( ஆக்கம் : முதுவைக் கவிஞர் ஹாஜி உமர் ஜஹ்பர் பாஜில் மன்பயீ )
முதுகுளத்தூர் சரித்திரமே முழுவுலகில் சங்கமமே !
முழுவுலகும் போற்றிவரும் முதுகுளத்தூர் சரித்திரமே !
புதுமைகளைப் படைத்திடவே, உறவுகளை இணைத்திடவே,
புதிய தளம் “இணைய தளம்” துவக்கியதோர் சரித்திரமே !
அருமகனார் நிஜாமுத்தீன் ஆலிமவர் தலைமையிலே,
ஐக்கியமாய் வாழுகின்ற அமீரகத்துத் தோழர்களே !
வருங்காலம் வாழ்த்துகிற புதுவுலகம் உங்களுக்கே !
வளமான வாழ்வுகளும் வாழ்த்துகளும் உங்களுக்கே !
இன்றைக்கோர் சம்பவமாய் எழுகின்ற நிகழ்வுகளே
எழிலான சரித்திரமாய் நிமிர்ந்து விடும் நாளைக்கே !
அன்றாட நிகழ்வுகளை ஏற்றி வைப்பீர் இணையத்தில் !
அழகான சரித்திரத்தைக் காத்திடுவீர் உலகத்தில் !
மண்ணுக்குள் மறைந்திருக்கும் தங்கம் போல் வைரம்போல்
மறைந்து விட்ட சரித்திரங்கள் ஏராளம் ! ஏராளம் !
விண்ணுக்கும் மண்ணுக்கும் விழிநடையாய்ச் சென்று வரும்
வருங்கால வரலாற்றில் நம்வாழ்வு மறையலாமோ ?
தங்கத்தைத் தட்டிவைத்து அணிகலன்கள் செய்வதுபோல்
வைரத்தைத் தீட்டிவைத்து வகைவகையாய் அணிவதுபோல்
பொங்கி வரும் புதுவுலகில் முதுகுளத்தூர் சரித்திரங்கள்
பொன்னெழுத்தில் மின்னட்டும் ! பொலிவுடனே மிளிரட்டும் !
புதுவுலகம் படைப்பதற்குப் புறப்பட்ட சோதரரே !
போற்றுகிறோம் உங்களையே ! புகழுகிறோம் இறைவனையே !!
முதுகுளத்தூர் சரித்திரத்தில் மின்னுகிற பெருமகரே !
மூவுலகம் போற்றிடவே வாழியவே ! வாழியவே !!