இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தின் ’இணையம்’ இன்றல்ல !

இலக்கியம் இஸ்லாமியக் கட்டுரைகள் கட்டுரைகள்

 

-இலங்கைத் தமிழ்மணி மானாமக்கீன்

 

2011 மே மாதம் 20-21-22 தேதிகளில் மலேசியத் தமிழ் இலக்கிய வரலாற்றில் முதன் முறையாக ‘உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய’ மாநாடு மலாயாப் பல்கலைக்கழக மாபெரும் அரங்கில் நடைபெற உள்ளது.

இதற்கு இலங்கையிலிருந்தே அதிகமதிகமான பேராளர்கள் வருகை தந்தனர். அடுத்து சிங்கப்பூர். தமிழகத்திற்கு மூன்றாம் இடமே !

இப்பக்கங்களில் ‘மயில்’ வாசகர்களுக்காக ஒன்பது நூற்றாண்டுகளுக்கு முன்பே இயங்க ஆரம்பித்துவிட்ட ‘இஸ்லாமியத் தமிழ் இலக்கிய இணைய’த்தை வெளிச்சமிடுகிறார் கலாபூஷணம் இலங்கைத் தமிழ்மணி மானாமக்கீன், இலங்கையின் மூத்த எழுத்தாளரும் பல தேசிய விருதுகள் பெற்றவருமாவார். இந்திய – இலங்கை (இலக்கிய) இணைப்புப் பாலமும் கூட !

1978-களில், திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி பேராசியர் நயினார் முகம்மதுவைப் பதிப்பாசிரியராகக் கொண்டு இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கழகம் வெளியிட்ட ‘இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கட்டுரைக் கோவை’ தொகுப்பில் 154- 155 பக்கங்களில் ஒரு ‘பிறை’ அன்பன் இப்படி எடுத்துக் காட்டுகிறார்:

“எண்ணிறந்த இஸ்லாமியப் புலவர்கள், நூல்கள் பலவற்றைத் தமிழிலே படைத்திருக்கின்றனர். ஆனால் இவ்விலக்கியங்களைப் பற்றிப் பலருக்குத் தெரியாது. சீறாபுராணம் போன்ற சில நூல்கள் தமிழ் உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றனவேயொழிய தமிழ்த் தொண்டிலே ஊறித்திளைத்த நூற்றுக்கணக்கான முஸ்லிம் புலவர்களின் படைப்புகள் அறிமுகப்படுத்தப்படவில்லை.

அவர்கள் “சைவரும் வைணவரும் பாடிய பிரபந்தங்களைப்  பாடுவதோடு நின்றுவிடவில்லை. புதிய பிரபந்த வகைகளைத் தமிழ் புகுத்தித் தமிழன்னையைப் பொலிவுடன் வாழச் செய்திருக்கின்றனர்.’’

இவ்வாறு குறித்துள்ள பெருமகன் ஒரு முஸ்லிம் அல்லர்.

இலங்கை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்த போதும், இல்லாத சமயத்திலும் சிறப்பான தமிழ்த் தொண்டாற்றி மறைந்த முனைவர் (கலாநிதி) சு. வித்தியானந்தன் அவர்களே அப்பெரியார்.

இஸ்லாம் தமிழகத்திற்கு வந்த காலம் 7-8-ஆம் நூற்றாண்டுகள் அதிலிருந்து 400 ஆண்டுகளுக்குப்பின் 12- ஆம் நூற்றாண்டில் முதல் இஸ்லாமியத் தமிழ் இலக்கியமாக ‘பல் சந்த மாலை’ யில் மணம் பரப்பத் தொடங்கி 21- ஆம் நூற்றாண்டில் முற்பகுதியான இன்று வரை இனிய வளமும் வாசமும். நிறைந்த ஏறக்குறைய நாலாயிரத்திற்கும் மேற்பட்ட இலக்கியங்களைப் படைத்துத் தமிழ்த் தொண்டினைத் தொய்வின்றிச் செய்து வருவோர் முஸ்லிம் பெருமக்கள்.

