( பாத்திமுத்து சித்தீக் )
தனித்திருந்தும், விழித்திருந்தும் இறைவனை வணங்கி, ஓதித் தொழுது வந்த ஒரு மகான் ஒருவர் தன் தவப் பயனை மனிதர்களின் குறைகளைக் கேட்டு, உபதேசித்து சேவை செய்து கொண்டிருந்தார். ஊரை விட்டு ஒதுக்குப்புறமாயிருந்த சிறுகுடிலில் வசித்து வந்த இந்த ஞானியின் புகழ் திக்கெட்டும் பரவிக் கொண்டிருந்தது.
அந்த ஊரிலேயே மிகப்பெரிய செல்வந்தனாயிருந்த மனிதன் மகாக்கஞ்சன் நிறைய பொன்னையும், பொருளையும் குவித்து வைத்திருந்ததால் நிம்மதியாக உறங்கக் கூட முடியாமல் தவித்தான். அவ்வப்போது வந்து கொண்டிருந்த சுகக்கேடுகள் அடிக்கடி வர ஆரம்பித்தன. மரண பயம் வேறு உலுக்கியெடுத்துக் கொண்டிருக்கிறது. ஊரில் பிரபலமாயிருந்த ஞானியிடம் சென்று ஆலோசனை பெற்று வரலாம் என்று எண்ணினான்.
ஒரு நாள் ஞானி தனியாக அமர்ந்திருந்த நேரத்தில் ஞானியின் குழலையடைந்து பவ்யமாக ஸலாம் கூறி நின்றான். ‘என்ன’? என்பது போல் ஏறிட்டும் பார்த்த ஞானியிடம்” எனது பிறப்பு பற்றிய விஷயத்தை தங்கள் ஞானக்கண்ணால் கண்டறிந்து சொல்ல வேண்டுகிறேன்…” என்று சொல்லி வாய் மூடுவதற்குள், “இன்னும் மூன்று நாட்களில்…” என்றார் ஞானி.
வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு “நான் என்ன செய்வேன்… இதிலிருந்து தப்பிக்கும் மார்க்கமில்லையா?’’ என்று பலவாறும் அழுது புலம்பி கதறிக் கொண்டே தன் வீட்டிற்கு ஓடினார்.
இரும்புப் பெட்டியில் கட்டுக்கட்டாக அடுக்கி வைத்திருந்த ரூபாய் நோட்டுகளையும் பைகளில் முடிந்து வைத்திருந்த சில்லறைகளையும் எடுத்து தான தர்மம் செய்ய ஆரம்பித்து விட்டான். அடுத்தடுத்து வந்த மூன்று நாட்களிலும் !
தானதர்மத்தின் மூலம் நிறைய நன்மைகளை சேமித்துக் கொண்ட கஞ்சனை மரணம் எட்டியே பார்க்கவில்லை. தூக்கமும் வரவில்லை.
நான்கு நாட்களாக, மரணத்தை எதிர்பார்த்தும் வராத மரணம் கஞ்சனை ஏமாற்றத்துக்குள்ளாக்கியது. ஐந்தாவது நாள் அதிகாலையில் எழுந்து காலைக் கடன்களை முடித்து கையோடு ஞானியின் குடிலை நோக்கி கோபத்தோடு சென்றான் கஞ்சன்.
தியானத்தில் ஈடுபட்டிருந்த ஞானி ஏறிட்டுப் பார்த்ததும் “நீர் என்னை நன்றாகவே ஏமாற்றி விட்டீர். இரும்புப் பெட்டி நிறைய இருந்த என் செல்வமும் காலியாகி விட்டது. இனி நான் என்ன செய்வேன்”. மீதி நாட்களை எப்படிக் கழிப்பேன்” எனும் தினுசில் வாயில் வந்தபடியெல்லாம் புலம்ப ஆரம்பித்தான்”.
“உன்னை நான் ஏமாற்றவில்லை. எனக்கு எந்தக் கட்டாயமும் இல்லை… நான் சொன்ன அந்த மூன்று நாட்களில் முன்பிருந்த கஞ்சப்பிரபு செத்தொழிந்து விட்டான் என்பது நிஜந்தானே…? இப்போது நீர் “தர்மப்பிரபு” அல்லவா? இப்படியே தானதர்மம் செய்து வாழ்ந்து நன்மையைத் தேடுங்கள்” என்று உபதேசித்து புத்தி புகட்டினார் அந்த ஞானி.
“ஈயார் தேட்டை தீயோர் கொள்வர்”, “தர்மம் தலைகாக்கும்” அளவோடு செலவழித்து வளமோடு வாழ வேண்டும்… என்றெல்லாம் முன்னோர் அறிவுறுத்தி வந்துள்ளனர். இதையே 2600 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தத்துவ அறிஞரும் தலைசிறந்த சிந்தனைவாதியுமான கெட்சு என்பவர் “தாரான் குணமற்ற சிக்கனமும் சிறந்ததல்ல, சிக்கனமில்லாத தாராள குணமும் சரியல்ல” எனும் பொருள்பட செப்பிச் சென்றார். இறுதி நபி முஹம்மது (ஸல்) போதித்த “நடுநிலை செலவீனமும்” இதுவே !
நன்றி :
அன்னை கதீஜா மாத இதழ்
மே 2011