( முதுவைக் கவிஞர். அ. உமர் ஜஹ்பர் )
இது எனது இந்தியா !
எனது இந்தியாவை
எண்ணிப் பார்க்கிறேன் !
இன்றோடு இந்த இடத்தில்
இருபத்து ஆறாம் தடவையாக
நின்று பார்க்கிறேன் !
‘குடிமக்கள் அரசாளும்
குதூகலத் திருநாடு
என் நாடு !”
மன்னர்கள் ஆளுகின்ற
நாட்டில் எல்லாம் –
ஒருவனே ராஜா !
மக்களாட்சி செலுத்துகின்ற
எனது மண்ணில்
இங்கு பிறந்தவன் எல்லாம் ராஜா !
ஆம் ! மக்களே
இந் நாட்டின் மன்னர்கள் !!
ஏனென்றால் ?
எனது இந்தியத் திருநாடு,
மன்னராளும் நாடல்ல !
மக்கள் ஆளும் நாடு !
முடியரசு நாடல்ல !
இது குடியரசு நாடு !!
இங்கு…
‘சுனாமி’கள் மிரட்டிப்
போகலாம் ! ஆனால் …
அயல் நாட்டுப் ‘பினாமி’ கள்
எங்களை மிரட்டவும் முடியாது …
இந்த மண்ணை விட்டு
எங்களை விரட்டவும் முடியாது !
சுனாமி என்னும்
எமனின் பினாமி வந்து
பூமியைப் பொங்க வைத்து …
புயலுக்குத் தூபம் போட்டு …
கடலுக்கு இறக்கை கட்டி …
அலைகளைக் கோப மூட்டி …
உயிர்களைக் குடித்து விட்டு …
உடல்களை மறைத்து விட்டு …
உறவினைப் பிரித்து விட்டு …
ஊரையும் அழித்து விட்டு …
ஓ … வென்று கதறி நாங்கள்
உட்கார்ந்து இருக்கும் போது
நல்லவர் போல நின்று
வல்லரசு நாடு வந்து –
உதவிட வந்த போது …
”நில்லுங்கள் ! நீங்கள் வேண்டாம் !
எல்லாமும் எமக்குள் உண்டு”
என்று
தன்னிறைவை
அவர் அறிவுக்கு ஊட்டியது
எனது இந்தியா !
இலங்கைக்கும்
இந்தோனேசியாவுக்கும்
மஹல்லதீவுக்கும்
அந்தமான் நிகோபாருக்கும்
அள்ளி அள்ளி கொடுத்து –
“ஊர் பிள்ளையை ஊட்டி
வளர்த்தால்
தன் பிள்ளை தானே வளரும்”
என்ற தத்துவத்தை
தரணியே அன்று
உணரவைத்தது
எனது இந்தியா !
உடலிலே ஒரு பக்கம் ‘வலி’
என்றால்
விழிகளே கலங்கி அழும்
‘விதி’ போல –
கடலினால் உலகுக்கு
’சதி’ வந்தால்
உடுக்கை இழந்தவன்
கைபோல –
அங்கே இடுக்கண் களைவதே”
எனது இந்தியா !
கிழிந்த ஆடை கட்டிய
இந்தியன் இருக்கலாம் !
ஆனால் …
இழிந்த ‘நடை; கட்டிய
இந்தியன் இருக்க மாட்டான் !
‘அழுக்கு’ ஆடை கட்டிய
இந்தியன் இருக்கலாம் !
ஆனால்…
‘இழுக்கு’ குணம் கொண்ட
இந்தியன் இருக்க மாட்டான் !
இந்து, முஸ்லிம், கிறிஸ்தவன்
என்று
இந்தியன் இருக்கலாம் !
அதில் …
ஏற்றம், இழிவு, தாழ்வு என்று
இந்தியன் இருக்க மாட்டான் !
அப்படி இருந்தால் …
அவன் .. அவன் …
ஜன, கன, மன என்று
தாலட்டுப் பாடிய
தங்கமான இந்திய தாய்க்குப்
பிறந்திருக்கவும் மாட்டான் !
என் இந்தியாவை –
எல்லைக் கோட்டுக்கு
உள்ளே வந்து
எட்டிப் பார்க்க
எவனும் நினைக் ‘கலாம்’
என் இந்தியாவை –
துப்பாக்கி தோட்டா வைத்து
துளைத்துப் பார்க்க
எவனும் நினைக் ‘கலாம்’
என் இந்தியாவை –
விண்ணுக்கு மேலே நின்று
உலவு பார்க்க
எவனும் நினைக் ‘கலாம்’
என் இந்தியாவை –
பொருளாதாரத் தடை போட்டு
புறட்டிப் பார்க்க
எவனும் நினைக் ‘கலாம்’
என் இந்தியாவை –
இது போன்ற எண்ணங்களால்
உரசிப் பார்க்க
உலகமே நினைக் ‘கலாம்’
அது அத்தனையும்
அலைகலாய் அழிந்து போகும் !
கனவுகளாய்க் கலைந்து போகும் !
ஏனென்றால் … ஏனென்றால் …?
இங்கே எங்களை
அரவணைத்துக்
காத்துக் கொண்டு இருப்பது
எங்கள் கலாம் … கலாம்
அவரே அப்துல் கலாம் !
இதுவே எனது இந்தியா !
நன்றி :
முகவை முரசு
பிப்ரவரி 25 – மார்ச் 3, 2005