ஓரிரவில் நான்கு கோடிப் பாடல்கள் !

நூல்கள்

mudukulahur-avvaiyarஓருரில் ஒரு போலி வள்ளல் இருந்தான் அவன் பெயருக்குத்தான் வள்ளல். எவருக்கும் அரைக்காசுகூடக் கொடுத்தறிய மாட்டான். தான் வாரி வழங்கியதாகப் பலரிடமும் சொல்லிப் பெருமை பேசிக்கொள்வது அவன் வழக்கமாக இருந்தது.

வள்ளலுக்குத் தமிழ்ப்புலமையும் அரைகுறையாக இருந்தது. எவராவது புலவர்கள் வந்து அவனை நாடிப் பரிசில் பெற விரும்பிச் செல்வார்கள். அதற்கு இயலாதபடி எதையாவது சொல்லி அவர்களை மடக்கித் திருப்பி அனுப்பி விடுவான். அவர்களும் தம் போதாத காலத்தை நொந்தபடி போய் விடுவார்கள்.

ஒரு சமயம், அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது. எளிதில் ,முடியாத ஒரு திட்டத்தை வகுத்து, அதை நிறைவேற்றுபவர்க்கு ஆயிரம்பொன் தருவதாக அறிவிக்கலாமென நினைத்தான்.

அதன்படி, நான்கு கோடிp பாடல்கள் இயற்றினால் அவர்க்கு ஆயிரம்பொன் தருவதாக அறிவித்தான். நாலு கோடிப்பாடல்களை எவரால் பாடுதற்கு இயலும் ! பாடுதற்கு முடிந்தாலும் வாழ்நாள் அதற்குப் போதாதே ! அவனும் தெரிந்துதான் இதனை அறிவித்தான்.

ஓளவையார் அந்த ஊருக்கு வந்தார். தாம் நாலு கோடிப் பாடல்களைப்  பாடுவதாகத் தெரிவித்தார்..பெருங்கூட்டம் அதனைக் கேட்க வந்துவிட்டது.

போலி வள்ளல் திகைத்தான். ஓளவையார் பாடிவிடக் கூடுமென்று பயந்தான். ஆனால், “எவ்வளவு காலம் ஆகும்? அதுவரை  அவர் எப்படிப் பாடுவார்? அதையும்தான் பார்ப்போமே” என்று கருதி இசைந்தான்.

புலவர்கள் பலர் கூடினர். ஒளவையாரும் கலங்காமல் அவைமுன் எழுந்தார். வியப்புடன் அவரை அனைவரும் நோக்கினர். அவர் பாடினார்.

”இது நாலு கோடிப் பாடல்கள்  அல்ல” என்றான் அவன் நாலு கோடிப்பாடல்கள்தான் என்று அந்த அவை கூறிற்று..அவன் மிக வருத்தத்துடன் ஆடிரம் பொன்னையும் கொடுத்தான். அதுமுதல், பிறரைத்தன் சூழ்ச்சியால் ஏமாற்றலாம் என்ற எண்ணமே அவனிடமிருந்து போய்விட்டது.

மதியாதார் முற்றம் மதித்தொருகால் சென்று
மிதியாமை கோடி பெறும்.

உண்ணீர் உண்ணீரென்று உபசரியார் தம்மனையில்
உண்ணாமை கோடி பெறும்..

கோடி கொடுத்தும் குடிப்பிறந்தார் தம்மோடு
கூடுவது கோடி பெறும்.

கோடானுக் கோடிகொடுப்பினும் தன்னுடையநாக்
கோடாமை கோடி பெறும்.

” தம்மை மதியாதவர்களின் வீட்டு வாயிலில் அவரையும் ஒரு பொருட்டாகக் கருதிச் சென்று மிதியாதிருத்தல் கோடிபெறும்.
..
“உண்ணீர் உண்ணீர்” என்று உபசரியாதவர்கள் வீட்டில் உண்ணாதிருத்தல் கோடி பெறும். ( “என்றூட்டாதார்” என்பதும் பாடம்.)

கோடிப் பொன் கொடுத்தாயினும் நல்ல குடிப்பிறப்பு உடையவர்களோடு. கூடியிருப்பது கோடி பெறும்.

எத்தனை கோடி தந்தாலும் தன்னுடைய நாவாவது கோணாதிருக்கும்
( உண்மையே பேசும் தன்மை ) கோடி பெறும்.

அரசன் தன் அவைப் புலவர்களை எல்லாம் அழைத்து,  அனைவரும் சேர்ந்து ஓரிரவிற்குள் நான்கு கோடிப் பாடல்களைப் பாடிவரவேண்டும் என்றும், அவ்வாறு செய்யாது   போயின்,  மறுநாள் காலையில் அவர்கள் தலையைக் கொய்து விடுவதாகவும் ஆணையிட்டதாகவும், மேற்படி நான்கு பாடல்களை, ஒளவையார் பாடி, மேற்படிப் புலவர்களைக் காப்பாற்றியதாகவும்,  அந்தக்காலத்தில் பள்ளியில் படிக்கும்பொழுது ஒரு தமிழ்ப்பாடம் இருந்தது 60 வயது எய்திய நிலையில் இருப்போருக்கு நினவிற்கு வரும்.

மேற்படி நான்கு பாடல்களை  ஒரு ஒளவையார் பாடிச்சென்றிருப்பது உண்மை. அவரது தனிப்பாடல்களில் இவை இடம் பெற்றிருக்கும். ஒவ்வொரு பாடலின் மையக் கருவும் ஒரு கோடிக்குச் சமம் என்று அவர் கூறியிருப்பதும் உண்மை.

மற்றப்படி, பொருளுரைப்போர் தத்தம் கற்பனை வளத்திற்கேற்ப கதை புனைந்து விளக்கியிருப்பர். இப்பகுதியில் விளக்கியிருப்பது, புலியூர்க் கேசிகன்.

இதுபோன்ற ஒளவையார், காளமேகப் புலவர் தனிப் பாடல்களையும், பல்வேறு தமிழறிஞர்களின் படைப்புக்களையும்,

 http://www.openreadingroom.com/wp-content/uploads/2013/03/Avvaiyar-Thanippadalgal.pdf

என்னும் இணைய தளத்திற்குச் சென்று படித்து ரசிக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *