பிரிட்டனைப் பயமுறுத்தும் பாலியல் பலாத்காரங்கள் – – கான் பாகவி

இலக்கியம் இஸ்லாமியக் கட்டுரைகள்
Great-Britain London
பி
ரிட்டன் நாகரிகத்தின் (?) சிகரத்தில் உள்ள ஐரோப்பிய நாடுகளில் ஒன்று. தலைநகர் லண்டன் உலக நாகரிகங்களின் தொட்டில் என்று பெருமை பேசுவர். அறிவியலிலும் பொருளாதாரத்திலும் முன்னேறிய நாடு என்பர். படிப்பிற்கும் வேலை வாய்ப்பிற்கும் சிறந்த இடம் என்றும் அதேநேரத்தில், சுதந்திரம், பெண் விடுதலை, ஜனநாயகம், கருத்துரிமை போன்ற நவீனங்களின் வளர்ப்பு தேசம் என்றும் மெச்சுவர். சூரியன் அஸ்தமிக்காத நிலப்பரப்பு என்றும் போற்றுவர்.
 
அந்த நாட்டில்தான் இப்போது பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் பலாத்காரக் கொடுமைகள் எல்லை தாண்டி, நாட்டையே அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது. ‘மர்மக் கொள்ளை நோய்’ என்று நிபுணர்களும் சமூக ஆர்வலர்களும் வர்ணிக்கின்ற அளவுக்கு, கற்பழிப்பு சம்பவங்களும் பாலின அத்துமீறல்களும் கொடிகட்டிப் பறக்கின்றன. நாடே கலாசார முடைநாற்றத்தால் மூச்சடைத்துப் போயிருக்கிறது.
 
2013 ஜனவரியில் வெளியான அரசாங்கத்தின் அறிக்கை இந்தக் ‘கொள்ளை நோயை’வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளது. பிரிட்டனில் 20 பெண்களில் ஒருத்தி அறுபது வயதுக்குள் கற்பழிக்கப்படுகிறாள்; அல்லது அபாயகரமான பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறாள் என்கிறது அரசு அறிக்கை.
 
பிரிட்டனின் சட்ட அமைச்சகம், உள்துறை அமைச்சகம், தேசிய புள்ளிவிவர மையம் ஆகியவை இணைந்து நடத்திய ஆய்வின் இந்த அறிக்கை ஏராளமான ஏடுகளில் வெளியாகியிருக்கிறது. ‘டைம்ஸ்’ பத்திரிகை, இந்தக் கற்பழிப்புகளை ‘மர்மக் கொள்ளை நோய்’ என்றே வர்ணித்துள்ளது.
 

ஆண்டு தோறும் 5 லட்சம்

 
ஒவ்வோர் ஆண்டும் இந்தப் பாலின அத்துமீறல் சம்பவங்கள் -அதன் எல்லா வகைகளையும் சேர்த்தால்- 5 லட்சத்தை எட்டுகின்றன. காரணங்கள் என்ன?விளைவுகள் யாவை? தீர்வு என்ன? தெரிந்துகொள்ள வேண்டாமா?
 
அறிக்கையை வாசிக்கும் யாருக்கும் முதலில் ஆச்சரியம்தான் ஏற்படும். உறுதிவாய்ந்த சட்டம், தனிமனித மற்றும் பாலினச் சுதந்திரம் ஆகியவை எல்லாம் நெடுந்தூரத்திற்குத் திறந்துவிடப்பட்டிருக்கிற ஒரு புதுமை பூமியில் இந்தக் கொடுமைகளா?
 
ஆம்! பிரிட்டனின் மறுபக்கத்தைப் பார்த்தால் இக்கொடுமைகள் இயல்பானவைதான் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.
 
பாலின நட்பு, காதல், விபசாரம், ஒருபால் உறவு இவை எல்லாம் பரஸ்பர இசைவில் நடந்தால் 16 வயது முதல் அனுமதிக்கப்படும் என்கிறது பிரிட்டிஷ் சட்டம். இந்தப் பைத்தியக்கார சுதந்திரம்தான் வயது வித்தியாசமின்றியும் இசைவின்றியும் நடக்கிற பாலியல் கொடுமைகளுக்கும் அடிகோலுகின்றன.
 
பாலின இச்சையின் வாயில் திறக்கப்பட்டால், அது எல்லையைத் தாண்டும் என்பதற்கு இது அடையாளமல்லவா? இதை அனுமதிக்கும் எந்தச் சமூகமானாலும் அது எல்லா மட்டங்களிலும் சிக்கல்களைச் சந்திக்கும் என்பதற்கு இது ஆதாரமல்லவா? செயற்கைச் சட்டங்கள் -மனிதன் வகுக்கும் விதிகள்- மனித குலத்தைக் காக்கத் தவறிவிட்டன; மார்க்கத்தையும் மனத்தையும் அரங்கிலிருந்து ஒதுக்கிவிட்டன என்பதற்குச் சிறந்த சான்றல்லவா?
 
இணையதளத்தில், பிரிட்டன் உள்துறை அமைச்சகத்தின் பக்க்ததில் அநத் அறிக்கை விரிவாக வெளிவந்துள்ளது. ‘இங்கிலாந்திலும் வேல்ஸிலும் நடக்கும் பாலியல் கொடுமைகள் தொடர்பான மீள்பார்வை’ என்பது தலைப்பு. இதுதான் இவ்வகையில் வெளியான முதல் அறிக்கையும்கூட.
 

அறிக்கை விவரம்

 
பிரிட்டனில் ஆண்டுதோறும் 95 ஆயிரம் பெண்கள் கற்பழிக்கப்படுகின்றனர்; அல்லது ஆபத்தான வல்லுறவுக்கு ஆளாக்கப்படுகின்றனர்.
 
உண்மையில் அங்கு பெண்களுக்கெதிராக நடக்கும் பாலியல் கொடுமைகள் 50லட்சம் இருக்கும். வழக்கில் சிக்குவோர் எண்ணிக்கை மிகவும் குறைவு. அவற்றிலும் 87 ஆயிரம் குற்றங்கள் ஒவ்வோர் ஆண்டும் நீதிமன்றம் செல்கின்றன. ஆனால், வெறும் ஆயிரம் குற்றச் சம்பவங்களுக்கு மட்டுமே தண்டனை வழங்கப்படுகிறது.
 
பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளான பெண்களில் 90 விழுக்காட்டினருக்குக் குற்றவாளி யார் என்பது தெரியும். ஆனால், 15 விழுக்காடு பெண்களே காவல்துறைக்குத் தெரிவிக்கின்றனர். இதற்கு முக்கியக் காரணம் மானம்;குடும்பத்தைப் பாதிக்கும் என்ற பயம்.
 
காவல்துறை இந்த வழக்குகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை; ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்வதில்லை. சட்டமும் தனது இயல்பான போக்கில் இல்லை; பாதிக்கப்படும் பெண்களின் பரிதாப நிலைகளைக் கண்டுகொள்வதில்லை;உரிமைக்கு மதிப்பளிப்பதில்லை.
 
பெண்களுக்கெதிரான பாலியல் கொடுமைகளுக்குத் திரைப்படங்கள், விளம்பரங்கள்,கிளப்கள், இரவு விடுதிகள், போதைப் பொருட்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்,ஆபாச இதழ்கள், இணையதள பக்கங்கள் ஆகியவை முக்கியக் காரணங்களாகும்.
 
உளவியல் நிபுணர்கள் கூறும் காரணங்களையும் பார்ப்போம்: ‘கோபக் கற்பழிப்பு’என்று ஒன்று உண்டு. தன் கோபத்தைக் கற்பழிப்பு மூலம் ஒருவன் வெளிப்படுத்துகிறான். அதில் உடல்ரீதியான பாதிப்புகளையும் ஏற்படுத்துகிறான்.‘ஆற்றல் கற்பழிப்பு’ என்ற வகையும் உண்டு. இதில் ஈடுபடுபவன், தான் ஒரு பலசாலி என்பதைக் காட்ட விரும்புகிறான். அடுத்த இனத்தின்மீது அதிகாரம் செலுத்த விரும்புகின்றவனும் கற்பழிப்பில் ஈடுபடுகிறான்.
 
