முதுகுளத்தூர்:முதுகுளத்தூர் பத்திரப்பதிவு துறை அலுவலக மாற்றத்தால், நிலம் தொடர்பான பதிவுகள் முடிந்தும், பத்திரங்களை பெற, காத்திருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.
நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த, முதுகுளத்தூர் பத்திர பதிவு அலுவலகம், 15 ஆண்டுகளுக்கும் மேலாக சேதமடைந்த கட்டடத்தில், செயல்பட்டு வந்தது. மழை காலங்களில், பதிவேடுகள் அழியும் அபாயம் குறித்து, “தினமலர்’ நாளிதழில் செய்தி வெளியானது.
இதன்காரணமாக, முதுகுளத்தூர் பத்திரபதிவு அலுவலகம் இடிக்கப்பட்டு, புது அலுவலகம் கட்டும் பணி நடந்து வருகிறது. இதனால் தற்காலிகமாக, வாடகை கட்டடத்தில், பத்திரப்பதிவு அலுவலகம், இரண்டு மாதங்களாக செயல்பட்டு வருகிறது.
நிலம் தொடர்பான ஆவணங்களை “ஆன்லைனில்’ பதிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டு, நிலம் பதிவு செய்தும், பத்திரங்களை பெற மாதக்கணக்கில் காத்திருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.
வெண்ணீர்வாய்க்கால் குருநாதன் கூறியதாவது: பிப்ரவரி முதல் வாரத்தில், நிலம் வாங்கி பதிவு செய்தும், ஒரு மாதத்திற்கு மேலாகியும், இதுவரை பத்திரம் கிடைக்கவில்லை. முதுகுளத்தூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் கேட்டும் பலனில்லை, என்றார்.
முதுகுளத்தூர் பத்திரப்பதிவு அதிகாரி ஒருவர் கூறியதாவது: அலுவலக மாற்றத்தால், பழைய பதிவுகளையே முழுமையாக, முடிக்க முடியவில்லை. நில மதிப்பு அதிகரித்து, குறையும்போது, அதன் விலைக்கேற்ப, பதிவு செய்வதிலும் இழுபறியாக இருக்கிறது. பதிவு செய்தவர்களுக்கு, உரிய பத்திரங்கள் விரைவில் வழங்கப்படும், என்றார்.