமே நாடும்

 

 

மதுரகுண சான்றோராம் சலாஹு த்தீனார்,

வல்லவனின் நல்லருளால் என்றும் வாழ்வார் !

 

( துபை ஈடிஏ அஸ்கான் ஸ்டார் குழுமத்தின் மேலாண்மை இயக்குநர் அல்ஹாஜ் சையத் எம் ஸலாஹுத்தீன் அவர்களை வாழ்த்தி எழுதப்பட்ட கவிதை )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *