போரடிக்குது……………………
-புதுசுரபி
அண்மையில் எனது அலுவலகத்தில் பணிபுரியும் சக நண்பர் ஒருவரின் வீட்டிற்கு அவரது அழைப்பின்பேரில் சென்றிருந்தேன்.
வரவேற்பறையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம்.
இடயிடையே அவரது ஐந்து வயது மகள் அப்பாவின் காதில் ஏதோ சொல்வதும் போவதுமாய் இருந்தாள்.
ஒருவேளையில், “ஒருநிமிஷம்”, என்று மகளின் கட்டளையினை ஏற்று உள்ளே சென்று வந்தார்.
“ஒண்ணுமில்லே,ரொம்ப ‘போர்’ அடிக்குதாம், அதான் வீடியோகேம் விளையாடவேண்டுமென்று கேட்டாள்” என்று சொன்னார்.
“நாம ஆபீஸ் முடிந்து வீட்டுக்கு போகும்வரை பிள்ளைக்கு ‘போர்’ அடிக்கும்ல்ல, அவளுக்கு பொழுதுபோகனும்ல்ல” என்று
தனது ஐந்து வயது மகளுக்கென ஒரு பத்து இருபது கார்டூன் சி.டிக்கள், வீடியோகேம், பொம்மைகள் என்று வாங்கி
குவித்திருப்பதாகவும் தகவல் தந்தார்.
அவர்மட்டுமல்ல, இன்று நம்மில் பெரும்பாலோனரும் இதைத்தான் செய்கிறோம்.
இன்றைக்கு, ஆண்பிள்ளையோ அல்லது பெண்பிள்ளையோ வித்தியாசம் இல்லாமல் சொல்லும் ஒருவார்த்தை- ‘ஒரே போரடிக்குது’
அநேக குழந்தைகள் ‘போர்’அடிப்பதை போக்குவதற்கு அமர்வது அல்லது அமர்த்தப்படுவது தொலைக்காட்சியின் முன்பாகவோ
அல்லது கணினியின் முன்பாகவோதான் என்பதை மறுப்பதிற்கில்லை.
ஆக மொத்தம் ஏதோ ஒரு திரை அவர்களின் வாழ்க்கைக்குத் திரைபோட துடிக்கிறது.
ஆனால் ‘போரடிக்கட்டும், அவர்களுக்கு எந்த திரையும் வேண்டாம் ‘ என்கிறார்கள் கல்வியியல் வல்லுநர்கள்.
“கனவு காணுங்கள்” என்று சொன்னாரே கலாம்; அந்த கனவுக்கு அதிகம் வழிவகுப்பது ‘போரடிக்கும்’ காலம்தானம்!
பொதுவாக, சலிப்படையும் (போரடிக்குது… இனி தமிழில்) தன்மைக்கும் தனிமைக்கும் நெருங்கிய தொடர்பிருக்கிறது.
தனிமையே சலிப்பினை தோற்றுவிக்கிறது. அதேவேளையில்,சலிப்படைந்து இருக்கும்போது “என்னைக் கொஞ்சம் தனியா
இருக்கவிடு” என்று தனிமையையும் தேடுகிறது
வித்தியாசமாய் சிந்திப்பவர்களைப் பார்த்து ‘ரூம் போட்டு யோசிப்பாய்களோ?’ என்று கிண்டலாய் சொல்வதுண்டு.
நாம் தனிமையில் விடப்படும்போதுதான் நமக்குள் இயற்கையாகவே பொதிந்துள்ள படைப்பாக்கத்திறன் வெளிவருவதாக
கண்டறியப்பட்டிருக்கிறது.
.
இங்கிலாந்தின் கிழக்கு ஆங்கிலேய பல்கலைக்கழகத்தின் மூத்த ஆராய்ச்சியாளரான டாக்டர்.போல்டன் ஒரு ஆராய்ச்சி
மேற்கொண்டார். புகழ்பெற்று விளங்கும் பல நூலாசிரியர்கள்,கலைஞர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் ஆகியோரிடம் நடத்தப்பட்ட
ஆய்வின் இறுதியில் ஆச்சரியமான அந்த உண்மையினை போல்டன் நிரூபித்துள்ளார்.
சலிப்படையும் காலத்தில் ஆக்கப்பூர்வமாய் சிந்தித்து சிகரம் தொட்டவர்களில்,ஆய்வுக்காக டாக்டர்.போல்டன் சந்தித்த அஷ்டாவதானி
மீரா சியல் பற்றிபார்ப்போம்..
இவர்,இங்கிலாந்தின் தலைசிறந்த நகைச்சுவைக் கலைஞர், சிறந்த நூலாசிரியர், நாடக ஆசிரியர், உள்ளங்கவரும்
பாடகர்,எழுத்தாளர்,பத்திரிகையாளர், குணச்சித்திர நடிகை மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர்.
(இவரின் நாவல்தான் ‘பாம்பே ட்ரீம்ஸ்” ஆக மாறி ஏ.ஆர்.ரஹ்மானை இந்திய எல்லையினை தாண்ட வைத்தது.)
குக்கிராமத்தில் வளர்ந்தது இவரது இளம்பிராயம், சலிப்பூட்டும் காலங்களில் திரைகளுக்குமுன் செல்லாமல்,சன்னலின் திரைகளை
பின்னுக்குத் தள்ளி இயற்கையை ரசித்திருக்கிறார், வயல்வெளியில் நடந்திருக்கிறார், தன்னை நெருங்கும் காலங்களை
உணர்ந்திருக்கிறார். அந்த நினைவுகளை தன்னுடைய குறிப்பேட்டில் குறித்துவைக்கும் பழக்கம் கொண்டிருக்கிறார்.
இளம்வயதில், சலிப்பூட்டும் காலங்களை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தக் கற்றுக்கொண்டதுதான் தன்னை பின்நாளில் ஒரு
எழுத்தாளராக உருவாக்கியது என்று மனப்பூர்வமாய் நம்புகிறார்.
இதேபோல,டக்டர்.போல்டன் சந்தித்த நபர்களில் இன்னொருவர் உலகின் தலைசிறந்த மூளைநரம்பியல் மற்றும் மூளையின்
செயல்திறன் ஆராச்சியாளர் பேராசிரியர்.சூஸன் க்ரீன்பீல்டு ஆவார்.
ஒரு ஏழைக்குடும்பத்தில் பிறந்த இவருக்கு, பொம்மைகள் வாங்கி விளையாடும் அளவிற்கு கூட வசதியில்லையாம்.
தன்னுடைய 13 வயதுவ்ரையிலும் சகோதர சகோதரிகளின்றி (இயற்கையாகவே)தனிமையில் வளர்ந்திருக்கிறார்.
இவர் தன்னுடைய சலிப்பூட்டும் காலங்களில் கதைகேட்பது , கதைசொல்வது, தான் சொன்ன கதைகளுக்கேற்ப ஓவியங்கள் வரைவது
மற்றும் நூலகத்திற்கு சென்று புத்தகங்கள் படிப்பது என்று நேரத்தை செலவிட்டிருக்கிறார்.
தன்னுடைய கற்பனைத்திறன் அதனை வெளிப்படுத்தும் ஓவியத்திறன் ஆகிய இரண்டும்தான் மூளைத்திறன் பற்றி ஆராய்வதற்கான
உள்ளீட்டினை தனக்கு தந்ததாக சொல்கிறார்.
“ஆழ்ந்த சிந்தனையினைத் தூண்டும் எந்தவொரு செயலும், நம் வாழ்க்கையினை நகர்த்துவதற்கு தேவையான உள்ளீடைத்தரும்
உந்துசக்தியாய் அமையும்” என்பது இவரது நம்பிக்கை,
“இயற்கை ஒருபோதும் நம்மை, சிந்திக்காத வெற்றுமதி கொண்டோராயிருக்க அனுமதிக்காது என்றும், நமக்கு கிடைத்த உள்ளீடுகளை
வைத்து நாமே நம்முடைய சிந்தனைக்கலனை நிரப்பிக்கொள்கிறோம்” என்பது இவரது தத்துவம்.
தவறான உள்ளீடுகளின் காரணத்தினாலேயேதான் சில இளைஞர்கள், பொதுச்சொத்துகளுக்கு குந்தகம் விளைவிப்பது, பொதுமக்களை
அச்சுறுத்தும்விதமாக வாகனங்கள் ஓட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்பது இவரின் குற்றச்சாட்டு.
முன்பு ஒரு ஆய்வில், ஏதும் வேலையில்லாமல் இருக்கும் குழந்தை உடனடியாக நாடுவது தொலைக்காட்சி, விடீயோ, கம்ப்யூட்டர்
அல்லது மொபைல் போன் போன்ற ஏதோ ஒரு திரையைத்தான் என்றும், நாளடைவில் இதில் செலவழிக்கும் நேரம் கணிசமாக
உயர்ந்துவிடுகிறது என்றும் இதனால் குழந்தைகளின் எழுதக்கூடிய திறன் குறைந்துவிடுவதையும் கண்டறிந்தனர்.
இப்போது அவசரத்தேவை தேவை
குழந்தைகளின் சலிப்பூட்டும் காலத்தினை ஆக்கப்பூர்வமாய் மாற்றுதல்.
எழுத்துக்கும் எழுதுவதற்கு உறுதுணையாய் இருக்கும் கற்பனைத்திறனை வளர்த்தல்.
கற்பனைக்கு ஆணிவேராய் இருக்கும் தன்னை சுற்றி நடப்பவைகளை உன்னிப்பாய் உட்கிரகிக்க சிந்திக்கச்செய்தல்.
கற்பனைத்தூண்டலுக்கு வேட்டு வைக்கும் உள்ளீடு தரும் தளங்களைத் தவிர்த்தல்.
போரடிக்குதா???????????????????????