மேற்படி 12-க்கும் 21-க்கும் இடைப்பட்ட 400 ஆண்டுகளில் தமிழகத்தை ஆக்கிரமித்திருந்த நவாபுகளும், நாயக்க, மராத்திய மன்னர்களும் சிறப்பான தமிழிலக்கியங்களைக் கொணருவதில் அக்கறை செலுத்தாதலால் அது ‘இருண்ட காலம்’ என வர்ணிக்கப்பட்டது. அக்காலக் கட்டத்திலே திசைமாறிப் போய்க்கொண்டிருந்த தமிழிலக்கியப் போக்கினைக் கட்டுப்படுத்திப் பேரிலக்கியங்களையும், சிற்றிலக்கியங்களையும், புதிய இலக்கிய வகைகளையும் ஏராளமாக எழுதித் தமிழின் உயர்ச்சிக்கு வித்திட்டார்கள் இஸ்லாமியத் தமிழ்ப் புலவர்கள்.

‘’தமிழுக்கேயுரிய இலக்கண இலக்கியப் பண்புகளைப் போற்றி அவற்றை நிலைபெறச் செய்ய வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு அறிவியல் கால வளர்ச்சிக்கேற்பப் புதிய இலக்கியங்கள் பலவற்றையும் இஸ்லாமியத் தமிழ்ப் புலவர்கள் எழுதியுள்ளனர்,’’ எனக் கலைமாமணி மணவை முஸ்தபா அவர்கள் கூறுவது இங்கு எண்ணத்தக்கது.

இந்த இடத்தில் இன, மத, பேதம் கடந்த ஒரு சிறப்பு நிலையை நாம் காண்கிறோம். மொழிப்பற்றின் முன் மதப்பாகுபாடுகளைக் கடந்து நின்ற பான்மைக்கு உதாரண புருசர்களாக உமருப் புலவரிலிருந்து சவ்வாதுப் புலவர், பிச்சை இபுறாஹிம் புலவர், மஸ்தான் சாகிபு, சதாவதானி சேகுதம்பிப் பாவலர் வரை பலரை அடையாளம் காணலாம். ஓரிரண்டு எடுத்துக்காட்டுகள் இங்கே:

எட்டயபுர சமஸ்தானத்தின் அதிபதி ஓர் இந்துப் பெருமகன். அவரது ஆஸ்தானக் கவிஞரான கடிகை முத்துப்புலவர் ஓர் இந்து. அவரிடம் கற்ற பல சைவ சிஷ்யர்கள் மத்தியில் ஒரேயொரு முஸ்லிம் உமருப்புலவர் ! பிற்காலத்தில் அந்த ஒரே முஸ்லிமுக்கே ஆஸ்தானக் கவிஞர் பதவி !

அவர்கள் அவரை மதக்கண் கொண்டு பார்க்கவில்லை. மொழிக்கண் கொண்டும், தமிழ்க் கண் கொண்டும் பார்த்தார்கள்.

உமருப் புலவரைப் போன்ற மற்றொருவர் 16- ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சவ்வாதுப் புலவர். இவர் காலத்தில் தமிழகத்தின் தென்கோடி இராமேஸ்வரம் – இராமநாதபுரத்தை ஆண்டான் ரகுநாத சேதுபதி. சுத்த சைவம். பூஜைகள் தவறாதவர். சவ்வாதுப் புலவரோ ஐவேளை தொழுகை விடாதவர். அவரையே ஆஸ்தானப் புலவராக்கினான் மன்னன். பல சைவப்புலவர்கள் வெகுண்டெழுந்தனர். இருந்தாலும் தமிழ்ப் புலமை என்ற இணைப்புக் கயிறு இருவரையும் இறுகப் பிணைத்தது. மதமென்று இரும்புத்திரை நீக்கப்பட்டது.

இதுபோல் இன்னொருவர் ‘இலக்கணக் கோடரி’ என்ற பிச்சை இபுராஹிம் புலவர். மதுரைத் தமிழ்ச் சங்கப் பேராசானாகத் துலங்கினார். 19- ஆம் நூற்றாண்டின் இறுதியில் நிகழ்ந்த நிகழ்வு இது !

