(முதுவை கவிஞர், ஹாஜி உமர் ஜஹ்பர்)
அவனியின் அழகிய மார்பிடம் !
ஆன்றோர்கள் போற்றும் பேரிடம் !
கவலைகள் நீக்கும் ஓரிடம் !
“கஃபா” இறைவன் ஆலயம் !
மக்கத்துப் பூமியின் மண்ணிலே,
மகிமையின் மகிமை ஆலயம் !
“மக்காமெ இபுறாஹீம்” பீடத்தை
மாண்புடன் அருளும் ஆலயம் !
‘அஜமிகள் அரபிகள்’ சேர்ந்திடும்,
அஹதாம் அல்லாஹ் ஆலயம் !
’ஹஜருல் அஸ்வது’ மாணிக்கம்,
கஃபா வழங்கிய புண்ணியம் !
வெண்ணிற ஆடையில் மானிடர்
வலம்வரும் கண்ணிய ஆலயம் !
கண்களைக் குளமாய் மாற்றிடும்
கவின்மிகு புண்ணிய ஆலயம் !
பூம்புனல் ‘ஜம் ஜம்’ நீரினைப்
பொங்கியே பொழியும் ஆலயம் !
பூவினர் பேதம் நீக்கியே,
புகழுடன் கூடும் ஆலயம் !
“ஸபாவுடன் மர்வா” குன்றினை
சரித்திரம் பேசும் ஆலயம் !
அவாவுடன் நாமும் வாழ்விலே
அவசியம் காணும் ஆலயம் !