காலப்பெட்டகம்
இராமநாதபுரம் அரண்மனை வரலாறு
( அல்ஹாஜ். என். அன்பு பகுருதீன் )
இராமநாதபுரம் அரண்மனையை சுற்றி பாதுகாப்புக்காக 44 கொத்தளங்கள் கட்டப்பட்டன. கிழவன் சேதுபதி காலத்தில் தான் இவை கட்டப்பட்டன. (காலம் 1678 – 1710). அரண்மனை நிர்வாகத்திற்காக (தர்பார் மண்டபம்) பக்கத்திலேயே ஒரு மண்டபம் கட்டப்பட்டு அதற்கு இராமலிங்க விலாசம் என்று பெயர் சூட்டப்பட்டது. ஆட்சி செய்த மன்னர்கள் தினசரி இங்கே மக்களை சந்திப்பார்கள். விளையாட்டு வீரர்கள், கலைநிகழ்ச்சி நடத்துபவர்கள், புலவர்கள் பரிசில்கள் பெறுபவர்கள் இந்த மண்டபத்தின் தென்மேற்கு மூலையில் உள்ள மேடையில் தான் மன்னர்களுக்கு முடிசூட்டு விழா நடைபெறும்.
அருகில் உள்ள ஊற்றுக் கிணறுக்கு நூபுர கங்கை என்றும், நாகநாத சமுத்திரம் என்றும் பெயர். அதில் நீராடிய பின்னரே, முடிசூட்டிக் கொள்வது வழக்கமாக இருந்து வந்துள்ளது. சேதுபதி மன்னர்களின் வழித்தோன்றல்களாக கிழவன் சேதுபதி, முத்து விஜயரகுநாத சேதுபதி, குமரமுது விஜயரகுநாத சேதுபதி, சிவகுமார முத்து விஜயரகுநாத சேதுபதி, ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி (ஆங்கிலேயர்கள் இவரை கலகக்காரர் என்ற பெயரில் ரிபேலியன் என அழைத்தனர்). ராணி மங்களேஸ்வரி நாச்சியார், பாஸ்கர சேதுபதி, இரண்டாம் முத்துராமலிங்க சேதுபதி, சண்முக ராஜேஸ்வரி நாகநாத சேதுபதி (காமராசர் அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர்) இராமநாத சேதுபதி, அவரது புதல்வி ஸ்ரீ பிரம்மகிருஷ்ண இராஜராஜேஸ்வரி என்றும் இருந்தனர். இராமநாத சேதுபதியின் உடன்பிறந்த தம்பி மகன் தான். தற்போதைய குமரன் சேதுபதி என்பது குறிப்பிடத்தக்கது.
கப்பம் கட்டுவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கு குற்றாலம், சேத்தூர், தளவாய்புரம் போன்ற ஊர்களுக்கு சேக்சன் துறை அழைத்தபோது வர மறுத்த வீரபாண்டிய கட்டபொம்மன் 1799 ம் ஆண்டு இராமலிங்க விலாசத்தில் தான் சேக்சன் துரையை சந்தித்தார். மன்னராட்சி காலத்தில் இங்கிருந்து சென்ற சேதுநாட்டுப் படை எங்குமே தோற்றதில்லை. ஆங்கிலேயர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டு எஞ்சிய ஆயுதங்களும், சிவகங்கை சமஸ்தானத்தின் அரியணையும் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
தமிழர்களுக்கே உரித்தான மரவளரி என்ற ஆயுதமும் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. சேதுபதிகள் பற்றிய அரசு நூல்கள் மன்னர் காலத்து செப்பேடுகளும் உள்ளன. மன்னர் உடற்பயிற்சி செய்வதற்காக உருவாக்கப்பட்ட இளவட்டகல்லும் இங்கே காணப்படுகிறது. இராமயணக் காட்சிகள் வண்ணத்தில் சுவர் ஓவியங்களாக இருப்பதை இங்கு மட்டுமே காண முடியும் என்கிறார்கள். 4 x 6 அளவில் ஒரு சுரங்கப் பாதையும் தெரிகிறது. பத்தடி தூரத்தோடு மூடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்கள்.
