கவியரங்கக் கவிதை
கடந்த 01-03-2013 வெள்ளிக்கிழமை மாலை கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் தலைமையில் புளியங்குடியில் நடைபெற்ற மீலாது விழாக் கவியரங்கில் பாடிய கவிதையின் ஒரு பகுதி
மன வயல் செழிக்க வந்த மா மழை
(பி. எம். கமால், கடையநல்லூர் )
அந்தக் காலம்
அந்தகக் காலம்
கந்தக நெருப்பில்
சந்தனம் வேக
பந்தபா சங்கள்
நொந்தழிந் தோட
மனவயல் பரப்போ
மழையின்றி வாட
தரிசாய் மனங்கள்
தகித்துக் கிடந்தன !
உள்ள வயல்கள்
மட்டுமல்ல உலகத்தில்
உள்ள வயல்களும்
உலர்ந்தே கிடந்தன !
உதய சூரியனை
ஒதுக்கி வைத்துவிட்டு மக்கள்
இருள்தே வதையின்
அருளை வேண்டி
இருகை இலையை
ஏந்தி நின்றனர்
அவர்களுக்கு
இலவசமாக
கள்ளும் வாளும்
கைகளில் கிடைத்தன !
அதனால் –
கொலைகற் பழிப்புகள்
கொள்ளைகள் சூது
அம்மா நிலத்தில்
அரங்கேறி நின்றன !
இன்றைய நாட்டுக்
காட்டு மிராண்டிகள்
அன்றைய அரபு
நாட்டிலு மிருந்தனர்!
அவர்களின்
பாவச் சூட்டால்
பரவிய மனவயல்
எங்கும்
பயிர்களல்ல
சிலைகளே களைகளாய்
முளைத்துக் கிடந்தன !
உழவும் களவும்
சாத்தா னிடத்தில் !
மதுவே அங்கு
மனவயல் பாசனம் !
அந்த வயல்களில்
விவசாயம் அல்ல
விபச்சாரம் தான்
விளைபொரு ளானது !
இதய வானமோ
இருண்டு கிடந்தது !
கார்மே கத்தின்
காரணத் தாலல்ல
கதிரவன் சிறையில்
அடைபட் டிருந்ததால் !
திரிகளைத் தின்னும்
சுடர்களை போல
பாவச் சுடர்கள்
மனவயல் மேய்ந்தன !
காற்றுக்கு வியர்த்தது
கண்ணீரில் உப்புக்
கரைந்து போயிருந்தது
வரம் வேண்டித் தாவரங்கள்
கிளைக்கர மேந்தி
ஒற்றை வேர்களில்
உபவாசம் இருந்தன !
பாலைவனம் சூரியனின்
படுக்கையறை ஆனது 1
வாழ்க்கையின் உரமான பெண்கள்
பூமிக்குள் உரமாகப்
புதைக்கப் பட்டனர் !
அது ஒரு இறந்த காலம்
அன்று
ஏழை சிரிக்கவில்லை
அதனால்
இறைவனைக்காண
எவராலும் முடியவில்லை
பாலைவனமும்
பாழும் மனமும்
நாளும் வறண்டு
நாறிக் கிடந்தன
கார்மே கத்தின்
கால்களி லெல்லாம்
கண்ணீர்த் துளிகள்
ஒட்டிக் கிடந்தன !
ஆறும் குளமும்
ஆழியும் பாலையும்
முன்நீரால் அல்ல
பெண்களின்
கண்ணீராலும் செந்நீராலும்
நிரம்பி வழிந்தன !
கற்சிலை களுக்கு
கs;அபி ஷேகம்
மனவயல் வெளிகளில்
கொலை வெறிப் பூக்கள் !
மண்ணின் பயிர் செழிக்க
மழைநீரே உயிர்நீர் !
கண்ணீரோ ஆன்மாவைக்
கழுவிச் சலவை செய்யும்
பகலை வெளுப்பதற்குச்
சூரியச் சவுக்காரம்
இரவைச் சலவை செய்ய
இரவிதான் ஆதாரம் !
இரண்டும் இருண்டு
இருந்ததால் அங்கே
உள்ளமும் இருட்டில்
ஊறிக் கிடந்தது !
உயிர்நீரு மில்லாமல்
உள்ளத்துப் பயிர்வளர்க்க
உதவும் அருள் மழையும்
இல்லாமல் வாடிய
இதயத்து நிலப் பரப்பில்
அல்லாஹ் அருளினான்
ஆன்மாவில் தன; மழையை !
ஜிப்ரயீலின் சிறகுக்குள்ளிருந்து
மின்னல் சிலிர்த்தது !
மனவயல் வெளியில்
மடமட வென்று
இடியின் குரலொன்று
இப்படிக் கேட்டது :
அல்லாஹ் ஒருவன்
அவன்தூதர் நான் என்று
நல்லார் நபிகள்
நாயகத்தின் திருநாவில்
கலிமாவின் இடிமுழக்கம்
கருணையுடன் கேட்டது!
அந்தக்
குரல்மழை இறைவனின்
அருள் மழையானது
மனவயல் பாசன
மதுநதி எல்லாம்
அமுதம் நிறைந்த
அருள் நதியானது !
மனவயல் எங்கும்
மகசூல் பெருகியது !
ஒருநொடிப் பொழுதில்
உலகம் சிலிர்த்தது !
சத்தியம் பொய்யைப்
பார்த்துச் சிரித்தது !
ஆதம் நபிமுதல்
ஈசா வரையில்
மனவயல் வெளிகளில்
மழை பொழிந்தது ; ஆனால்
மனவயல் இன்னும்
வெளுக்கப் படாமல்
அழுக்காய் இருந்தது !
பேரிறை இறைவனின்
பேரொளித் துளியின்
ஒருதுளி மழையால்
உள்ளம் மட்டும் அல்ல; இந்த
உலகும் வெளுத்தது !
இபுலீசு கைகளில்
இருந்த நிலத்தை எல்லாம்
ஆன்மீகப் பயிர் வளர்க்க
அபகரித்துக் கொண்டதினால்
சிறைக்குப் போனார்கள்
சீலம் மிகு சஹாபாக்கள் !
அல்லாஹ்வின்
அருளின் சிறைக்கு
அனைவரும் போனார்கள் !
பொய் வழக்கு அவர்மீது
போட வழி ஏதுமில்லை
பொது எதிரியாக
பொல்லாத இபுலீசு
இருந்ததினால் !
அல்லாஹ்வின் அருள்மழை
வெள்ளப் பிரளயத்தில்
கஃபாச் சுவர்க் கடலில்
கால்பதித்து நின்றிருந்த
சிலைச்சீழ்க் கட்டிகள்
செத்து மிதந்தன !
வெந்த மனவயலில்
வந்த நபிமழைதான்
கந்தக மனவெளியை
சந்தனவய லாக்கியது !
அந்த மழை இந்த
அகிலத்தில்வர வில்லையென்றால்
நாமெல்லாம்
பாவப் பிரளயத்தில்
பலியாகிச் செத்திருப்போம் !
அந்த மழையில்
கலிமாவின் கஸ்தூரி
கமழ்ந்து கொண்டிருந்ததால்
மன வயல்களெல்லாம்
மண வயல்க ளாயின !
மண்ணில் இறங்கிய
மழைமேகம் இன்னும்
மதீனத்து மண்ணறையில்
மௌனித்து இருக்கிறது !
அந்த
மண்ணறை thdj;J
மழைமே கம்தான்
உலகத்தில் மழையை
உற்பத்தி செய்கிறது !
அந்த மழைத் துளியில்
ஆண்டவா ! நாங்கள்
வெந்த மனம் ஈடேற
விரைந்து நீ அருள் புரிவாய் !
மழைமேக மாகவந்த
மன்னர் இரசூல் நபியே !
யா ரசூலல்லாஹ் !
உங்கள்
பொன்மேனி கருகிடாமல்
பூமேனி வியர்த்திடாமல்
பூமிக்கு மேல் மேகம்
குடை பிடித்த வரலாறைக்
குறித்துவைத் திருக்கின்றோம்
இப்போது நீங்கள்
எங்கள் முன் வந்து நின்றால்
எங்கள் இதயங்களை அல்லவா
குடையாக்கி இருப்போம் ?