மனநோய், சமூகத்தின் அன்பு கிடைக்காமை, பெண்கள் தரம் குறைந்தவர்கள் என்ற தவறான கருத்து, நண்பர்களின் தூண்டல், நண்பர்களிடம் ஹீரோவாகக் காட்டிக்கொள்ளல், பாலியல் வன்முறைக்கு இவனே முன்பு இலக்கானது இப்படி பட்டியலிட்டுக்கொண்டு போகலாம்.
 

தீர்வு என்ன?

 
இஸ்லாமியப் பண்பாடுகளும் விதிகளுமே இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வாகும். இந்நிகழ்ச்சிகள் தினமும் இதையே நிரூபித்துக்கொண்டிருக்கின்றன.
 
கற்பொழுக்கமுள்ள நல்ல முஸ்லிம் பெண்மணி தன்னைத் தவறான எண்ணத்தோடு பார்க்கும் ஒருவனை அந்நியவனாகக் கருதி ஒதுங்கிவிடுவாளே தவிர அவனுடன் சகவாசம் வைத்துக்கொள்ளமாட்டாள்.
 
வரலாற்றில் ஒரு நிகழ்வு உண்டு: ‘பனூ நுமைர்’ குலத்தாரில் ஒரு குழுவைக் கடந்து அரபுப் பெண்மணி ஒருவர் சென்றார். அப்பெண்ணை அவர்கள் குறுகுறுவெனப் பார்க்கத் தொடங்கினர்; பார்வையைத் தாழ்த்திக் கொள்ளவில்லை.
 
அப்போது அப்பெண்மணி கூறினார்: பனூ நுமைர் குலத்தாரே! நீங்கள் இரு அறிவுரைகளில் ஒன்றைக்கூட எடுத்துக்கொள்ளவில்லையே!
 

‘‘இறைநம்பிக்கையாளர்கள் தம் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளட்டும்’’ (24:30)

 
என்ற இறைவாக்கையும் நீங்கள் மதிக்கவில்லை.
 
கவிஞனின் இக்கூற்றையும் மதிக்கவில்லை:
 

தாழ்த்திக்கொள்பார்வையைநீ ஒரு ‘நுமைர்’ (புலி)(தமீம் குலத்தின்)கஅபும் அல்லகிலாபும் (நாய்) அல்ல

 
விபசாரம் மற்றும் கற்பழிப்புக்கு இட்டுச்செல்லும் பாதைகளை இஸ்லாம் அடைத்துவிட்டது; மன இச்சைகளைத் தூண்டி ஆணையோ பெண்ணையோ சபலப்படுத்தும் வழிகளை மூடிவிட்டது; அத்தகைய செயல்களுக்குத் தடை விதித்துள்ளது.
 
அந்நியனுடன் ஒரு பெண் தனிமையில் இருப்பது, ஒருவரை ஒருவர் இச்சையுடன் நோக்குவது, ஒருவரின் மறைக்க வேண்டிய உறுப்புகளை மற்றவர் பார்ப்பது ஆகிய அனைத்துக்கும் மார்க்கம் தடை விதித்துள்ளது. அவ்வாறே, பெண் தன்னை அலங்கரித்துக்கொண்டு எல்லா இடங்களுக்கும் செல்வது, பெண்ணை ஒரு நுகர்பொருளாகக் காட்டும் ஆடை ஆபரணங்கள் அணிந்து காட்சியளிப்பது, ஆண்-பெண்ணுக்குக் கட்டுப்பாடற்ற சுதந்திரம் போன்றவற்றை இஸ்லாம் அனுமதிக்காது.
 
