( முதுவைக் கவிஞர், ஹாஜி மௌலவி உமர் ஜஹ்பர் பாஜில் மன்பயீ )
ஒவ்வொரு எழுத்தும் ஒரு துளி உதிரம் !
ஒவ்வொரு சொல்லும் உணரும் புலன்கள் !
ஒவ்வொரு பக்கமும் செயலின் உறுப்பு !
ஒவ்வொரு நூலும் அழகிய குழந்தை !
எவ்விதம் கருவோ அவ்விதம் பிறப்பு !
எப்படிக் காப்போ அப்படிப் படைப்பு !
இவ்விதம் அமைத்து வெளிவரும் நூற்கள்,
எழில்மனு வாழ்வின் படிகள் ! பலன்கள் !!
எண்ணுவா ரெல்லாம் எழுதுவா ரில்லை !
எழுதுவ தெல்லாம் ஏற்றமா யில்லை !
எண்ணங்க ளெல்லாம் எழுத்தாகும் போது,
ஏடுகள் வாங்கிப் படிப்போரு மில்லை !
மண்ணிலே விரல் போட்டு எழுதிட்ட காலம் ,
மனதிலே விதை போட்டு பயிராச்சு சரிதம் !
கண்முனே கணினியும் இணையமும் இருந்தும்
காவியம் படைக்கக் கருப்பொருள் காணோம் ?
சாலையின் கல்வெட்டும் சரித்திரம் பாடும் !
சங்கமும், அரசரும் அதை காக்கக் கூடும் !
ஓலையில் எழுதினார் நூறாண்டு காலம் !
ஓடியும் ஒளியவோ அழியவோ காணோம் !
காலையில் எழுதினால் மாலையில் காணோம் !
கருப்பொருள் குற்றமா? கண்டுநீர் கூறும் !
வேலைக்கு ஒரு நூலை வெளியிட்ட போதும்,
விடியலோ வெளிச்சமோ வரவில்லை ! ஏனோ
பக்கமோ, பத்தியோ பெரிதல்ல தோழா !
படைத்திடும் படைப்பதன் உயிரோட்ட மென்ன ?
மக்களின் குறைகளைக் குத்தூசி கொண்டு
மடிந்திடும் வரையிலும் குத்தியே கொல்லு !
எக்காள மிடுவோர்கள் இனம்மாறு வரையும்
எழுச்சியைப் புரட்சியை எடுத்து நீ சொல்லு !
தக்கவை தனக்கொரு சரித்திரம் என்று !
தரணியே உன்பாதம் பணிந்திடும் இன்று !
தன்னிக ரில்லாத தமிழ்மொழி உண்டு !
தனக்கென இலக்கண இலக்கியம் உண்டு !
உன்னிடம் மாபெரும் வரலாறும் உண்டு !
உலகிலே அதற்கெனத் தனியிடம் உண்டு !
உன்மனக் கோட்டையின் எண்ணங்கள் குழைத்து,
வடித்திடு புதுப்புதுத் தூரிகை எடுத்து !
உன்னோடு செத்திடும் உணர்வுகள் வேண்டாம் !
உள்ள(த்) தை உடைத்து நீ வெளியாக்கு இன்று !
பாண்டிய மன்னனோ மாநகர் மதுரையில்
பைந்தமிழ் காத்திட சங்கமும் அமைத்தான் !
ஆண்டுகள் ஆறாய் மலையகம் மீதில்
அழகுடன் பாரதி தாசனின் பெயரில்
மாண்புயர் டத்தின்ஸ்ரீ இந்திராணி அன்னை
மகிழ்வுடன் அமைத்தார் எழுத்தாளர் தினத்தை !
ஆண்டுகள் கோடி அழிந்தாலும் அழியும் !
அன்னையின் சேவையும் புகழென்றும் தொடரும் !