( தத்துவக் கவிஞர் இ. பதுருத்தீன் )
இல்லார் மகிழ இருப்போர் உதவ
பொல்லா தவரும் பொய்மை அகல
எல்லாம் வல்ல ஏக இறையே –
ஈந்தாய் எமக்கே ஈதுப் பிறையே !
இல்லைக் குறையே ! – இங்கு
யாவும் நிறையே !
இருந்தோம் நோன்பு, இளைத்தோம் மேலே !
எரிந்த மெழுகு வத்தி போலே !
அருந்த மறுத்தோம் அமுதங் கூட
அல்லாஹ் உன்றன் அருளைத் தேட !
எங்கள் அகமே – பே
ரின்பச் சுகமே !
வயிற்றுப் பசியை வசியம் போட்டு
வாய்க்கும் இட்டோம் மவுனப் பூட்டு !
பயிற்று வித்தோம் பசியாம் புலிக்கே
பக்குவப் புல்லைப் புசிக்கும் படிக்கே !
ஆற்ற லுடைய – இறை
அருளின் கொடையே !
பாவங் களுக்கோ இலையுதிர் கோலம் !
பக்தி களுக்கோ வசந்த காலம் !
யாவுங் கருணை இறையின் மூலம்
ஏற்றங் கண்டதே இந்த ஞாலம்
பண்பா டுவமே ! – பெருநாள்
கொண்டா டுவமே !
நன்றி :
மணிச்சுடர் நாளிதழ்
18/19 ஆகஸ்ட் 2012