பெருநாள் சிறப்புக் கவிதை
அருளைப் பெற்ற பெருநாள் !
( முதுவை கவிஞர், ஹாஜி, உமர் ஜஹ்பர் )
இருப்பதை இல்லார்க்கும் ஈந்தளிக்க – இன்று
இறைவனே வழங்கிய ஈதுப்பெருநாள் !
இருப்பவர் இல்லாமை உணர்வுதன்னை – நீக்கி
இன்பமும் திருப்தியும் காணும் பெருநாள் !
பசித்ததை, விழித்ததைத் தனித்த அமலை – இன்று
பக்தர்கள் இறையிடம் சொல்லும் ஒருநாள் !
பசித்தவர் பரிசினை இறைவன் தானே – வந்து
படைத்திடும் நாளிதே இன்பத்திருநாள் !
பெற்றவர் உற்றவர் நண்பரெல்லாம் – செய்த
பிழையினைக் கழுவிடக் கூடும் நன்னாள் !
நற்றவம் ஏற்றிட மூமின்களெல்லாம் – இன்று
நன்மைகள் பெற்றிட்ட முழுமைப்பெருநாள் !
நோன்பையும் மாண்புயர் வணக்கமெல்லாம் – இறைவன்
நலமுடன் ஏற்றிட வேண்டுமென்றே –
தான் தனக் காகவே ‘பித்ரா’ ஈந்து – நம்
தனித்தவன் இறைவனைப் போற்றும் பெருநாள் !
இரவிலே தராவீஹின் இன்பத் தொழுகை – இன்று
இனிமையாய் முடிவுறும் ஈதுப்பெருநாள் !
தரமிகு தஸ்பீஹ் முழக்கமெல்லாம் – இன்று
தலைவனின் வாயிலைத் தட்டும் திருநாள் !
தூயநன் நோன்பினை நோற்ற மாந்தர் – தன்னைத்
தவ்பாவால் பரிசுத்த மாக்கும் திருநாள் !
தாயினும் மேலான தூய இறைவன் – இன்று
தன்னரும் அடியாரைப் போற்றும் உயர்நாள் !
திருமறை குர்ஆனை ஓதி ஓதி – இன்று
தீனோர்கள் முடித்திடும் தூய திருநாள் !
அருளினை அன்பினை அடியாரெல்லாம் – இன்று
அதிகமாய் அதிகமாய்ப் பெற்ற பெருநாள் !