( முதுவைக் கவிஞர் மௌலவி உமர் ஜஹ்பர் )
இருள் சூழ்ந்த உலகினிலே அருள் சேர்க்க வந்த நபி !
இருளான நெஞ்சினிலே ஒளிவார்த்து நின்ற நபி !
அருளான பெருவாழ்வை அகிலத்தில் தந்த நபி !
அல்லாஹ்வின் அருளாக அகிலத்தில் வந்த நபி !
விதவைக்கு மறுவாழ்வை ஒளியாகத் தந்த நபி !
விதவையரை மனம் புரிந்து வழியாக நின்ற நபி !
பதவிக்குப் பணியாமல் துணிவாக வாழ்ந்த நபி !
பகை வந்த போதுமதைப் பண்பாலே வென்ற நபி !
ஆணுக்கும் பெண்ணுக்கும் கற்புண்டு என்ற நபி !
ஆணுக்கும் பெண்ணுக்கும் சொத்துரிமை தந்த நபி !
ஆணுக்கும் பெண்ணுக்கும் சமவுரிமை சொன்ன நபி !
அகிலத்தில் அனைவர்க்கும் சமத்துவத்தை ஈந்த நபி !
கல்விக்குத் துணையாக அரணாக நின்ற நபி !
கற்றோரை மதிப்பது நம் கடமையெனச் சொன்ன நபி !
எல்லோர்க்கும் பொதுவாக இவ்வுலகில் வந்த நபி !
ஏற்றங்கள் எல்லாமும் எல்லோர்க்கும் தந்த நபி !
கறுப்பென்ற சிவப்பென்ற பேதங்கள் தீர்த்த நபி !
கனிவான வாழ்வுக்கு போதங்கள் வார்த்த நபி !
நறுக்கென்று உண்மைகளை நீதமுடன் சொன்ன நபி !
நீதிக்கு பேதங்கள் நீக்கிடவே வாழ்ந்த நபி !
ஏழைக்கும் செல்வர்க்கும் இணைப்புகளைப் போட்ட நபி !
இல்லார்க்கு உள்ளவரை ஈந்திடவே செய்த நபி !
தாழ்வுக்கும் உயர்வுக்கும் தாழ்ப்பாளைப் போட்ட நபி !
தரணியிலே தனிப்பெரிய தகுதியினைப் பெற்ற நபி !