ஜமால் முஹம்மது கல்லூரி ……
நாங்கள் திரும்பிப் பார்க்கிறோம்
( ஜாபர் அலி, துணைத் தலைவர், துபாய் இஸ்லாமிய வங்கி, துபாய் )
வாழ்க்கைப் பாதையில் வெகுதொலைவு கடந்தபின்
சற்றே .. நாங்கள் திரும்பிப் பார்க்கின்றோம்
நாங்கள் கடந்து வந்த பாதையை…
-எம்மையும் சகல உலகையும் படைத்த எம் இறைவன்
-எம்மை வளர்த்து உருவாக்கிய எம் பெற்றோர்
-உடன் பிறந்தோர்.. உற்றோர்.. சுற்றம்.. நட்பு..
-எமது உயரிய மார்க்கம் .. எம் சமூகம்..
-அகர முதல எழுத்தை எமக்கு அறிவித்த எம் ஆசிரியர்
-அடித்தளம் இட்ட எம் பள்ளி..
-தூண்களும், சுவர்களும் எழுப்பி எமக்கு
உலக அரங்கில் உயர் இடம் பெற உரிய உருவம்
தந்த எம் மாபெரும் கல்லூரி..
இத்தனையும் நினைவலைகளாய் எம் மனதில் பொங்கி வரும் பொழுதில்.. உணர்ச்சிப் பிரவாகம்.. விழி விளிம்பில் நீர்த்துளிகள்..
தாய்ப்பால் புகட்டியதால் எம் தாய்மீது தனியொரு பாசம்.
கல்விப்பால் புகட்டியதால் எம் கல்லூரிமீதும் ஒருவித மோகம்.
எம்முள்ளே.. எம் தாய் மட்டும் தனித்து உயர்ந்து நிற்பது போலவே.. எம்மினிய கல்லூரிக்கும் ஓர் தனியிடம்.. உயரிடம்.
உயர்ந்து, பறந்து, விரிந்து, நிழல் குடை விரித்து, அழகாய், அமைதியாய், அன்பின் உருவாய்.. ஆலமரமாய் நீ உன் அழகுக் கிளைகளோடும், இலைகளோடும், பூக்களோடும் பொலிவாய் நின்ற போது புதிதாய் சிறகு முளைத்த சிறு பறவைகள் நாங்கள். உன் கிளைகளில்தானே புகழ் அடைந்தோம்.. அங்கே கல்வியும் கவிதையும் கலந்து பயின்றோம்.. உன் விழுதுகளில் விளையாடி உன் விடுதியில் உண்டோம், உறங்கினோம்.. உலகத்தின் உயர் உறவுகள் கற்றோம்.. இறையுணர்வும், இலக்கியமும் இயற்கையாய் பயின்றோம்…
இன்று
நாங்கள் ஆயிரம் ஆயிரமாய் அள்ளிக்குவித்தாலும்.. உயர உயர பறந்தாலும்.. உன் மடியில் வளர்ந்த ஊர்க்குருவிகள் தான் என்பதை சற்று மறந்தோம்..
எம் வாழ்க்கை.. எம் குடும்பம்.. எம் தொழில்.. எம் குழந்தை.. என்று சிறியதோர் வட்டமிட்டு சிறைபட்டோம்.
நீண்ட துயில் கொண்ட எம் மனசாட்சி எப்போதாவது விழித்துக் கொண்டால் எம்மை தட்டிக் கேட்பதுண்டு ’உன் தாய்க்கல்லூரிக்கு என்ன செய்தாய்’ என்று..
நாங்கள் உன்னை மறந்துவிடவில்லை தாயே.. நாங்கள் மயக்கத்தில் இருக்கிறோம். எம்மை மன்னித்துவிடு..
புறப்பட்டு வரும் புதிய தலைமுறைக்கு, இளைய தலைமுறைக்கு மூத்த தலைமுறையின் முதற்கடன் அறியாதவர்கள் அல்ல நாங்கள்.. சற்றே கண்ணயர்ந்து விட்டோம்..
இன்றைக்கும்..
எம்மைப்போலவே ஆயிரமாயிரம் புதிய பறவைகள் உன்னிடத்தில் கல்வி இரை தேடி வட்டமிடுகின்றன.. உனைத் தேடி வந்தோர்க்கு வழிகாட்டும் வள்ளல் பாரம்பரியமே.. வற்றாத நிறை ஊற்றே..
“இப்போதாவது ஏதாவது செய்ய வேண்டும்” – என்று எங்களுள் ஏற்பட்ட விழிப்பு கூட ஒரு அழகான விடியலைப் போல இதோ உன் முன்னே..
உலகெங்கும் துயிலும் உன் மூத்த குழந்தைகள் எல்லாம் கண் விழித்து விட்டால் வருகின்ற தலைமுறைக்கும், வளரும் தலைமுறைக்கு இரவேது.. இருளேது..
இந்த விடியலை வரவேற்போம்..
என்றென்றும் விழித்திருப்போம்.
எம் கல்லூரிப் பூங்காவில் புதிதாய் மிளிரும் மலர்களுக்கும் வாழ்த்து சொல்வோம்..
எம் தாய்க்கல்லூரியே.. உன் புகழ்பாடும் புறாக்கள் இன்று உலகெங்கும்.. வாழ்க வளர்க என வாழ்த்துகிறோம்.