மகளிர் பக்கம் :
வெயில் காயுதே !
இனி வர இருப்பது கோடைக்காலம். அடடா, என்ன வெயில்? இப்போதே இந்தக் காய்ச்சல் காய்கிறதே? கத்திரி வெயில் எப்படி இருக்குமோ? என்ற கவலை நம்முள் பலருக்கு இப்போதே ஆரம்பித்து விட்ட ஒன்று தானே? எவ்வளவு கடுமையாக வெயில் நம்மை வாட்டி எடுத்தாலும் வெளியில் போக வேண்டுமென்ற நிலை ஏற்பட்டால் போய்த்தானே ஆக வேண்டும்?
இன்றைய நிலையில் இரண்டு சக்கர வாகனங்களை ஓட்டும் பெண்கள் பலர் உண்டு. இப்பெண்களின் நிறம் நிச்சயம் குறைந்து போகும். முகத்திலும் கைகளிலும் மட்டுமின்றித் தலையிலும் அதிகமான தூசு படியும். கோடையில் அதிகம் வெயிலில் வெளியில் செல்ல நேரும் போது சில முன்னெரிச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டால் சருமத்தில் ஏற்படும் பாதிப்புகள், நிறம் குறைதல் போன்றவற்றை எளிதாகத் தவிர்க்க முடியும். அதிலும் குறிப்பாக இரண்டு சக்கர வாகனங்களை ஓட்டும் பெண்கள் இயன்றவரை கைகளுக்குத் துணியாலான கையுறை(க்ளவ்ஸ்) அணிந்து ஓட்டுவதால் நிறம் குறைந்து போதல், சருமத்தில் வறட்சி, சருமம் பொலிவிழப்பது போன்றவற்றைத் தவிர்க்க முடியும். முகம், கழுத்துப் பகுதிகள், சூரிய ஒளி நேரடியாகப்படும் இடங்களில் சன் ஸ்கிரீன் லோஷன் தடவிக் கொண்டு செல்லுதல் நலம். தற்போது பவுடர் வகைகளில் கூட சன் ஸ்கிரீன் கலந்தவை அறிமுகமாகி உள்ளன.
இப்படி எதுவும் எடுத்துக் கொள்ளாத நிலையில் வெளியில் சென்று நிறம் குறைந்து சருமம் பொழிவிழந்து போனால்…? அவற்றை எளிதில் பழைய பொலிவுக்குக் கொண்டு வரும் வழிகள் இதோ:
பப்பாளிச்சாறு, ஆர்ஞ்சுச் சாறு – தலா ஒரு தேக்கரண்டி, தேன் – 2 சொட்டு. இவற்றை நன்கு கலந்து அதை அப்படியே எடுத்து முகத்தில் தேய்த்து, மென்மையாகத் தடவிக் கொடுக்க வேண்டும். தடவிக் கொடுக்கும் போது மேல் நோக்கியே செய்ய வேண்டும். பின்பு குளிர்ந்த நீரில் முகம் கழுவ வேண்டும் எண்ணெய்ப் பசையை அகற்ற பயிற்றமாவு அல்லது கடலை மாவு தேய்த்துக் கழுவலாம். இயன்றவரை சோப்புகளை மாற்றி மாற்றிப் பயன்படுத்துவதைத் தவிர்த்துக் கொள்க.
முட்டையின் வெண்கருவை முகத்தில் தடவி அது நன்கு உலர்ந்த பின்பு வெதுவெதுப்பான நீரில் முகம் கழுவ மங்கலான நிலை மாறி முகம் பளபளப்புப் பெறும். தேனுடன் பாலாடை சம அளவு கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் வரை அப்படியே ஊறவிட்டுக் குளிர்ந்த நீரில் முகம் கழுவ சரும வறட்சி நீங்கி சருமம் பளபளப்புப் பெறும். குளிர் நீரில் முகம் கழுவிய பின்பு பாலாடை, தேன் ஆகியவற்றில் பிசுக்கு நீங்க கடலை மாவு அல்லது பயிற்றமாவு தேய்த்துக் கழுவலாம்.
வெயிலில் அலைவதால் கண்கள் சோர்ந்து போன நிலை ஏற்படும். கண்களுக்குப் போதுமான ஓய்வளிப்பதுடன் கண்கள் இரண்டையும் நன்கு மூடி அதன் மீது குளிர்ந்த டீ பேக்ஸ் வைக்கலாம்.
சிறிதளவு கடலை மாவுடன் 2 சொட்டு தேன், சில துளிகள் எலுமிச்சை சாறு, கொஞ்சம் புளித்த தயிர் இவற்றைச் சேர்த்து நன்கு கலந்து, வெயிலில் செல்வதால், சூரிய ஒளிபட்டு நிறம் குறைந்து போன இடங்களில் நன்கு தடவி 15 நிமிடங்கள் வரை ஊறவிட்டுப் பின்பு குளிர்ந்த நீரில் கழுவிவிட பலன் உடனே தெரியும்.
எப்போதும் காலணிகளைக் கழற்றாமல் இருப்பதால் கால்களில் காலணிகள் மறைக்குமிடம் ஒரு நிறத்திலும் மற்ற இடங்களில் ஒரு நிறத்திலும் இருக்கும். இதை மாற்ற சில துளிகள் வினிகருடன் கொஞ்சமாக எலுமிச்சைச்சாறு கலந்து இதனுடன் உலர்ந்த திராட்சைப் பழங்கள் கொஞ்சம் சேர்த்து நன்கு அரைத்து காலணிகளின் அடையாளம் படிந்து போன இடங்களில் பற்றாகப் போட்டு 15 நிமிடங்கள் ஊறவிட்டுப் பின்பு கழுவ வேண்டும். தொடர்ந்து 10 நாள்கள் வரை இப்படிச் செய்து வர, இவை மாறி அந்த அடையாளம் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும்.
தலைக்கவசம் (ஹெல்மட்) மிகவும் தேவையான ஒன்று. இதை அணிவதால் முடி கொட்டிப் போய் விடுமே என்ற எண்ணமே தவறானது. அன்றாடம் தலை மயிர்க்கால்களில் கைகளாலேயே மென்மையாகத் தடவிக் கொடுப்பதால் தலையில் இரத்தம் ஓட்டம் பெருகி முடிவுதிர்தல் நன்கு கட்டுப்படும்.
வெளியில் அதிகம் செல்வதால் தலையில் அதிகமாகத் தூசு படியும். இதனால் முடிந்தால் வாரம் மூன்று முறை அல்லது இரண்டு முறையாவது தலைக்குக் குளித்தல் வேண்டும். இயன்றவரை ஷாம்புகளைத் தவிர்த்தல் நலம்
-ஹசினா
( இனிய திசைகள் – மார்ச் 2013 இதழிலிருந்து )
இனிய திசைகள்
27 நரசிம்மபுரம்
மயிலாப்பூர்
சென்னை 600 004
044 2493 6115
9444 16 51 53