சேமிக்காதது பறவை மட்டுமல்ல; நானும் தான் !

இலக்கியம் கட்டுரைகள் தத்துவக் கவிஞர் இ பதுருத்தீன்

( தத்துவக் கவிஞர் இ. பதுருத்தீன் )

செல் : 9444272269

 

இறைவா !

தணிப்பதற்கு வழி தெரியாமல் நான் தாகத்துடனிருந்தேன்.

குளங்களும், வற்றா ஏரிகளும் காணப்பட்டாலும் குவளை அளவும் குடிக்க நீர்கேட்கத் தோன்றவில்லை; அல்லது துணியவில்லை.

ஒரு பகலே இரவாகப்பட்டபோது – ஓர் இரவே பகலானது போல் – நான் ஆச்சர்யத்தில் உறைந்தேன்; ஆனந்தத்தில் நிறைந்தேன்.

ஓ … அறியாப்புரத்திலிருந்து வந்த உன் ஆதரவால் தாகசாந்தி அடைந்தேன் !

உழுதுவந்த என் எழுதுகோல் வழியாக உன் உபகார ஊற்றுக்கண் பீறிட்டது; பிரமித்தேன் !

ஆதவன் அஸ்தமித்தாலென்ன, நீ நாடிவிட்டால் – மனித உதயங்களைத் தோன்றச் செய்து விடுகிறாய் !

இறைவா !

தேவையின் போது பயன்படுமெனச் சேமிக்காதது பறவை மட்டுமல்ல; நானும் தான் !

ஆனால், திரும்பத் தருகிறேன் என்று பறவை கடன் வாங்குவதில்லை; நான் வாங்கும் வரிசையில் !

சொட்டுப் பன்னீருக்காக ஆயிரம் மலர்கள், கசக்கப்படுவதைப் பற்றி எவரும் கவலை கொள்ளாத உலகத்தில் –

திறப்பதற்காகத் திருகினால், குழாயின் காதுக்கு வலிக்குமே என்று சொட்டு நீரும் குடிக்காதிருப்பவன் நான் !

சுகமாகப் பற்ற வைக்கக் குச்சிக்குள் தீயைக் குடிவைத்திருக்கும் உலகத்தில் – தீய்க்குள் குச்சியைத் தேடிக் கொண்டிருப்பவன் நான் !

இறைவா !

பெரும் கைப்பொருள் கொண்டிருப்பவர்களும் கடலும் ஒன்று தானோ? இரண்டுமே கரிக்கின்றனவே !

எனுனும், அரிதாக கடல் நீரிலிருந்தும் குடிநீரைப் பிரித்தளிக்கும் சாதனங்களாய் சில வள்ளல்களையும் நீ வழங்கியுள்ளாய் !

பெரும்பாலும் தலைவர்களெல்லாம் வள்ளல்களாய் இருப்பதில்லை; நீ நாடினால் வள்ளல்களைத் தலைவர்களாகத் தந்து விடுகிறாய் !

ஆயிரம் பேசுவார்கள் பலர்; ஒன்றுக்கும் உதவமாட்டார்கள். ஓஹோ’ என்று சிலர் பேச மாட்டார்கள். ஆனால், ஆயிரம் உதவி செய்வார்கள்.

ஓ … இவர்களல்லவா அறிவுஜீவிகள் !

இறைவா !

கொடிகள், பூக்களை மறைத்து வைத்துக் கொள்வதில்லை;

குற்றாலம், தண்ணீரை தடுத்து வைத்துக் கொள்வதில்லை;

கோகினூர் வைரம் ஒளியை ஒளித்து வைத்துக் கொள்வதில்லை;

ஆனால், செல்வச் சீமான்கள் பெரும்பாலோர் தம் பணப் பெட்டியைப் பூட்டுக்கு மேல் பூட்டுப் போட்டு மறைத்து வைத்திருப்பதேன் ?

இறைவா !

எல்லாம் உடைய நீ தனித்திருந்தாலும் உயிரினத்தோடு கலந்தே இருக்கிறாய். ஆனால் இருப்புள்ள பலர், ஊரோடு கலந்திருந்தாலும் தனித்தே இருக்கிறார்களே !

உன் ஏவல் உடலிருக்கிறது; ஆனால் அதில் நடைமுறை என்னும் உயிரைத்தான் அவர்களிடம் காணோம் !

உண்மை; நீயொருவன் தான் தயாபரன், தாராளன், தர்மசீலன் !

உன் தர்பாரில் மட்டும் தான் நுழைவுக் கட்டணமில்லை !

உண்டி கொடுப்பவன் நீ என்பதால் எந்த உண்டியலும் உன் இல்லத்திலில்லை !

இறைவா !

உன் அரசாட்சிதான் வரி வசூலிப்புக்கு மாறாக வரி கொடுக்கச் சொன்னது !

பல பேர் நடிக்கிறார்கள்; உதவுவதில்லை; சில பேர் உதவுகிறார்கள், நடிப்பதில்லை.

உதவுபவர்கள் தென்படாத போது, தென்படாமல் உதவுபவன் நீ ! உதவச் செய்பவன் நீ !

உன் சட்டத்தில் தான், ‘தர்மம் செய்தால் பத்து நன்மை’களும், கடன் கொடுத்தால் பதினெட்டு நன்மை’களும் பகரப்படுகின்றன !

உன் தீர்ப்பில் தான், விலைமாது ஒருத்திக்கு நரக விடுதலை – ஈவும், இரக்கமும் காட்டியதால் !

உன் காவலில் தான், தொழுகையாளியானாலும் கருமியெனில் சுவனத்தில் நுழைய அனுமதி மறுப்பு !

உன் இறுதித் தூதரிடம் தான் செல்வம், பூட்டப்பட்டதில்லை; ஏழ்மை, புறக்கணிக்கப்பட்டதில்லை !

இறைவா !

உரிய முகவரிகளுக்கு ‘மணியார்டரை ஒப்படைக்க வேண்டிய பொறுப்பு – ’போஸ்ட் மேனு’ க்கு மட்டுமன்று, பொருட் செல்வம் படைத்தோருக்கும் தான் !

பெட்டிப் பணம் என்பது பெற்ற பெண் பிள்ளை, அது பன்மடங்கென்னும் பருவமடைந்த பின்னும் – தேவையுடையவரைத் தேடி ஒப்படைக்காதிருத்தல் மடமை மட்டுமல்ல; கடமை தவறிய செயல் !

உன் பிரதிநிதி மனிதன். மனிதனின் பிரதிநிதி கவிஞன் !

உலகின் பிரதிநிதி உன்னத சமுதாயம்; அந்தச் சமுதாயத்தின் பிரதிநிதி உயரிய தலைவன்.

இதைப் புரிந்தவர், தலைமையானால் சமுதாயத்தில் – ஊரில், சமுதாயம் தலைமை கொள்ளுமன்றோ !

 

( இறைவா ! எனும் நூலிலிருந்து )

 

வெளியீடு :

ஆசாத் பதிப்பகம்

158 அவ்வை சண்முகம் சாலை

கோபாலபுரம்

சென்னை 600 086

 

நூலாசிரியர் முகவரி :

65, 1131 வ.உ.சி. நகர்

தொண்டியார் பேட்டை

சென்னை 600 081

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *