(முதுவைக் கவிஞர் ஹாஜி, உமர் ஜஹ்பர்)
அல்லாஹு என்னுமுயர் நல்லவனே – உயர்
அன்பினிலும் ஆற்றலிலும் வல்லவனே !
நில்லாது போற்றுகிறேன்; புகழுகிறேன் – உன்
நபிமணியின் நல்வரவைப் பாடுகிறேன் !
சொல்லாத புகழுரைகள் அவர்க்கு இல்லை – நான்
சொல்லிவரும் வார்த்தையிலும் புதுமையில்லை !
இல்லையில்லை அவர்புகழுக் கெல்லையில்லை – அவர்
இறையருளே ! பேரருளே ! மாற்றமில்லை !
அருங்குணமே ! அண்ணலரே ! அன்பின் வடிவே – உங்கள்
அழகுகுணம் எங்களுக்கு அருளாய் வேண்டும் !
பெருங்கொடையே ! பொக்கிஷமே ! பண்பின் உருவே – உங்கள்
பண்பு குணம் எங்களுக்குக் கொடையாய் வேண்டும் !
பெருமதியே ! பேரழகே ! பாசச்சுடரே ! – உங்கள்
பாசகுணம் எங்களுக்கு வரமாய் வேண்டும் !
அருட்கொடையே ! அறிவுலகே ! அருமை நபியே – உங்கள்
அறிவுகுணம் எங்களுக்கு வாழ்வாய் வேண்டும் !
விழித்திருந்தால் நினைவினிலே நீங்கள் வேண்டும் ! – இரு
விழிமூடித் தூங்கும் போதும் கனவில் வேண்டும் !
வழியறியா நேரமுங்கள் ஒளியே வேண்டும் ! – வாழ்வின்
வழுக்கலிலே வலக்கரமாய் நீங்கள் வேண்டும் !
வழித்துணையாய் வாழ்வெல்லாம் நீங்கள் வேண்டும் ! – என்
வாழ்வினிலும் தாழ்வினிலும் துணையாய் வேண்டும் !
பழிபகைகள் சூழும் போது காவல் வேண்டும் ! – உயிர்
பெருமூச்சு அடங்கையிலே உம்மடியே வேண்டும் !