(’தமிழ் மாமணி’ கவிஞர்.மு. சண்முகம், இளையான்குடி)
நிலவுக்கு வானுறவு !
நெஞ்சுக்கு நட்புறவு !
உலகுக்கு ஒளியுறவு !
உயர்வுக்கு உழைப்புறவு !
கடலுக்கு அலையுறவு !
காதலுக்குக் கண்ணுறவு !
படகுக்குத் துடுப்பு(உ)றவு !
பாட்டுக்குப் பொருளுறவு !
வேருக்கு நீர் உறவு !
விழிகளுக்கு இமையுறவு !
போருக்கு வீரம் தானே
பொருந்தி வரும் நல்லுறவு !
நோன்புக்கு மாண்புறவு !
நோய்க்கெல்லாம் மருந்து(உ)றவு !
மேன்மைக்கு ஒழுக்கமே என்றும்
மேலான உறவு என்பேன் !
மண்ணுக்கு மழையுறவு !
மனதுக்குச் சுகம் உறவு !
பெண்ணிற்கு கற்பு தானே
பிரியாத நல்லுறவு !
கனவுக்குக் கண்ணுறவு !
காற்றுக்கு மரம் உறவு !
நினைவுக்கு நீ உறவு ! – வெற்றி மயிலே
நீயன்றி ஏதுறவு ?