இந்தப் பூமியை நிர்மாணித்து, அதில் தன் பிரதிநிதியாகச் செயல்படவே மனிதனை இறைவன் படைத்தான். பூமியின்கண் வாழ்க்கைச் சக்கரம் சுழல வேண்டுமானால்,மனித இனம் இருந்தாக வேண்டும். இது தொடர்வதற்காகவே மனிதனில் சில இயற்கைத் தேவைகளையும் இயல்பான வேட்கைகளையும் அவன் அமைத்திருக்கின்றான். பாலியல் உணர்வு என்பது அத்தகைய வலுவான, ஒதுக்க இயலாத இயல்புகளில் ஒன்றாகும்.
 
பாலியல் உணர்வுகளையும் இன ஆசைகளையும் பொறுத்தமட்டில் மனிதன் மூன்று வகையான அணுகுமுறைகளைக் கொண்டிருக்கின்றான் எனலாம்.
 
1. அவிழ்த்துவிடப்பட்ட மிருகம்போல் கண்போன போக்கில் இச்சைகளைத் தீர்க்க நினைப்பான். வரையறை, சமயம், பண்பாடு, சமூகக் கட்டுப்பாடு போன்ற எந்தக் கடிவாளத்தையும் ஏற்கமாட்டான். கடவுள் மறுப்புக் கொள்கைவாதிகளின் நிலை இதுதான்.

2. இயற்கையான அந்த ஆசைகளை அடக்குகிறேன் பேர்வழி என்று சொல்லிக்கொண்டு துறவறத்தை மேற்கொள்ளல். இது இயற்கையைப் புதைத்து அதன் செயல்பாட்டைச் சாகடிப்பதாகும்.

3. இந்த ஆசைகளுக்கு வரையறை வகுத்து ஒரு கட்டுப்பாட்டுக்குள் இருந்து அனுபவிப்பது. இந்த நடுநிலைப் போக்குதான் இறைமார்க்கம் சொல்லித்தரும் வழியாகும். அது விபசாரத்திற்கு தடை விதிக்கிறது;விவாகத்தை அனுமதிக்கிறது. குறிப்பாக இஸ்லாம், பாலியல் உணர்வை ஒப்புக்கொண்டு, அதற்கு வடிகாலாகத் திருமணத்தைக் காட்டி,துறவறத்திற்குத் தடையும் விதித்துள்ளது. அதே நேரத்தில், வரம்புமீறி விபசாரம் போன்றவற்றில் ஈடுபடுவதைக் கடுமையாக எதிர்க்கிறது.

 
இதுவே நடுநாயகமான நிலையாகும். திருமண முறை என்ற ஒன்று இல்லாவிட்டால் மனித இனப்ªருக்கம் நின்றுபோய்விடும்; அதேநேரத்தில்,விபசாரத்திற்கும் தவறான பாலுறவுகளுக்கும் தடை இல்லாதிருந்தால், குடும்பக் கட்டமைப்பு சிதறிவிடும். குடும்பம் இல்லையேல் சமூக அமைப்பும் இருக்காது. முன்னேற்றமோ வளர்ச்சியோ காணப்படாது.
 
எனவே, பிரிட்டளை அச்சுறுத்திக்கொண்டிருக்கும், பெண்களுக்கெதிரான வன்முறைகளை பிரிட்டனில் மட்டுமின்றி உலகம் முழுவதிலும் தடுக்காவிட்டால் மனிதகுலத்திற்குப் பேரழிவுதான்! இஸ்லாம்தான் அதற்கு ஒரே மருந்து.

நன்றி: அல்முஜ்தமா அரபி வார இதழ்
 
1- Hidden rape epidemic is revealed by crime survey

2- The Times 11 January 2013

3- An Overview of Sexual Offending in England and Wales

4- Home office: 10 January 2013
5- http://www.homeofficegov.uk/publications/scienceresearch-statistics/researchstatistics/crime-research/mojove view=Standard&pubID=1؟/rview.146199


Posted By khanbaqavi to கான் பாகவி on 3/05/2013 01:44:00 pm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *