கி.பி. 639 ஆம் ஆண்டிலே, சிரியாவில், பயங்கரமான கொள்ளை நோய் பரவியது. அந்த நோயினால் இருபத்தையாயிரம் மக்கள் மாண்டார்கள்.
மதீனாவிலிருந்த கலீபா உமருக்கு இந்தக் கொள்ளை நோயின் கேடு பற்றிய செய்தி கிடைத்ததும் மனம் மிக வருந்தினார். அவர் கோநகரிலிருந்து புறப்பட்டு சிரியா சென்று தப்பியிருந்த மக்களுக்கு எல்லா வகையான உதவிகளும் அளிக்க முன் வந்தார். சிரியாவுக்கு கிறிஸ்தவ நகரான ஐலா ஊடாகவே செல்ல வேண்டும். சிறு கூட்டத்துடன் கலீபா ஒட்டகத்திலே பயணஞ் செய்தார். தம்மை மக்கள் அடையாளங் காணுவதை விரும்பாத கலீபா நகரத்திற்குள் நுழையும் பொழுது பணியாளுடன் தமது இடத்தை மாற்றிக் கொண்டார்.
மகத்தான கலீபாவைக் காண வேண்டும் என்று ஆவல் கொண்டிருந்த மக்கள் வீதிகளிலே திரண்டு “கலீபா எங்கே?” என்று கோஷமிட்டார்கள்.
‘’அவர் உங்களுக்கு முன்னால் வருகின்றார்.’’ என இரு அர்த்தங்கள் பொருந்துமாறு பதிலளித்தார். ஒட்டகம் மெதுவாக முன்னேறியது. மக்கள் கூட்டத்தினர் கலீபா முன்னால் வந்து கொண்டிருக்கின்றார் என்ற நினைப்பில் இன்னும் முன்னாலே விரைந்தார்கள் இவ்வாறு மக்களுக்குத் தெரியாதவாறு வெய்யிலெறித்த அந்தப் பகற்பொழுதைக் கிறிஸ்தவ மேற்றிராணியாருடன் கழித்தார். கடின பயணத்தினால் அவருடைய மேற்சட்டை கிழிந்திருந்தது. அதனைத் தைப்பித்து எடுத்தார். புதியகால நிலைக்குப் பொருந்தக் கூடிய புதிய மேற்சட்டை ஒன்றினை அன்பளிப்புச் செய்ய மேற்றி ராணியார் முன் வந்தார். நன்றி கூறி, அதனை ஏற்க கலீபா உமர் மறுத்து விட்டார். அவர் தன்னுடைய அங்கியையே அணிய விரும்பினார்.
இக்காலத்தில் பிலால் (ரலி) சிரியாவிலேயே வாழ்ந்து கொண்டிருந்தார்.
அராபியாவில் நானே முதல் முஸ்லிம்
ரூமிகளில் முதல் முஸ்லிம் ஸுஹைப்
ஈரானியரில் முதல் முஸ்லிம் ஸல்மான்
அபிஸீனியரில் முதல் முஸ்லிம் பிலால்
என்று பெருமானாரே பிலால் (ரலி) பற்றிக் குறிப்பிட்டுள்ளார்கள்.
பெருமானார் மக்காவிலிருந்து மதீனா நகர் வந்தடைந்ததும், முஸ்லிம்களின் தொழுகைக்காக ஒரு பள்ளி வாசலைக் கட்டினார்கள். அந்தப் பள்ளிவாசலுக்கு ‘மஸ்ஜிதுந் நபவி’ என்று பெயர். இந்தப் பள்ளிவாசலில் மு அத்தினாக – இஸ்லாத்தின் முதல் மு அத்தினாக – பெருமானாரினாலேயே நியமிக்கப்பட்ட சிறப்பும் ஹழரத் பிலாலுக்கே வாய்த்தது.
ஆனால், பெருமானார் காலஞ் சென்றதும் அதான் என்ற தொழுகை அழைப்பினைக் கூற பிலால் விரும்பாது விலகிக் கொண்டார்.
பின்னர் சிரியாவுக்குச் சென்ற படையுடன் சென்று அங்கேயே தங்கிக் கொண்டார். தமது பணிகளை முடித்துக் கொண்டதும் கலீபா சிரியாவிலிருந்து புறப்படுவதற்குத் தயாரானார்.
டமஸ்கஸிலே வாழும் பிரமுகர்கள் பிலால் (ரலி) பாங்கு சொல்வதைத் தாங்கள் கேட்க விரும்புவதாகத் தெரிவித்தார்கள். கலீபாவினுடைய வேண்டுகோளை ஏற்று கடைசி முறையாக பாங்கு சொல்ல பிலால் (ரலி) ஒப்புக் கொண்டார்.
பெரிய பள்ளிவாசலின் மேலே நின்று அந்தக் கிழவர் பாங்கு சொல்லத் தொடங்கினார். அவருடைய குரல் தெளிவாகவும், கம்பீரமாகவும் ஒலித்தது. இதனால் தினமும் பெருமானார் நடத்தும் தொழுகைக் காட்சியை பிலாலின் குரல் மிகத் தெளிவாக அவர்களுடைய நினைவுகளுக்குக் கொண்டு வந்தது. அப்பொழுது உமர் (ரலி) உட்பட அநேக பலசாலிகளான விரர்கள் நெஞ்சுருக வாய் விட்டே அழுதார்கள்.
( இளம்பிறை எம்.ஏ. ரஹ்மான் எழுதிய இஸ்லாமிய வரலாற்றுக் கதைகள் எழுதிய நூலிலிருந்து )
வெளியீடு :
இளம்பிறை பதிப்பகம்
14/23 வஹாப் தெரு G-3
சூளைமேடு
சென்னை – 600 094
தொலைபேசி : 98 408 75419
அமீரக தொடர்பு எண் : 052 773 6944