–தென்றல் கமால்
சிரிப்பைத் தொலைத்து
சிலகாலம் ஆனது
அவ்வப்போது அழுவதென்பது
வாடிக்கையாய்ப் போனது
ஏன் என நீங்கள் புருவம்
உயர்த்துவது புரிகிறது
கூடவே இருந்தவன்
குழிக்குப் போன பின்
சிரிப்பைத் தொலைத்து
சிலகாலம் ஆனது
அவ்வப்போது அழுவதென்பது
வாடிக்கையாய்ப் போனது
அவனுக்கு “புற்று“ என்றார்கள் எனக்கு
உலகின் மீதிருந்த “பற்று” போனது
மரணத்தைச் சுமந்து கொண்டு
மனிதனால் எப்படி சிரிக்க முடிகிறது !
மரணம் சுமக்கும் பிணமா மனிதர்கள் !
கேள்விகள் தினம் தினம் என்னுள்
வேள்விகள் செய்கின்றன
நேரமோ கரைந்து கொண்டிருக்கிறது மரணமோ
மனிதனை நோக்கி விரைந்து கொண்டிருக்கிறது
நாட்காட்டியில் தாள் ஒன்றைக் கிழிக்கையில்
வாழ்வின் நாள் ஒன்றையல்லவா கிழிக்கிறோம்.
ஒரு நாள் ஒவ்வொரு மனிதனுக்கு
விடியாமலே போகப் போகிறது
ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தைச்
சுவைத்தே தீர வேண்டும்
மரண வேதனை நிச்சயமானதொன்று
இறைவரிகள் வலிகளாய் என்னுள்
நினைவலைகளைச் செய்கின்றன
அகமும் புறமும் அழுக்குகளை சுமக்கும்
உடலுடைய மனிதனுக்குத் தான்
உலகின் மீது எத்தனை ஆசை
ஆணவம் பெருமை பொறாமை பேராசை !
மரணத்தைச் சுமந்து கொண்டு
மனிதனால் எப்படி சிரிக்க முடிகிறது
ஞானம் கிடைத்து விட்டால் இந்த
ஞாலத்தை வெறுத்திடுவோமே
கேள்விகள் தினம் தினம் என்னுள்
வேள்விகள் செய்கின்றன
சிரிப்பைத் தொலைத்து
சிலகாலம் ஆனது
அவ்வப்போது அழுவதென்பது
வாடிக்கையாய்ப் போனது
– தென்றல் கமால் –