இராமநாதபுரத்திற்கென தனிச் சிறப்புமிக்க வரலாறு உள்ளது. செவிவழிச் செய்தியாகவும், புத்தகங்கள் வாயிலாகவும் பல்வேறு தகவல்கள் சொல்லப்பட்டுள்ளன.
காலத்தால் அழியாத அளவுக்கு பல்வேறு சிறப்புக்கள் இன்றும் நிலைப்பெற்றுள்ளன. சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு சேதுபதி மன்னர்கள் ராமநாதபுரத்தில் பெரிய அரண்மனை கட்டி சுயேச்சை அரசர்களாக விளங்கினர். திருச்சி, தஞ்சை எல்லை வரை ஆட்சிக் கொடி பறந்தது. அப்போது அமைக்கப்பட்ட கோட்டை பிள்ளையார் கோயில், அகழியைக் குறிக்கும் வகையில் அமைந்த அகழிக்கிடங்கு தெரு இப்போதும் உள்ளது.
கோட்டை வாயிலில் காவல் புரிந்தவர்கள் பட்டணம் காத்தான் என்று அழைக்கப்பட்டனர். அதன் அடையாளமாக ராமநாதபுரம் அருகே பட்டணம் காத்தான் என்ற ஒரு கிராமம் உள்ளது.
1800 ஆம் ஆண்டு ஊமைத்துரை ஆங்கிலேயரிடம் இருந்து தப்பித்து ராமநாதபுரம் வந்தார். சேதுபதி மன்னர்களிடம் தஞ்சம் புகுந்தார். மன்னர் தமது அரண்மனை ராமலிங்கவிலாசத்தில் அவரை மறைத்து வைத்து பாதுகாத்தார். இதையறிந்த ஆங்கிலேயர் படையுடன் ராமநாதபுரம் வந்தனர். உடனே ராமலிங்க விலாச சுரங்கப்பாதை வழியாக ஊமைத்துரையை சேதுபதி மன்னர் தப்பிக்க வைத்தார். அதனால் கோபம் கொண்ட ஆங்கிலேயர் கர்னல் ராமநாதபுரம் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார். கர்னல் தங்கியிருந்த கட்டடம் கர்னல் பங்களா என்று பெயர் பெற்றது. பின்னர் 1803 ம் ஆண்டு ராமநாதபுரம் அரண்மனை சமஸ்தான கிராமங்கள் ராமநாதபுரம் ராணி மங்களேஸ்வரி நாச்சியாரிடம் ஆங்கிலேயரால் ஒப்படைக்கப்பட்டது.
ராமநாதபுரம் சண்முகராஜேஸ்வரி நாகநாத சேதுபதி அவர்களின் நெருங்கிய நண்பர்களாக தேவிப்பட்டினம் வெங்கட்ராம மொட்டை அய்யர், அகமது பிள்ளை மகன், நாகூர் பிச்சை, எஸ்.பி.எம். பக்கீர் தம்பி மரைக்காயர், ஆசிரியர் வாலாம்பிகை, டாக்டர் மீனாட்சி சுந்தரம், எஸ்.பி.எஸ். சுல்தான், டாக்டர். ராஜன், ககாசிவம் ராவுத்தர் வாப்பு தம்பி மரைக்காயர் அபுசாலிகு போன்றோர் நெருங்கிய தொடர்புடன் டென்னிஸ் விளையாடுவர். ராஜா சேதுபதி குடும்பங்களில் சீதக்காதி மரைக்காயர் குடும்பத்தின் உரத்தூர் ஜமீன் மண்டபம் அப்துல் ரகுமான் மரைக்காயர் குடும்பமும் மிகவும் ஈடுபாடு உள்ளவர்கள்.
நன்றி :
முகவை முரசு
மார்ச் 25 – 31, 2011