இவர் தமிழ்க் கற்றுத் தந்த மாணவருள் பெரும்பாலானோர் இந்து மக்களே. பிற்காலத்தில் பிரபலமான சந்தக்கவி சாமிநாதபிள்ளை, மதுரை முத்துப்பண்டிதர், நாவலர் வெங்கடசாமி நாட்டார், வித்துவான் அமிர்த சுந்தர நாதபிள்ளை, விஜயரங்கப்பிள்ளை ஆகியோர் அவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள் சமயப் போராட்டத்தினைக் கடந்து சென்று சமரச சன்மார்க்கம் காண விழைந்த தாயுமான சுவாமிகளை குணங்குடி மஸ்தான் சாகிபு என்ற சித்தர் – ஞானியார் தன் முன்னோடியாகக் கொண்டிருந்தார்.

இந்தச் சாகிபுவுக்குச் சரவணப்பெருமாள் அய்யர் அருமருந்தன்ன சிஷ்யர் !

இவ்வய்யர், குணங்குடியாரின் தீஞ்சுவைத் தமிழ்ப்பாக்களைக் காத்துக் காப்பாற்றி வையமெல்லாம் பரவச் செய்ய வேண்டி ஸ்ரீ விநாயகரின் திருவடிகளில் ‘தாள் காப்பு’ப் பொழிந்து இறைஞ்சவும் செய்துள்ளார்.

குமரி மாவட்டம், கோட்டார் சதாவதனி சேகுதம்பிப் பாவலர் மற்றுமொருவர். அன்னாரின் தமிழறிவைத் தமிழறிஞர்களும் போற்றினர். ‘தமிழ்த் தென்றல்’ திருமிகு கல்யாண சுந்தரனார் அவர் தலை மாணாக்கர்.

சிங்கப்பூரின் முதல் தமிழ் இதழாக ‘சிங்கை வர்த்தமானி’ 1875-ல் வெளியானது. இதற்காக ஓர் அச்சுக்கூடம் நிறுவி ஆசிரியராக அமர்ந்து  தமிழுலகுக்கு வழங்கியவர் ஒரு சி.கு.மகுதூம் சாயபு. பின்னர் ‘ஞான சூரியன்’ என்றும் இதழ்கள் வெளியிட்டார் ! அவரது ஆசானாக யாழ்ப்பாணவாசி சதாசிவப்பண்டிதர் திகழ்ந்தார்.

1887 களில் நூல் வெளியீட்டாளராகவும் ஆகி முதல் நாளாக வெளியிட்டது சதாசிவப்பண்டிதரின் ‘சிங்கை நகர் அந்தாதி’ என்பதே !

சிங்கை முனைவர் சுப. திண்ணப்பன் இது பற்றிக் குறிப்பிடும்போது ‘’மகுதூம் சாயபுவின் முயற்சி மொழிப் பற்றினையும் சமய நல்லிணக்க உணர்வினையும் வெளிப்படுத்துவதாக உள்ளது,’’ என்கிறார்.

இவ்வெழுத்துக்களின் முத்தாய்ப்பாக சிங்கப்பூரில் தமிழ்ப் பேராசிரியையாகத் திகழ்ந்த பிரபல எழுத்தாளர் ‘அம்பை’ எம்.எஸ்.ஸ்ரீலட்சுமி 1999 களில் ஓர் ஆய்வில் குறிப்பிட்டிருப்பதைச் சமர்ப்பிப்பது மலேசிய மாநாடு – 2011 க்கு மட்டும் சூட்டுவது போல் அமையும்.

‘’மலேசிய – சிங்கப்பூர் வாழும் தமிழ் முஸ்லிம்கள் தமிழார்வமும் தமிழ்ப்பற்றும் கொண்டு விளங்குகின்றனர். இந்நாடுகளில் வாழும் பிற தமிழர்களோடு (முஸ்லிம் அல்லாதோர்) ஒப்பு நோக்குகையில் தமிழ் முஸ்லிம்களின் வீடுகளில் தமிழ்ப் புழக்கம் அதிகமாக உள்ளது. மற்ற தமிழர்களின் வீடுகளில் ஆங்கிலமே ஆட்சி செய்து வருகிறது. மொழிப் புழக்கம் தமிழ் முஸ்லிம்களிடம் அதிகமாக உள்ள காரணத்தால் தமிழ் கல்வியில் தமிழ் முஸ்லிம்களின் தரம் உயர்ந்தும் காணப்படுகிறது.’’

-ஆய்வரங்கக் கோவை, சென்னை – 1999

 

நன்றி : மயில் – மலேசிய இதழ்

14 ஜுன் 2011

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *