மறக்கத்தான் முடியுமா மாநபியை ?

இலக்கியம் இஸ்லாமியக் கட்டுரைகள் முதுவைக் க‌விஞ‌ர் ம‌வ்ல‌வி அல்ஹாஜ் ஏ. உம‌ர் ஜ‌ஹ்ப‌ர் ஆலிம் பாஜில் ம‌ன்ப‌யீ

 

          ( முதுவை கவிஞர், ஹாஜி, உமர் ஜஹ்பர் )

 

ஒரு இலட்சத்து இருபத்து நான்காயிரமே நபிமார்கள் இந்த உலகத்தில் அவதரித்தாலும் – அவர்களில் இறுதியாக வந்த இறைதூதர் நபிகள் நாயகத்தை இந்த உலகம் அன்றும், இன்றும், என்றென்றும் போற்றிப் புகழ்ந்து மறவாமல் நினைவு கூர்ந்து கொண்டிருக்கிறது !

அகில மக்களுக்கெல்லாம் அருட்கொடையாக அவதரித்த அந்த அண்ணல் நபிகளை மறக்கத்தான் முடியுமா? பிறக்கும் முன்னே தந்தையை இழந்து – பிறந்த பின்னே தாயையும் இழந்து அனாதையாக வளர்க்கப்பட்டாலும் “பெற்ற தாயின் காலடியில்தான் பிள்ளையின் சொர்க்கம் இருக்கிறது” என்று சொன்ன பெருமான் நபியை மறக்கத்தான் முடியுமா?

“ஆணுக்கு மட்டுமல்ல சொத்துரிமை – அது பெண்ணுக்கும் உண்டு” என்று சொல்லி அதைச் சட்டமாக்கி செயல் வடிவம் கொடுத்த செம்மல் நபியை மறக்கத்தான் முடியுமா?

“பெண்ணுக்கு மட்டுமல்ல கற்பு ! அது ஆணுக்கும் உண்டு” என்று கூறி ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒழுக்கம் பொதுவுடைமை என்று உணர்த்திய உத்தம நபியை மறக்கத்தான் முடியுமா?

“சீனம் சென்றேனும் சீர்கல்வி தேடு. கல்வியும் ஒழுக்கமும் இல்லாதவரே தாய்தந்தை இல்லாத அனாதை போன்றவர்” என்று கல்வியைக் கடமையாக்கி கல்வி ஒழுக்கத்திற்கு உற்சாக மூட்டிய கன்னல் நபியை மறக்கத்தான் முடியுமா?

“சிவப்பு நிற அரபியரும் கறுப்பு நிற நீக்ரோவும் குலத்தில் சமமானவர்களே” என்று கூறி மனித குலத்தில் நிறவெறி பேதத்தை ஒழித்து மனிதகுலம் சமத்துவப் பாதையில் செல்வதற்கு சன்மார்க்கம் தந்த நமது சாந்தி நபியை மறக்கத்தான் முடியுமா?

”உழைத்தவர் வியர்வை உலர்ந்திடும் முன்பே உழைத்ததின் கூலியைக் கொடுத்து விடுங்கள்” எனக் கூறி உழைப்பின் உயர்வையும், உழைத்தவர் ஊதியத்தையும் உயர்த்திக் காட்டிய உத்தம நபியை மறக்கத்தான் முடியுமா?

“கையேந்தி யாசித்து வாழ்பவரை விட காட்டில் சென்று விறகு வெட்டி உழைத்து வாழ்பவரே உயர்ந்தவர்” என உழைத்து வாழும் பெருமையை உலகுக்கு உணர்த்திய தத்துவ நபியை மறக்கத்தான் முடியுமா?

“ஆணுக்கு பெண்ணை அடிமையாக்குவதல்ல திருமணம் ! ஆண் – பெண் இரு ஆன்மாக்களுக்கு நடுவே மலரும் தூய அன்பின் தொடர்பே திருமணம்” என திருமணத்தின் தத்துவத்தை நறுமணத்துடன் கூறிய தூய நபியை மறக்கத்தான் முடியுமா?

“ஒரு சமுதாயத்தின் தலைவன் அந்தச் சமுதாயத்திற்குத் தொண்டு செய்யும் ஊழியனே !” என சமுதாயத் தலைவர்களின் கடமையை உணர்த்தியும், சமுதாயத் தொண்டர்களின் பணியை உயர்த்தியும், பெருமைபடுத்திய பெருமான் நபிகளை மறக்கத்தான் முடியுமா?

“பெரியோருக்கு மரியாதை செய்யாதவரும் சிறியோரிடம் இரக்கம் காட்டாதவரும் நம்மைச் சேர்ந்தவர் அல்லர்” என முதியோர் மரியாதைக்கு வித்திட்டு சிறியோர் பரிவுக்கு பாதை போட்ட பண்பு நபியை மறக்கத்தான் முடியுமா?

“மனிதர்களுக்கு நன்றி செலுத்தாதவர் இறைவனுக்கு நன்றி செலுத்தியவராக ஆக மாட்டார்” என நன்றி மறவாமல் வாழச் சொன்ன நன்றிக்குரிய நபிகள் நாயகத்தை மறக்கத்தான் முடியுமா ?

முடியாது ! முடியாது ! உலகம் உள்ளளவும் அந்த உத்தம நபியை மறக்கவே முடியாது ! நாமும் அவர் பாதை நின்று என்றும் மறவாமல் வாழுவோம் !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *