நபி பெருமான் வருகை
( ஈரோடு ஈ.கே.எம். தாஜ் )
கண்ணான கண்மணியே கருணைமிகு மாநபியே
காத்தருளும் இறையோனின் கனிவுமிகு அருட்கொடையே
விண்ணோர்க் கெலாம்முதலாய் பேரொளியாய் வந்துதித்து
விளக்காக சுடர்விட்டு இருள்நீக்க வந்தீரே !
மண்ணோரின் மாந்தர்க்கு உயர்வாழ்க்கை வழிகாட்ட
மடமையெலாம் ஒழித்து மனிதர்களாய் உயிர்வாழ
மாண்போடு வாழும்கலை கற்பித்து தான்நடந்து
மட்டில்லாப் பேரன்பால் வாழ்விக்க வந்தீரே !
(கண்ணான கண்மணியே)
காரிருளில் நடுக்காட்டில் ஏற்றிவைத்த தீபத்தில்
காந்தம்போல ஈர்த்துவரும் விட்டில் பூச்சிகளாய்
போராடித் தம் இடுப்புப் பட்டையை பிடித்திழுத்தும்
போதாமல் மீறிவந்து தீயில்வெந்து விழுகிறாரே !
பேரருளால் நீர்வந்த பேற்றினை என்சொல்வேன்
பேதமையால் நரகத் தீவிழுந்து அழிவதுஏன்
பாரினில் உம்மத்தில் ஒருவருமே தவறிடாமல்
புகவேண்டும் சுவனமென்ற பேராசை கொண்டீரே !
(கண்ணான கண்மணியே)
இறைவனின் படைப்பினிலே அனைவருமே சமம்தானே
இணைவைப்பார் இறைமறுப்பார் யாவருமே இதையுணர்ந்து
மறைவழங்கி நபிவழங்கி மனமிறங்கி உதவியதை
மனமுவந்து ஏற்றுக்கொண்டு மாநபிநற் சொல்நடந்தே !
மறைந்துவிடும் இல்வாழ்வும் மறுமைநிலை நிறைவாழ்வும்
முயன்றுநாம் சிந்தித்து இருவாழ்வும் சிறந்தோங்க
குறையிலா குணக்குன்றாம் கோமான் நபிபெருமான்
கூறும்படி வாழ்ந்திருந்து ஈருலக வெற்றிபெறுவோம் !
(கண்ணான கண்மணியே)
-ஈரோடு ஈ.கே.எம். தாஜ்
நன்றி : மணிச்சுடர் நாளிதழ் 16/17 ஜனவரி 2013