மலேசியாவில் புகழ்பெற்ற புலவர் ப.மு.அன்வர் அவர்கள் இன்று காலை அல்லாஹ்வின் நாட்டப்படி அவனிடத்தில் மீண்டுவிட்டார்கள்.
இன்ஷாஅல்லாஹ், நாளை (19.03.2013, செவ்வாய்க்கிழமை) காலை 9 மணிக்கு ஜனாஸா தொழுகை திருப்பனந்தாளில் நடைபெறயிருக்கிறது. பெரும்புலவரின் மஃபிரத்திற்காக துஆ செய்யுங்கள்.
வல்ல அல்லாஹ் அவர்களுக்கு ஜன்னத்துல் ஃபிர்தௌஸை வழங்குவானாக!
புலவர் ப.மு அன்வர் மறைவு!
—————————— —————————-
மலேசியப் பெருங்கவிஞர்-
இஸ்லாமியத்தமிழ் இலக்கிய முன்னோடிக் கவிஞர்-
மரபுக் கவிதைத்துறையில்
ஆழமான அழுத்தமான பற்றுமிகு கவிஞர்-
கொண்ட கொள்கையில் எதற்கும்
எவருக்கும் மயங்கிடாக் கவிஞர்-
எளிமையிலும் செம்மை
வறுமையிலும் செழுமை
வற்றிடாத் திண்மைக் கவிஞர்-
கவியாற்றலில் தறுகண்மை
பழகுபண்பில் குழந்தமை
ஒளிர்விட்ட மகாக் கவிஞர்-
நல்லுலகில்தமிழ் உள்ளமட்டும்
இஸ்லாமியத் தமிழ் வாழுந்தோறும்
அவர்தம் புகழ் பட்டொளி வீசும்…
அன்னாரது மறைவின் துயரில்
பன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக்கழகமும்
தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கமும்
பங்கேற்று வேதனையுறுகிறது…
அன்னாரது மறுமைசுவன நல்வாழ்விற்காக
இருகரமேந்தி இறைஞ்சுகிறோம்..
அன்பு,
சேமுமு
சேமுமு
அறிவுலகில் புகழ் பெற்ற பெயருக்குச் சொந்தக்காரரான புலவர் ப.மு.அன்வர் அண்ணன் அவர்களின் எதிர்பாராத மறைவு,பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மரணம் இறைவனின் ஏற்பாடுதான்.
எனினும் “அறிஞரின் மரணம் அகிலத்தின் மரணம்” என்ற அண்ணல் நபி(ஸல்)அவர்களின் பொன்மொழிக்கு உரியது,இந்த உயர்ந்த மனிதரின் மறைவு.
ஓர் இறை நம்பிக்கையாளராக,ஓர் அழைப்பாளராக- சிறப்பாக அண்ணல் நபி(ஸல்)அவர்கள் மீது கழிபெருங்காதல் கொண்டவராக இருந்த காரணத்தால் அவரிடம் எல்லாவகையான அழகிய பண்புகளும் இடம் பெற்றிருந்தன.
தமிழ் முஸ்லிம்களே தமிழை நம் தாய்மொழிதான் என்றுணர்ந்து பெருமிதம் கொள்வது அருகி இருந்த அரை நூற்றாண்டு காலத்துக்கு முன்னரே அவர் தாம் ஒரு செந்தமிழ்ப் புலவன் என்ற செம்மாப்பை வெளிப்படுத்தியவர்.2011-ஆம் ஆண்டு மலேசியத் தலைநகரில் நடைபெற்ற இஸ்லாமியத் தமிழிலக்கிய மாநாட்டின் வெற்றிக்கு அவர் ஆற்றிய போற்றத் தகுந்த பங்களிப்பு அவ்ருடைய மொழிப்பற்றின் முத்தாய்ப்பான வெளிப்பாடாக அமைந்தது;இப்போது அது வரலாறாக ஆகிவிட்டது.
எழுதுகோல் அவருக்கு செங்கோல்;இன்பத் தமிழமுதே அவருடைய எழுதுகோலின் மையாகப் பொழிந்தது.முறையாகத் தமிழ் படித்த அந்தப் பெரும் புலவரின் செழுந்தமிழ்க் கவிதைகளும் பாடல்களும் வாசகர்களின் நாவிலும் மனதிலும் ஈமான் எனும் இறை நம்பிக்கையின் சுவையை எப்போதும் ஏற்படுத்த வல்லவை.
அல்லாஹ்வின் அருளால் கற்றார் காமுறும் அந்த மேதைமை மிக்க புலவருடன் எனக்கு வாய்த்த பல்லாண்டு காலப் பழக்கத்தின் பயனாக நான் கற்றுக்கொண்ட செய்திகளும் பெற்றுக்கொண்ட உணர்வுகளும் அவர் மீது கொண்ட பற்றை அதிகப் படுத்திய ஆச்சர்யங்கள்.
பெரிதாக எந்த இயக்கப் பிண்ணணியும் இல்லாத எளிமயான அந்தத் தனி மனிதர்,அழைப்புப் பணியின்மீது காட்டிய ஆர்வம் தணியாதது;தனியானது;தனிச் சிறப்பு வாய்ந்தது.ஒவ்வோர் இறை நம்பிக்கையாளரும் எடுத்துக்காட்டாய்க் கொள்ளத்தக்கது.அவருக்கு இறைவன் அளித்த ஆற்றல்களை எல்லாம் அந்தப் பணிக்கே பெரிதும் பயன்படுத்தினார்.
நான் ஓர் எளிய அழைப்பாளன்;அதில் ஆர்வம் உள்ளவன் என்பதை அறிந்தவர்களில் அன்வர் அண்ணனும் ஒருவர்.மலேசிய மாநாட்டுக்கு நான் புறப்படும் முன்னர்,”தம்பீ, மாநாடு முடிந்த பிறகு கூட்டங்களில் கலந்து கொள்வதற்கு ஏற்ப அவசரம் இல்லாத பயணத்திட்டத்துடன் வாருங்கள்”என்று தொலைபேசியில் பேசும்போது அறிவுறுத்தினார்.சில பல ஆண்டுகளுக்கு முன்னர் எனக்கு மலேசியப் பயணங்கள் வாய்த்த போது சற்றே விரிவான பயணங்களை மேற்கொள்ள முடிந்தது.அப்போதெல்லாம் நான் சென்றிராத தொலைதூர ஊர்களுக்கும் நகரங்களுக்கும் இந்தமுறை என்னை அழைத்துச் சென்று பேசவைத்து சகோதர பாசத்தோடு அவர் அழகு பார்த்த அழகே அழகு!”தம்பீ” என்று அவர் அழைக்கும் ஒவ்வொரு முறையும் அதிலே அன்பும் பாசமும் நிறைந்து இன்பம் ததும்பும்.
மறுமையில் அவருக்கிருந்த நம்பிக்கை மகத்தானது.வாழ்வில் நிகழக் கூடிய எந்த நிகழ்வையும் அவர் மறுமைக் கண்ணோட்டத்தோடு பார்ப்பார்;பேசுவார்.அது நம் பய பக்தியை மேம்படுத்தும்.
சில வாரங்களுக்கு முன்னர் மலேசியாவில் இருந்து வெளிவரும் “நம்பிக்கை” இதழை இணையத்தில் படித்துக்கொண்டிருந்தேன்.(அது நம் ஊர் ’சமரசம்’ போன்ற இதழ்.)அதில் அவர் எழுதிய கவிதை ஒன்று இடம் பெற்றிருந்தது.அதைப் படித்ததும் எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியில் திருப்பனந்தாளில் இருந்த அவருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு என் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினேன்.அதைப் படிக்கும் யாரும் மகிழவே செய்வர்.அந்தக் கவிதை இப்படித் தொடங்கும்:”இனிக்கும் அமுதம் எனக்கு முஹம்மதே!”
ஒரு புலவராக ”தமிழுக்கும் அமுதென்றுபேர்” என்று அவர் அறிவார்;ஓர் இறை நம்பிக்கையாளராக ”இனிக்கும் அமுதம் எனக்கு முஹம்மதே!” என்ற அவருடைய கூற்றில் எவர்க்கும் செய்தி இருக்கிறதல்லவா,அதுதான் அவருடைய ஆழம்!
இப்படி அவருடைய எழுத்துக்கள் பலவும் இனிப்பவையே!
அத்தகைய அரிய இனிய இறையடியாரை இன்று நாம் இழந்து வருந்தி நிற்கிறோம்…
அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தாருக்கும் நமக்கும் அருளாளனான அல்லாஹ் அழகிய பொறுமையைத் தந்தருளப் பிரார்த்திப்போம்.
புலவர் அன்வர் அண்ணன் அவர்களுக்கு அழகிய மறுமையை,அதிலும் மேலான படித்தரங்களைத் தந்தருளப் பிரார்த்திப்போம்.
இவர்போலும் ”ஆன்றவிந்தடங்கிய சான்றோர்” பலரை வல்ல அல்லாஹ் சமுதாயத்துக்குத் தந்தருள்வானாக………
—ஏம்பல் தஜம்முல் முகம்மது