கலிமா
தொழுகை
ஸக்காத்
நோன்பு
ஹஜ் –
இஸ்லாத்தின் கடமைகள் ஐந்து
ஆறாவது – நபிகள் பேரில் ஸலவாத் !
மெய்
வாய்
கண்
மூக்கு
செவி
உணர்வுகள் ஐந்து
ஆறாவது – நபிகள் நாயக அறிவு !
சுபுஹு
லுஹர்
அஸ்ர்
மஃக்ரிப்
இஷா –
தொழுகைகள் ஐந்து
ஆறாவது – தஹஜ்ஜுத் !
முல்லை
குறிஞ்சி
மருதம்
நெய்தல்
பாலை –
திணைகள் ஐந்து
ஆறாவது – நபிகளின் ரவ்லா !
நீர்
நிலம்
காற்று
நெருப்பு
ஆகாயம் –
பஞ்ச பூதங்கள் ஐந்து
ஆறாவது – மிஹ்ராஜ் !
எத்தனை அளவிட்டு
ஒன்றைச் சொன்னாலும்
அத்தனையும் தாண்டி
புனிதமாய் ஒன்று முளைக்கும்-
புரிந்து கொண்டால்
பெருமானாரின் மகத்துவம்
மனதுக்குள் விளங்கும் !
அது –
அவதாரப் புருடரின்
ஆன்மீகம் அல்ல
மானுடப் புனிதத்தின் மான்மியம் !
ஆதம் நபி முதல்
ஈசா நபிவரை
அஹமது நபிகள்
சாட்சி சொல்லும் சத்தியம் !
புகழக் கூடாது என்று
சிலர் சொல்பவரைப்
புகழுக்குரியவனே
‘புகழப் பட்டவர்’ – என்று
பெயர் சூட்டிய வரலாறு !
ஓரறிவு மரம் முதல்
ஐயறிவு ஒட்டகம் வரை
அவர்களை அறிந்திருந்தது !
கல்லுக்கும்
அறிவிருந்த காரணத்தால்
அதுவும் அவர்கள்
கைகளில் தஸ்பீஹு செய்தது !
நாயகத் தோழர்களுக்கு
நபிகள் நாயகத்தின்
நகத்துண்டுகளும்
வியர்வைத் துளிகளும்
அவர்களை நரகிலிருந்து
காக்கும் கேடயமானது !
இவ்வுலகில் மட்டுமல்ல
இறப்பில்லா மறுமையிலும்
சிறப்பாகி நிற்பது –
இறப்பில்லா எங்கள் நபிகளின்
புகழ்ப் பெயரும்
புகழ்க் கொடியும்தான் !
அவர்களது
பிறப்பும் இறப்பும்
நமது சுவனங்களை
உயிர்ப்பிக்கச் செய்யும் ஜனனம் !
எங்கள் சுவனங்களைத்தாம்
இந்த மீலாதுகளில் அலங்கரிக்கிறோம்
அதன்வழி
எங்கள் இம்மையும் புனிதமாகிறது
அல்லவா ?
நன்றி : இனிய திசைகள் – பிப்ரவரி 2013