கல்வி
திருச்சி A .முஹம்மது அபூதாஹிர்
தோஹா – கத்தர் thahiruae@gmail.com
|
- பொறியியல் படித்த மாப்பிள்ளை
வாங்கிய வரதட்சணை
பத்து இலட்சம் !
நெறியியல்
கற்றுத்தரப் படவில்லை !
- உயிருக்குப் போராடிய
ஏழை நோயாளி !
இரண்டு இலட்சம் கேட்டார்
இதயமில்லாத மருத்துவர்!
மனிதத்துவம்
அவர் அறிந்திருக்கவில்லை !
- ஒழுக்கம் உயிரினும்
ஓம்பப் படும் !
பாலர் பள்ளியில்
சொல்லித்தருகிறார்கள் !
பள்ளிக் குழந்தைகளிடம்
பாலியல் பலாத்காரத்தில்
ஆசிரியர் சிலர் ஈடுபடுகின்றனர் !
- துறவறமே தூய்மை
சொல்லித்தரும் மத பீடங்கள் !
விபச்சாரம் நடக்கும்
மடங்கள் !
- பட்டி மன்றங்களில்
கல்வியே உயர்ந்தது என
தீர்ப்பளிக்கப் படுகிறது !
பள்ளிக்கூடத்தில்
நன்கொடை கொடுத்தால்தான்
சேர்க்கப் படுகிறது !
- எழுதப் படிக்கத் தெரியாத
ஏழை மக்களிடம்
சான்றிதழில் கையெழுத்துப் போட
கையூட்டு வாங்கும் வாங்கும் அதிகாரிகள் !
- நிதி அதிகமாக
கொடுத்தால்
திறமையாக வாதம் செய்து
குற்றவாளிகளை விடுவித்து
நீதியை சிறையில் அடைக்கும் வழக்கறிஞர்கள் !
- அணு ஆயுதம் தயாரித்து
மண்ணை விஞ்ஞானிகள் ஆக்கியது
நாசம் !
அணு அணுவாய் பெண்ணை வர்ணித்து
கவிஞர்கள் எழுதிய கவிதைள்
ஆபாசம் !
- திருடும் கொள்ளையும்
சான்றிதழ்
பெறாமல் செய்வதால்
குற்றம் செய்தவராய் கருதப் படுகின்றனர் !
அதையும்
சான்றிதழுடன் செய்தால்
கற்றவராய் மதிப்புப் பெற்றவராய்
கருதப் படுவர் !
- நாகரீகம் கல்வி தரவில்லை என்றால்
இரக்கமே இந்த கல்வியில் இல்லையென்றால்
தீயில் எறியுங்கள்
இப்புத்தகங்களை !
ஆதி மனிதர்கள் நல்லவர்கள் !
- படிப்புக்கள் உங்களுக்கு
அதிகாரமும் மக்களை அடிமைப் படுத்தவும் மட்டும்தான்
கற்றுத்தருகிறது என்றால்
வேண்டாம் கிழித்தெறியுங்கள்
இப்பட்டங்களை !
படிக்காத மனிதர்களே சிறந்தவர்கள் !
- கல்வி
மனப் பாடம் மட்டுமல்ல !
அது
மனசாட்சிகளின் பாடம் !
- கல்வி
வாசிப்பது மட்டுமல்ல
அது
சக மனிதனை நேசிப்பது !
- மதிப்பெண்கள் பெறுவது மட்டும்
கல்வியல்ல !
மனிதத்தின் மதிப்பு அறிவதே
நூறு சதவீதம் கல்வியாகும் !