காலப்பெட்டகம்
சுதந்திர போராட்ட வீரர் ஹம்சா
(அல்ஹாஜ். என். அன்பு பகுருதீன்)
சுதந்திர போராட்ட ஹீரோக்களில் இவரும் ஒருவர். தேசப்பற்று அவரது ரத்தத்தில் ஊறிக் கிடக்கிறது. நாட்டின் மீது அளவு கடந்த காதல் அவருக்கு. எண்பத்தி நான்கு வயதில் அபார நினைவாற்றலுடன் இருக்கிறார். இந்திய தேசியப் படையில் (ஐஎன்ஏ) நேதாஜியுடன் இருந்த காலங்கள், மகாத்மா காந்தியின் பரிந்துரையால் மரணப் பிடியிலிருந்து மீண்டது, மதக் கலவரத்தில் தந்தையைப் பரி கொடுத்தது என எல்லாவற்றையும் அடுக்கடுக்காக சொல்கிறார்.
அமீர் ஹம்சா அவரது பெயர். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை அடுத்த வால்டாக்ஸ் சாலையில் உள்ளது அவரது வீடு. விதவை மகளுடனும், வறுமையுடனும் வசித்து வந்தார். பூர்வீகம் இராமநாதபுரத்தில் உள்ள அபிராமம் கிராமம். தாத்தா காலத்திலேயே பர்மாவுக்கு சென்று ரங்கூனில் தங்கம், வைரம், வெள்ளி தான் வியாபாரம்.
இளம் வயதிலேயே நேதாஜியின் கொள்கையால் ஈர்க்கப்பட்டார். பிறகு ஐ.என்.ஏ.வில் சேர்ந்த அவர் நாட்டின் விடுதலையைத் தமது லட்சியமாக்கிக் கொண்டார். ஐ.என்.ஏ.வில் சேர்ந்ததும் ரூ. 3 லட்சத்தை நன்கொடையாக நேதாஜியிடம் வழங்கினார். அதை ஏற்க மறுத்த நேதாஜி, ஹம்சாவின் தந்தையிடம் பணத்தை வாங்குவதற்கான அனுமதியை கேட்டார். அவரது தந்தை சம்மதம் தெரிவித்த பிறகே அப்பணத்தை வாங்கினார் நேதாஜி.
நேதாஜி மறைந்து போனது வரை அவருடனே இருந்தவரென்பதால் நேதாஜி பற்றி எவ்வளவு பேசினாலும் அவருக்குச் சலிப்பு ஏற்படுவதில்லை. சிறை அனுபவம் மட்டுமல்ல, தூக்கு மேடை வரை சென்று திரும்பியவர் அவர் !
நேதாஜி மறைந்த பிறகு 1945 ஏப்ரல் மாதத்தில் 26 –ம் தேதி நகைக் கடையில் உட்கார்ந்திருந்த அவரை கர்னல் ரென்னித் தலைமையிலான பிரிட்டிஷ் ராணுவம் கைது செய்தது. கடையில் இருந்த நகையையெல்லாம் எடுத்துக்கொண்டு சென்றுவிட்டார்கள். பிரிட்டிஷ் ராணுவ நீதிமன்றம் அவருக்கு தூக்குத் தண்டனையை அறிவித்தது. அவருடன் 33 பேரும் தூக்கு மேடை ஏற இருந்தார்கள். அப்போது மகாத்மா காந்திக்கு தகவல் போய், உடனே அவரது தலைமையில் ஜவஹர்லால் நேரு, முகம்மது அலி ஜின்னா, வல்லபாய் படேல் உள்ளிட்டவர்கள் பிரிட்டிஷ் ராணுவ நீதிமன்றத்தில் அவர்களுக்காக வாதாடினார்கள். இதனால் உடனே மரண தண்டனையை ரத்து செய்தார்கள்.
1947 –ல் நாடே சுதந்திரம் பெற்ற சந்தோஷத்தில் மூழ்கி இருந்தது. அச்சுதந்திரத்துக்கு காரணமானவர்களில் ஒருவரான ஹம்சாவால் வெகு நாட்கள் சந்தோஷமாக இருக்க முடியவில்லை. அப்போது அவர் திரும்ப ராமநாதபுரத்துக்கே வந்து விட்டார். இந்தியா – பாகிஸ்தான் பிரிவினை ஆகி நாடு முழுக்க வன்முறை.
இவ்வன்முறைத் தீ ராமநாதபுரத்தையும் விட்டுவைக்கவில்லை. மேலக்கொடுமலூரில் இருந்தபோது வன்முறை ஏற்படக்கூடாதென்று ஹம்சாவும் அவரது தகப்பனாரும் பல முயற்சிகள் எடுத்தனர். வன்முறையில் யாரும் ஈடுபடக் கூடாதென்று சமாதானம் பேசினர். யாரும் கேட்க வில்லை. அவரது தகப்பனாரை வேல் கம்பியால் நெஞ்சில் குத்திவிட்டார்கள். ஹம்சாவை இரண்டு பேர் இழுத்துட்டுப் போய் ஒரு வீட்டுக்குள் வைத்து பூட்டிவிட்டார்கள். வன்முறை கூடாதென்று கடைசிவரை பேசிய ஹம்சாவின் தகப்பனாரை கொன்று விட்டனர்.
மதக்கலவரங்களுக்குப் பிள்ளையார் சுழி போட்ட இந்தியா – பாகிஸ்தான் பிரிவினை, தடுக்கப்பட்டிருக்க வேண்டிய ஒன்று என்பது அவரது கருத்தாகும். உங்க தலைமையில் நாடு விடுதலை அடைஞ்சா பிரிவினைக் கொள்கையை கைவிடுவேன்னு நேதாஜியிடம் ஜின்னா சொல்லியிருந்தார். நேதாஜி இருந்திருந்தால் இந்தியா – பாகிஸ்தான் பிரிஞ்சிருக்காது என ஆதங்கத்துடன் வாழ்ந்து மறைந்தார் அமீர் ஹம்சா.
நன்றி :
முகவை முரசு
மார்ச் 11-17, 2011
அவருடைய சொந்த ஊர் மேலக்கொடுமலூர் என்பதை இங்கு தெரிவித்து கொள்கிறேன். மேலும், அவர், இன்னும் உயிரோடு தான் இருக்கிறார்.